நீரோடை கவி மன்றம்
by Neerodai Mahes · Published · Updated
மிகவும் சிறப்பாக நடைபெற்ற நீரோடை கவி மன்றத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகள்
மனதை திறக்கும் சாவி!
எழுத்து பிழைகளோடு
பரிமாறிய கடிதங்கள்
உரசி சென்றன பிழையில்லா
நம் மனங்களை
உயிரில்லா ஒருரூபாய்
நாணயங்களில் உயிர்
வாழ்ந்தன தொலைபேசியின்
நம் உரையாடல்கள்
இதயங்களை ஒரேஅலைவரிசையில் துடிக்க வைத்த வானொலி பாடல்களில்
விடிந்தன நம் இரவுகள்
தெருகூத்து நாடகங்களை
எதிரெதிர் வரிசைலமர்ந்து
வண்ண வண்ண பஞ்சுமிட்டாய்களை
ருசித்தபடியே அரங்கேறின
நம் காதல் கூத்துகள்
பள்ளத்து கருப்பண்ணார்
கோவிலின் மணி சத்தமும்
பதிவு செய்தன
நம் வேண்டுதல்களை
மிதிவண்டி பயணங்களில்
சிறகடித்து செல்லும்
பறவைகளாய் மாறியதை
ரசித்தன நம் வானங்கள்
பிறந்த நாளிற்கு பரிசளித்த
வாழ்த்து அட்டைகளிலும்
மனோரஞ்சிதப் பூக்களிலும்
ஒளிந்துள்ளன நம் பிரியங்கள்
காத்திருப்புகளால் மனதை
திறக்கும் சாவியானது
நம்முடைய
அக்கால காதலே!
பேரன்புடன்,
ல.ச.பா
பெங்களூரு
மனதைத் திறக்கும் சாவி (இக்காலக் காதல்)!!
அகத்தில் மலரும் காதலுக்கு,
முகவரியை தேடித்தருவதோ விழிகள் தான்!!
நித்தமும் விழிகள் மோதி,
புத்தம் புது அத்தியாயம் தேடிட,
கணக்கு வழக்கின்றி கண்கள் உரையாட,
காதல் அங்கே கால்பதிக்க துவங்குகிறது !!
தவறுதலாய் தீண்டிய விரல் நுனியும்
தன் பங்கிற்கு நாணத்துடன் குனிந்திட,
அவள் நாணத்தை அவனும்,
அவன் மென்மையை அவளும்,
அள்ளி அள்ளிப் பூசிட,
கண்ணியம் அங்கே தலைநிமிர்ந்து நிற்கிறது !!
அவள் சிந்தாத கண்ணீரின் ஆழத்தை,
அவன் சிந்தனையும் அளந்து ஆற்றிட,
அன்பென்னும் சாவி
அவள் மனதை மெல்லத் திறந்தது!!
சந்தர்ப்பங்கள் ஏதுமின்றி,
சந்திப்புக்கு பாலமின்றி,
உள்ளுக்குள் ஊடுருவிய
அக்காலக் காதல் அழகுதான்!!
எங்கிருந்தாலும் வாழ்க என
மனதை புதைத்துவிட்டு,
விட்டுக்கொடுத்து வாழ்ந்த
அக்காலக்காதல் மாசற்றதுதான்!!
ஆனால்,
சந்திப்புகளின் எழுத்துக்களைக் கூட்டி,
புரிதல் மொழியை சேர்த்து காதலை மெருகேற்றிட,
ஒற்றை நொடியில் மலர்ந்த காதலுக்கு
ஓராயிரம் கணங்கள் தேவைப்படுகிறது..
சந்தர்ப்பங்கள் தன் வசமாகிய பின்னும்,
சந்திப்புகள் நித்தம் உறவாடிய பின்னும்,
கண்ணியம் என்னும் கண்கொண்டு,
காதல் பார்வை வீசி,
மனதை திறப்பது இக்காலக்காதல்!!
