மின்னிதழ் ஜனவரி 2024
by Neerodai Mahes · Published · Updated
நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh december 2023
சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்
வெற்றியாளர்: அங்கயற்கண்ணி ஸ்ரீனிவாசன்
வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.
கதை சொல்லி போட்டி - இரண்டு கட்டங்களாக
சுய முன்னேற்ற சிந்தனைகள் - நீரோடைமகேஸ்
நம்மிடம் வெளிப்படாமல் உள்ள திறமையை கண்டறிதலில்
பாதி வெற்றி கிடைக்கிறது.
சந்தோசத்தை போலதான்
துக்கமும் நிரந்தரம் அல்ல.
ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத போது,
பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை தவறவிடுகிறாய்.
வெற்றியின் இரண்டாம் நிலை தான் நிராகரிப்பு,
அது ஒருபோதும் தோல்வி ஆகாது
சுந்தர பவனம் - நூல் மதிப்பீடு
ஆசிரியர் – தி.வள்ளி
ஐந்து தலைமுறைகளைக் கண்ட ஒரு மாளிகை ..இது ஒரு நூற்றாண்டின் கதை ..ஒரு நூற்றாண்டின் கால மாற்றத்தை, கலாச்சார மாற்றத்தை, கதை மாதர்களின் மனதின் மாற்றத்தை, கதைப் போக்கில் சொல்லிக் கொண்டு செல்லும் நோக்கத்தில் எழுதத் தொடங்கினேன்.
எழுதும் போது எனக்குள் இருந்த நம்பிக்கை குறைவு.. மனதில் இருப்பதை வார்த்தையில் வடிக்க முடியுமா என்ற தயக்கம்… எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இக்கதையை கொண்டு செல்ல முடியுமா என்ற யோசனை …தலைமுறை மாற்றங்களை சரியான முறையில் கடத்த முடியுமா என்ற தயக்கம் ..என பலவித தயக்கங்களுடன் எழுத ஆரம்பித்தேன்…
இக்கதையை நான் பிரதிலிபி தளத்தில் பதிவிட்ட போது …வாசகர்களின் ஏகோபித்த அதரவு என்னை நல்லபடியாக கதையை முடிக்க வைத்தது. ஊக்கப்படுத்திய வாசக நண்பர்களுக்கு என் நன்றி…கிட்டத்தட்ட 40,000 பேர் வரையில் கதையை அத்தளத்தில் படித்துள்ளனர்.
கதை மூலம் நான் சொல்லியது.. சொல்ல விரும்பியது.. ஆகியவற்றில் சில அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .
ஆரம்ப அத்தியாயங்கள் கூட்டுக் குடும்பத்தின் நன்மைகள்.. சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் இருந்த உறவுகளுக்கு இடையே உள்ள அழகான பிணைப்பு.. ஏறக்குறைய இருந்தாலும் உறவுகளை விட்டுக் கொடுக்காத தன்மை ..
முதல் தலைமுறையினர் தங்கள் பெற்றோருக்கு கொடுத்த மரியாதை.. அப்படியே அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை. தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட கருத்துக்கள் அதிகம் இல்லாமல் . ஒரே தலைமையின் கீழ் மொத்த குடும்பமும் இயங்கியது. ஆகியவற்றை என்னால் இயன்ற அளவு விளக்கியுள்ளேன்.
விவசாயத்தை நம்பி இருந்த, பெரிய பண்ணை.. ஜமீன்… குடும்பங்கள. மெல்ல மெல்ல காலப்போக்கில் அதிலிருந்து வெளியே வந்து, அடுத்த தலைமுறைகள் படித்து வேலை பார்க்க என வெளியிடங்களுக்கு இடம் பெயர்ந்த கால மாற்றம் ..
