மின்னிதழ் மே 2024
by Neerodai Mahes · Published · Updated
நீரோடை இலக்கிய விருதுகள் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு தரும் வகையில் நூல் ஆசிரியர்கள் நூல்களை விருது (போட்டிக்கு) அனுப்பி வருகின்றனர். விரைவில் நூல்களின் எணிக்கை 100 ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது – maatha ithazh april 2024
நீரோடை கதை சொல்லி போட்டிக்கு நல்ல வரவேற்பை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு நன்றி. முதல் கட்ட போட்டி நிறைவுற்று முடிவுகள் வெளியாகி நீரோடை இலக்கிய விழாவில் தங்க நாணயம் மற்றும் கதை சொல்லி விருதுகள் வழங்கப்பட்டன.
இரண்டாம் கட்ட போட்டி நடைபெற்று வருகிறது பலர் கதைகளை அனுப்பி வருகின்றனர். கதைகளை நமது வளையொலியில் (YouTube) வெளியிட்டு வருகிறோம்.
சுய முன்னேற்ற சிந்தனைகள் - நீரோடைமகேஸ்
வாழ்வில் லட்சியம், இலக்கு, ஆசை
இருக்கலாம், ஆனால் போதைக்காக
எதையும் தேடாதே.
அது உன் வாழ்வை இரணமாக்கிவிடும்
பணிவு எதிரியையும் வெல்லும் வல்லமையுடையது.
நீ எதிரியிடம் சரணடையவில்லை
பணிவால் வெற்றி பெறுகிறாய்.
சில உறவுகளை பணிவால் மட்டுமே வெல்ல முடியும்.
விமர்சனங்களை யார் வேண்டுமானாலும் வீசலாம்.
நம் பாதையில் உறுதியாக பயணித்தால்
உலகம் ஓர் நாள் கொண்டாடும்
சமையல் மற்றும் உடல் நலம் - ஏஞ்சலின் கமலா
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி -100 கிராம்.
தேங்காய் துறுவல் -1 கப்
அவல் – மட்டை – கால்கிலோ.
நாட்டுச் சர்க்கரை – 1 கப்.
ஏலக்காய் – 3 (பொடித்தது).
பேரிச்சம் பழம் -3 நறுக்கியது
முந்திரி – 50 கிராம். (வறுத்தது).
செய்முறை
ஜவ்வரிசியை கழுவி ஒரு மணி நேரம் சிறிது நீர் விட்டு ஊற விடவும். அவலையும் சிறிது நேரம் நனைய விடவும். பிறகு ஜவ்வரிசி அவல் இரண்டையும் நீரை வடித்துவிட்டு கலக்கவும். அந்தக் கலவையுடன் மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் கலந்து சூடான நெய் சிறிதளவு சேர்த்து உருண்டை போல் பிடித்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஒரு முடி தேங்காயைத் துறுவி உருண்டையை பிரட்டி எடுக்கவும்.
ருசியான பல சத்துகள் நிறைந்த அவல் உருண்டை தயார்.
கேப்பை பலாப் பழக் கொழுக்கட்டை.
தேவையான பொருட்கள்:
கேப்பை மாவு – 2 டம்ளர்.
நல்லெண்ணெய் -2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
வெந்நீர் – 1 டம்ளர்.
பலாச்சுளை – 6
வெல்லம் – 1 டம்ளர்
தேங்காய் – 1 துறுவியது.
ஏலக்காய் – 3 பொடித்தது.
செய்முறை:
பலாச் சுளைகளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு சற்று பாகுபதம் ஆக்கிக் கொள்ளவும். அதனுடன் பலாச் சுளைகளையும் துறுவிய தேங்காயையும் ஏலக்காயையும் சேர்த்து கிளறவும். பூரணம் தயார் ஆகியவுடன். கேப்பை மாவை வெந்நீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். நெய் அல்லது ந.எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். சற்று பெரிய உருண்டைகளாக்கி உள்ளங்கையிலோ அல்லது வாழையிலையிலோ வைத்து தட்டி பூரணத்தை உள்ளே வைத்து மடித்து இட்லி தட்டில் வாழையிலை இட்டு பதினைந்து நிமடங்கள் வேகவைத்து எடுக்கவும். சூப்பரான சுவையான சத்து நிறைந்த கொழுக்கட்டை தயார்.
கவிஞர் அறிமுகம் - கௌ ஆனந்தபிரபு
கிடைத்தகாசுக்கெல்லாம்
புத்தகப்பண்டல்வாங்கி
அத்தனை அழகாய் அடுக்கி
பூரித்துப்போய்
புன்னகைக்கிறான் பாரதி.
பக்கத்துவீட்டில்
கைப்பிடிஅரிசி
கடன்கேட்டுக் கொண்டிருக்கிறாள்
செல்லம்மா.
கடுஞ்சண்டை.
பெரும்வாக்குவாதம்.
மனம்வெதும்பி
புத்தனைப்போல்
இல்லறத்திலிருந்து
விடுதலையடைய எண்ணி
அவனைப்போலவே
நடுஇரவில் வீடுதுறந்து
தெருவின் எல்லையைத்
தொட்டுவிட்டேன்.
கிட்டத்தட்ட ஏழெட்டு
பைரவர்கள் தொலைவில்
நின்றிருந்தார்கள்.
இல்லறத்தையே தொடரலாமென்று
வீடுதிரும்பிவிட்டேன்.
முதல்நாள் முழுதும்
போராடிப்பார்த்தேன்
முடியவில்லை.
இன்று போய்நாளைவா
என்றான்.
இரண்டாம்நாள்
அவ்வளவு ஆயத்தமோடு
போயும் முடியவில்லை.
இன்றுபோய் நாளைவா
என்றான்.
மூன்றாம்நாள் ஒருமுடிவோடு
போனேன்.
விடுமுறைதினம்போல.
அலட்சியமாய் இன்றுபோய் நாளைவா
என்றான்.
முடிகிறகதையல்லவென
தெரிந்துவிட்டது.
நான்காம்நாள் தொடங்கியதும்
ஐநூறைக்கையில் வைத்தேன்.
உடனேமுடிந்துவிட்டது.
தசையை அரிந்து
வைத்துக்கொண்டே
இருக்கிறான்.
புறாவின் எடைக்கு
ஈடாகவேயில்லை.
பெரியதுண்டாய்
கேட்கிறது கழுகு.
குருதிவழியவழிய
அரிந்துவைக்கையில்
பார்க்கிறான்
அதுநியாயவிலைக்
கடையின்தராசு.
மயக்கமடைந்தான் சிபி.