சூழ்நிலைகள் எல்லாம் திசைமாற,
சந்தர்ப்பங்கள் எல்லாம் சதிதீட்ட,
பிரிவின் வாயில் வாவென அழைத்தபின்னும்,
முயற்சியின் விளிம்பு வரைசென்று,
மனதோடு நிலைத்த காதலை,
திருமணத்தில் முடிக்க துடிப்பது இக்காலக்காதல்!!
காதலுக்குள் கொஞ்சம் கடமையை தேடுவது
அக்காலக்காதல்!
காதலுக்குள் மிஞ்சும் நட்பை தேடுவதோ
இக்காலக்காதல்!!
பல ஆண்டுகளாய் கட்டுண்ட
ஆதிக்கத்தை,
உள்ளுக்குள் தகர்த்தெறிவது
இக்காலக்காதல்!
காதலெனும் ஆழ்கடலில்,
கள்ளச்சாவி ஏதுமின்றி,
நிர்பந்தங்கள் எதுவுமின்றி,
நட்பின் துணைக்கொண்டு,
நிரந்தரமாய் மனதை திறக்கும் சாவி,
இக்காலக் காதலே!!
மனதை திறக்கும் சாவி
இக்கால காதல்
பலருக்கு கண்டதும் காதல்
மனங்கள் கரைந்து போதல்
சிலருக்கு காணாமல் மறைதல்
பல நேரங்களில் வெல்லும்
சில நேரங்களில் கொல்லும்
வெளியே சொல்லாது தவிக்கும்
இணைய இணைப்பு சேர்க்கும்
அந்த காலத்தில் பயம்
இந்த காலத்தில் லயம்
காதல் உண்மையா? வேண்டாம் ஐயம்
மனதில் தோன்றும் காயம்
மன கடலில் புயல் மையம்
பள்ளி கல்லூரியில் குறும்பு
கடற்கரை மணலில் அரும்பு
இருவரும் மனதார நம்பு
திருமணம் செய்ய விரும்பு
பாசத்தை காட்டி பழக கரும்பு
உறவுகள் எதிர்த்தாலும் உறுதி
நட்புகள் ஆதரவு அறுதி
அன்புடன் வாழ்க்கை இறுதி
விட்டு கொடுத்து வாழும் தந்திரம்
பகிர்ந்து கொள்ள திறக்கும் மந்திரம்
இக்கால காதல் வெற்றி சரித்திரம்
இந்த சாவி வெற்றி பெறும் நிச்சயம்
எஸ் வீ ராகவன் சென்னை
மனதைத் திறக்கும் சாவி(அக்காலக் காதல் )
அரும்பும் மீசையில் அவனும்
குறும்பு பார்வையில் அவளும்
வளையவந்த அக்காலக் காதலே
கவிதையாகி விட அந்த காதலை
பறைசாற்ற பிறந்தது ஓர் தாஜ்மஹால்
ஆன்ராய்டு போன்கள் இல்லாத காலமது
அரசமர பிள்ளையாரும் , ஆற்றங்கரையும்
அவர்களின் காதலுக்கு நீர் வார்த்தது
அன்றில் பூத்த மலரின் பொலிவு போல
மலரும் அக்கால காதலின்
அழகிய தருணங்கள் ரசனையின் உச்சம்
பாவாடைதாவணியில் வளையவரும் தேவதைகளின்
ஓரவிழி பார்வைக்காக தவமிருக்கும்
மன்மதன்களின் காதல் பார்வைகளில்
காமம் கசிந்ததில்லை
மழைக்கால காளான் போல
சிலநாளில் உதிர்ந்துவிடும் சிற்றின்ப
காதல் அல்ல அக்காலக் காதல்
நிலவின் வருகைக்காக
பகலில் தவமிருந்து
இரவில் இதழ்விரிக்கும்
ஆம்பல் மலர்போல அக்காலக் காதல்கள்
தன் இணையை தவிர
வேறெந்த துணையும் கண்டதில்லை
காதலின் முறிவில் கூட
வன்மத்தைக்காட்டாது
பெண்மையின் நிலையில் நின்று