பெயரை மட்டுமே அந்தஸ்தாய் தாங்கி நிற்கும் இத்தகைய பழைய ஜமீன் மாளிகைகளை இன்றும் பார்க்கிறோம். இத்தகையதொரு மாளிகையின் உட்பகுந்து அதன் வரலாற்றை பார்க்குங்கால் இத்தகைய நிகழ்வுகள் அந்த மாளிகையிலும் நடந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
முத்தோர் சொல்லுக்கு முழுவதும் கட்டுப்பட்ட முதல் தலைமுறை ..காலப்போக்கில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஆன உறவு நட்பு முறையில் மாற தங்கள் கருத்துகளை சுதந்திரமாக முன்வைக்கும் இளைய தலைமுறை …அவர்கள் கருத்துகளை உணர்வுகளை ஏற்று அதற்கேற்ப மாறும் மூத்த தலைமுறை…கட்டுப்பாடுகளை விரும்பாத மூன்றாம் தலைமுறை.. .என உறவுகளின் மன மாறுதல்களை இக்கதையின் வழிநெடுக்க காணலாம்.
அக்கால மனிதர்களின் உழைப்பை அவர்கள் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்த மின் சாதனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள்,அவை உட்பகுத்த காலகட்டங்களை என் அறிவுக்கு தெரிந்த வகையில் தந்திருக்கிறேன்.
இக்கதையால் நான் உணர்ந்த உணர்த்திய சில விஷயங்கள் ……
## அந்தக் காலத்தில் கூட்டு குடும்பத்தில் பெரியவர்கள் எவ்வாறு ஒரு அரணாக ஒரு தலைமுறைக்கு இருந்திருக்கிறார்கள் அறிவுரை சொல்வதாகட்டும் அரவணைத்துச் செல்வதாகட்டும் ..
## அந்தக் காலத்து ஆங்கிலம் கலக்காத தமிழ் மொழி எவ்வாறு காலப்போக்கில் சிதைவடைந்து இப்போது நாம் பேசும் ஆங்கில தமிழ்ச் சொற்களில் நிற்கிறது ..வழக்கத்தில் இருந்த பல தூய தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய்விட்டது ..பலவடைகள் பல சொல்வாரின்றி போனது.
## அக்காலத்தில் பணியாட்களின் பாசம் தங்கள் முதலாளி குடும்பத்து மேல் வைத்திருந்த வாஞ்சை …அதே அக்கறை முதலாளிகளுக்கும் தங்கள் பணியாளர்கள் இடத்தில் அவர்கள் குடும்பத்தின் மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
## முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது தலைமுறை இடைவெளி ..கருத்து வேறுபாடுகள் ..கருத்து மோதல்கள் ..
முக்கியமாக முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் இருக்கும் இடைவெளி அதை பாலமாக இணைக்கும் இரண்டாம் தலைமுறை …அதற்காக அவர்கள் இரு தலைமுறையிடமும் நடுவே போராடும் தருணங்கள்
## அந்தக் காலத்து சடங்கு சம்பிரதாயங்கள் இக்கால தலைமுறை அறியாதது எனவே அவற்றை சற்று விவரமாகவே… என்னுடைய ஆரம்ப அத்தியாயங்களில் கொடுத்திருக்கிறேன்.
## இக்கதை எழுதும் போது எனக்கு தானே வியந்த சில விஷயங்கள்.. அக்காலத்தில் குழந்தைகள் உன் பிள்ளை என் பிள்ளை என்று இல்லாமல் வீட்டில் எல்லோருடைய அன்பையும் பெற்று ..தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி ,அத்தை, மாமா, பெரியப்பா ,பெரியம்மா, என உறவுகளுடன் வளர்ந்த மிக அழகான ஆரோக்கியமான காலகட்டம் ..
## விருந்தோம்பல் ..ஆசா பாசமான அணுகுமுறை ..ஒரு கஷ்டம் வரும்போது நான் இருக்கிறேன் என்று சொல்லும் அந்த அரவணைப்பு ..இதெல்லாம் இக்கதையின் வாயிலாக நாம் அறியும் போது அந்த தலைமுறையின் சில நல்ல விஷயங்களை நாம் இழந்து விட்டோமோ என்று தோன்றுகிறது ..
## ஒரு நல்ல விஷயம் இந்த தலைமுறையில் அந்த உறவுகள் தொடர்பற்று துண்டித்துப் போய் விடாமல் நவீன பேஸ்புக் வாட்ஸ் அப் ..குழுக்களின் மூலம் குடும்ப ஒற்றுமை வளர்வது.