நியாயம் கண்டது
குடும்பத்தின் அழுத்தத்தால் உடைபட்ட
அக்காலக் காதல் ஒருபோதும்
அம்பல படுத்த நினைத்ததில்லை
அவர்களின் இரகசிய ஊடல்களை
விஞ்ஞானம் கண்டிராத அக்காலக் காதலுக்கு
பெண் நானத்தின் அர்த்தங்கள்
அத்தனையும் அத்துபடி
அவர்களின் ஓரவிழி பார்வையும்
ரகசிய புன்னகையும்
ஆயிரம் கதைசொல்லும்
இல்லறத்தில் இணையாது
பிரிவு கண்ட அக்காலக் காதல் கூட
மார்க்கண்டேயனின் மறுவடிவமாய்
மனதை திறந்திடும் சாவியாய்
என்றும் நிறைந்திடும் இதயத்தின் ஓரத்தில்
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
தென்காசி
மனத்தைத் திறக்கும் சாவி – இக்காலக் காதல்
காணும் இடமெல்லாம்
காதல் கமழ்ந்திருக்க
கண்டு எடுத்துவந்து
கவமன்றத் தலைப்பாக்கியதில்
கற்கண்டாய் இனிக்கிறதே
காலம் கடந்துநிற்கும்
காதலின் பரிணாமத்தை
காலசக்கரத்துக்குள் கட்டம்கட்டி
மல்லன்மா வேழத்தின் நிகர்
மனத்தைத் திறக்க வல்ல
மகத்தானச் சாவி எதுவென்று
மன்றத்தில் வழக்கும் தொடுத்து – எங்களை
மல்லுக்கட்ட வைத்து மகிழ்ச்சி கொள்ளும்
மகிமையின் மேன்மையர்க்கெல்லாம்
முத்தமிழின் சாறெடுத்து
முதல் வணக்கம் தருகின்றேன் – சபையின்
முன்னவர்களுக்கும், என்னவர்களுக்கும் – என்
முகமறியச் செய்த நீரோடையின் பெருமக்களுக்கும் வணக்கம்.
சங்கத்துக் காதலுக்கு
சற்றும் சளைத்ததல்ல – எங்களின்
சமகாலக் காதலென்று – எங்கள்
சார்பு வாத்தைச் சங்கெடுத்து முழங்கிடத்தான்
சபையினிலே வந்துநின்றேன்.
மனத்தைத் திறக்கும் சாவி – அது
இக்காலக் காதலே!
இக்காலக் காதலே!
காகிதத்தில் எழுதாமல்
கம்பநாடன் எழுதியதால்
கற்பனையின் காதலை
காவியக் காதல் என்று கொண்டாடி
கல்வெட்டில் செதுக்கிடும்
கண்ணியம் கொண்டது
கற்காலக் காதலே என்று
கற்பூரம் அடிக்க வந்தவர்களே
கொஞ்சம் கற்பனையும் களைத்து
கண்ணுறக்கம் தவிர்த்து
கனவுலகம் விட்டு வாருங்கள் – இன்றைய
அரும்புகளிடம் அரும்பிடும் காதலில்
ஆயிரமாயிரம் குறைகளைச் சொல்லுகின்றீர்!
அப்பனும், பாட்டனும் காதலில்
அன்றுஒருநாள் செய்யாத தவறையா
அப்பட்டமாய் நாங்களும்
அவனியிலே செய்துவிட்டோம்?
கற்புக்கரசியாய் கட்டியமனைவி
கண்ணகி காத்திருக்க
கரகாட்டக்காரித் தேடி
காவலனாம் கோவலனும் சென்றதை
கண்டுவந்த கதையும் அக்கால காதலில் உண்டே
இயற்பியலில் வேகம் தொட்டு
இயந்திரத்திற்கும் இறக்கை முளைக்கும்
இக்காலக் காதலை
இதிகாச நாயகர்களின் காதலோடு
இணைத்து மொழிந்திட எங்கனம் இயலும்?