கசின்ஸ் மீட் ( Cousin’s meet) எனப்படும் உறவுமுறைகள் சந்தித்துக் கொள்ளும் ஏற்பாடும் மிகவும் நாம் கேள்விப்படும் நல்ல விஷயமாக இருக்கிறது .அது கண்டிப்பாக தொடர வேண்டும் என்பது இளைய தலைமுறையிடம் நான் வைக்கும் தாழ்மையான கோரிக்கை.
இது ஐந்து தலைமுறைகளை கூறும் கதை என்பதால்.மிகவும் தயக்கத்துடன் எழுத ஆரம்பித்தேன். ஆனால் எந்தவித எதிர்மறை கருத்தும் வராததும் ..மேலும் ஊக்கம் அளிக்கும் விமர்சனங்களாலும் தூண்டப்பட்டு கதைக்குள் என்னை நானே ஐக்கிய படுத்திக் கொள்ள, அத்தியாயங்கள் நீண்டு கொண்டே போயின..படிக்கும் வாசகர் எண்ணிக்கை கூடக் கூட எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. ஊக்குவித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்…
சிறுகதை தொகுப்பு - பெ.சிவக்குமார்
அவள் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அவளுக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. அளவு கடந்த மகிழ்ச்சியில் அவள் இருந்தாள். அவை எல்லாமே அவளுக்கு ஒரு சிற்றின்பம் தான். ஏனென்றால் அந்த ஊர் வழக்கம் அது! அங்கே எல்லாம் மயான அமைதியாக இருந்தது.
எல்லோரும் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் சோகமாகவே அமர்ந்திருந்தாள். பத்து மாதம் பெற்றெடுத்த வலி அவளுக்கு மட்டும் தானே தெரியும்! கையில் கள்ளிப்பால் உடன் வீட்டிற்கு வந்தாள் பூவாயி பாட்டி.
குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு குழந்தைக்கு தாலாட்டு பாடினாள்.
“ஆராரோ நீ கேட்க ஆயுசு உனக்கு இல்லையடி!
விதை நெல்ல நான் அரிக்க விதி வந்து சேர்ந்ததடி!
தாய்ப்பாலு நீ குடிக்க தலையெழுத்து இல்லையடி!
கள்ளிப்பால நீ குடிச்சு கண்ணுறங்கு நல்லபடி!
அடுத்த ஒரு ஜென்மத்துல ஆம்பளையா நீ பொறந்தா!
பூமியில இடம் கிடைக்கும் போய் வாடி அன்னக்கிளி……
பூமியில இடம் கிடைக்கும் போய் வாடி அன்னக்கிளி…..
போய் வாடி அன்னக்கிளி……..”
என்று அந்த கள்ளிப்பாலை குழந்தைக்கு ஊட்டினாள் அந்த பாட்டி!
குழந்தை அந்த கள்ளிப்பாலை குடிக்க முடியாமல் வாயில் கொப்பளித்து வெளியே தள்ளியது. ஒரு வழியாக சங்கில் அந்த குழந்தைக்கு பாலை கொடுத்து விட்டாள் அந்த பாட்டி. அழுது கொண்டிருந்த அந்த குழந்தையின் குரல் மெல்ல தாழ்ந்தது……
உயிர் பிரிந்தது…….
கருப்பாயி பாட்டியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது…..
அவள் முகம் வாடி கண்ணீர் குளங்கள் ஆகிப் போனது. அழுது புரண்டாலும் ஊர் வழக்கம் என்ன செய்ய முடியும்?
பெண் குழந்தை பிறந்தால் காதுகுத்து, சடங்கு ,கல்யாணம் போன்ற பல நிகழ்வுகளுக்கு செலவுகள் ஏற்படும் என்று சிறுவயதிலேயே கொல்லும் வழக்கம் அந்த ஊரில் இருந்தது.
அந்த குழந்தைக்கு தொட்டில் கட்டி சுடுகாட்டிற்கு சுமந்து சென்றனர்.
காலங்கள் கடந்தன……
சில நாட்களுக்கு பிறகு அந்தப் பெண்ணுக்கு ஒரு பட்டம் கொடுத்தார்கள் “மலடி” என்று………
பெ.சிவக்குமார் (கல்லூரி மாணவர்), விருதுநகர்
அவள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது. அவன் திருப்பூரில் இருந்து விரைவாக அருப்புக்கோட்டை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தான். ஒரே பதட்டம்,பயம் அவனுடைய மனதில் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக வீட்டை வந்து அடைந்தான். மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது……
“வாங்க தம்பி சீக்கிரம் ! அவ உங்கள பாக்கணும்னு சொல்லுறா”
“சரிங்க அத்தே! இன்னும் கொஞ்ச நேரத்துல ஆஸ்பத்திரிக்கு வந்துடுவேன். அவளை பாத்துக்கோங்க!”
ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு விரைவாக ஆஸ்பத்திரிக்கு வந்தடைந்தான்.லட்சுமி தேவியை பார்த்தவுடன் அவனுடைய கண்கள் கண்ணீர் குளங்கள் ஆகிப்போயின.
“தைரியமா இரு தேவி! குலசாமியை நல்லா கும்பிட்டுக்கோ”
“சரிங்க மாமா “
என்று அழுத வண்ணம் கூறினாள். அவள் கண்ணீரை துடைத்து அவளை சமாதானப்படுத்தினான். அறைக்குள் நர்ஸ் வந்து அவனிடம் கையெழுத்து வாங்கினார்.
“எல்லாரும் கொஞ்சம் வெளியே இருங்க டாக்டர் இப்ப வந்துருவாரு”
சிறிது நேரத்திற்குப் பிறகு டாக்டர் பிரசவ அறைக்குள் சென்றார். வலி தாங்க முடியாமல் அவள் கத்திக்கொண்டே இருந்தாள். மனைவி வலியால் துடிக்க அவன் மனது துடித்துக் கொண்டிருந்தது. கையில் வர்ஷனை வைத்துக் கொண்டு இருக்கையில் அவனும் அழத்தொடங்கி விட்டான். அவன் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவன். அவனுக்கு ஒரு வயதாகிறது.
வயிற்று பசியால் அழுது கொண்டிருந்தான். அத்தை அவனுக்கு கடையில் பால் வாங்கி கொடுத்தார். அதை குடித்த பிறகு அவன் அமைதியாக உறங்கி விட்டான். அவளின் குரல் வலியால் ஒலித்துக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு மனைவியின் குரல் மெதுவாக குறைந்து குழந்தையின் குரல் மெல்ல ஓங்கியது……
அளவு கடந்த மகிழ்ச்சி !ஆனந்த கண்ணீருடன் அனைவரும் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. கண்களை மூடி கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தான் .
இரவு இரண்டு மணி அனைவரும் உள்ளே சென்றார்கள்.செவிலியர் வந்தார்.
“சுகப்பிரவேசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது “
என்று கூறிவிட்டு சென்றார்.
வாடிப்போய் இருந்த அவனது முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. பெண் குழந்தை என்றால் அப்பாவுக்கு சொல்லவா வேண்டும்? அவளுக்கும் ஆனந்த கண்ணீர் ஆறாய்ப் பாய்ந்தது.
“கண்ணு ரெண்டும் அப்பனை போலவே இருக்கு”
“வாய் லட்சுமி போல இருக்கு”
என்று பார்க்க வந்த ஒருவருக்கொருவர் பெண் பிள்ளையை வர்ணித்துக் கொண்டிருந்தார்கள்.
பொழுது விடிந்தது. அனைவருக்கும் இந்த இனிய செய்தியை போனில் சொல்லி மகிழ்ந்தான். அப்பொழுது அவனுடைய முனியக்கா அம்மாச்சி ஞாபகம் வந்தது.
“சுடுகாட்டில் கொள்ளி போட ஒரு ஆம்பள புள்ளையும்! மந்தையில கொள்ளி போட ஒரு பொம்பள புள்ளையும் !இருக்கணும் டா பேராண்டி”
என்ற அம்மாச்சியின் சொலவடை
போர் விஜயனின் மனதில் வந்து சென்றது……….
சொல்ல முடியாத அளவிற்கு சந்தோசம் பெண் குழந்தை பிறந்தத அந்த நாளில்…..
பெ.சிவக்குமார் (கல்லூரி மாணவர்), விருதுநகர்