முடிகளும், முனிகளும் வாழ்ந்தநாளில்
முறைதவறிச் சென்றிடத்தான்
முறைகளும் குறைவு, முனைந்தவரும் குறைவு
மூளையை மழுங்கடித்த வழிகளும் குறைவு
ஆனால் இன்றோ
மனத்தை மாசுபடுத்த
மலையளவு வழிகளும் உண்டு
மயக்கத்தில் கிறங்கடிக்க
மாற்றுப்பாதைகளும் உண்டு
இத்தனைக்கும் இடையில் – ஆயிரமாயிரம்
இடர்களுக்கும் இடையில்
காதல் ரசத்தை
கடுகளவும் மாறாமல்
கடத்தி வந்த – எம்
காளையரையும், கன்னியரையும்
கலங்கம் சொல்லிடத்தான்
கல்நெஞ்சமதைக் கடன்வாங்கி வந்தீரோ?
“வாராயோ வெண்ணிலாவே
“கேளாயோ எங்கள் கதையை” என்றவருக்கு எல்லாம்
நிலவிலும் ஆக்சிஜன் நிரப்பி
நீளும் எங்கள் நிதர்சனக் காதலை கண்டால்
நிஜமாவே வயிறெரியத் தானே செய்யும்
அறிவியல் வளர்ச்சியால்
அணுசிதைந்து போனதாம்
அன்றைய காலத்து காதல் மாண்பு?
அடுக்கடுக்காய் அளந்து கொட்டியதில்
அங்குலமும் உண்மை இல்லை நடுவரே – எங்கும்
துரிதம் துரத்தும்
துர்ப்பாக்கிய காலம் இதில் வாழ்கிறோம்
தூரதேசத்து காதலிக்கு – புறாவை
தூது அனுப்பினால்
அப்புறாவும் துப்பாதோ
அனுப்புபவரின் முகத்தில்? சொல்லுங்கள்
இங்கொன்றும், அங்கொன்றுமாய்
இருக்கின்ற குறைகள்
இக்காலக் காதலில் மட்டுமல்ல
இதிகாசக் காதலிலும் உண்டெப்பேன்
இல்லையென்று எவரேனும் மறுத்துரைத்தால் – குறைந்து
இருநூறு சான்றுப் பகிர்வேன்.
மகரிஷிகளும் அக்காலத்தில்
மங்கைமீதும், மாற்றான் மனைவி மீதும்
மயக்கம் கொள்ளவில்லை என்று
மறுதலிக்கவும் முடியுமோ?
இக்காலக் காதலும்
இல்லற வாழ்வியலை
இருபத்தைந்து ஆண்டுகள்
இமையின்கண் கடந்திருக்க
இதிலென்ன குறைகண்டீர்
இயம்புங்கள் நானும் என்கிறேன்.
இதிகாசம் தெரிந்தாலும் – இன்னமும்
இளமையின் துடிப்போடு
இயங்கிடும் எங்களின் நடுநிலை மாறா நடுவரும்
இதயத்தையும், மனத்தையும் திறக்கும் சாவி
இக்காலக் காதலே என்று
இனிதாய், இறுதியாய் தீர்ப்பளிக்க
இருகரம் தூக்கி வணங்குகின்றேன்.
கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகள்
அப்பாவின் நிறம்
சில
அப்பாக்களால்
செய்யப்பட்ட
ஒரு அப்பாதான்
நான்
எனக்குள் பல
அப்பாக்கள்
எனக்குள் உள்ள அப்பாக்களுக்கு
என்
அப்பாவின் DNA
சுழலக்கூடும்
என் மகள்களின் முன்னால்
கெட்ட அப்பாவை
காட்டிக் கொடுப்பதேயில்லை
ஈகை குணமும் இரக்க மனமும்
உள்ள அப்பா ஒருத்தர்
ஓயாது உழைத்துக் கொண்டு இருந்தார்
என்று என்றைக்கு
என் மகள்களுக்கு
காட்டுவது?
என்
மனைவியின்
அப்பாவுக்குள்
இருக்கும்
அப்பாக்களுக்கும்
எனக்குள் இருக்கும்
அப்பாக்களுக்கும்
ஒரே இயல்புதான்
எல்லா
அப்பாவும் இப்படியா?
நான் மட்டும்
தப்புடியா ?
நாளை
அப்பாவாகப்
போகும்
என் பையனுக்கு
இப்பவே
தெரியும்
தன் அப்பா
யாரென்று?
அப்பா என
எழுதினாலும்
இறந்தாலும்
நடுவில்
ஒரு
கரும்புள்ளி உண்டு
அது
அப்பாக்களுக்கும்
தெரியும்.
எம். ரவி, கோவை.
கவிதை கடலில்
தத்தளித்த
கண்ணதாசனின்
கை குழந்தைகளை
கப்பலாய் வந்து
கரை சேர்த்தது
கவி மன்றம்.
முதன்முதலாய்
பங்கேற்றதால்
மனமே என்னை மறந்துவிடு
என்ற தலைப்பில்
நான் வாசித்த கவிதையில் பல
தடுமாற்றம்.
தடுமாற்றத்திற்கு வருந்துகிறேன்.நிகழ்ச்சி மிக அருமை .
பொறுப்புடனும் பொறுமையுடனும்
தொகுந்து வழங்கியமை மிகசிறப்பு.தங்களின் கவிப்பணி தொடர வாழ்த்துக்கள்.
செ.ம.சுபாஷினி
கடவுள் இருக்கானா?
தொட்டிலில்
சிசுவும்
கட்டிலில்
முதுமையும்
பார்வையில்
பேசிக்கொண்டனர்
கடவுள் இருக்கிறானா என?
அனாதை இல்லத்தில்.
திருமதி சாந்தி சரவணன்
இயற்கையின் சீரழிவு..
உடம்பின் நரம்பில் பாயும் குருதியோட்டம்
தடைபட்டால் வருகுதே
நெஞ்சுவலி..அதுபோல
மேகம் வெடித்து மண்ணுக்குள் பாய்ந்திட வரும் நீர்தனை தடுக்குதே நெகிழி
ஆகையால் எனக்குள்ளும் வருதே உயிர் வலி
அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக இல்லை நீராதாரம்
இந்நீரே உயிரினங்களின் உயிராதாரம்
மண்ணிலே நெகிழியை விதைத்து மண்ணை மலடாக்கும் மனிதா எப்படி வளரும் உன் வம்சம்
பேருந்து நிலையம்தோறும் விதைக்கபட்டததை போல நெகிழி நீர்க்குடுவைகள்
மனிதனின் அலட்சியமே
இயற்கையின் சீரழிவு
போராட நினைத்து சாலையில் இறங்கினேன்
சாலையோறம்தோறும் உடைக்கபட்ட சாராயக்குடுவைகளும் சிதறல்களும்
மின் விளக்கின் மிச்சங்களும் கொட்டிக்கிடக்குது
கூடவே தலைக்கவசமும் உருண்டோடுது
பயத்தால் என் விழிகள் மிரண்டாடுது..
மண்ணில் மட்காதததை வைத்துவிட்டு விண்ணில் ஆராய்ச்சி அவசியம்தானா
வாகனத்துப்புகையோ வான் நோக்கிச்செல்லுது
காற்றும் மாசாகி ஒசோனும் ஒட்டையானதே
நுட்பங்கள் கொண்டு நுண்ணறிவு வந்தாலும்
இயற்கையின் சீரழிவு
மனிதனால் மட்டுமே..
அதனால்தான் என்னவோ அந்த இயற்கையும் சீற்றம் கொள்கிறது
மாதப்பூர்..விசு, கோவை..
மகளின் ஏக்கம்
என் சிறு வயதில்
தலைவாரி பூச்சூடி பள்ளிக்கு செல்ல ஆசை தான் !!!!
பட்டு பாவாடை உடுத்தவும் ஆசை தான்!!!
பருவ வயதில் தாவணி உடுத்தி கல்லூரி செல்லவும் ஆசை தான்!!!!
சக தோழியர்களின் தோளில் சாயவும் ஆசை தான்!!!
பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும் ஆசை தான்!!!!_இவையனைத்தும் நடந்திருக்கும் அம்மா
என்னை நீ கருவில்
கலைக்காமல் இருந்திருந்தால்….
பி.ஆனந்தி, திருப்பூர்