மின்னிதழ் மார்ச் 2023
by Neerodai Mahes · Published · Updated
நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh march 2023
சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்
வெற்றியாளர்: சே.சண்முகவேல்
வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.
கவிதை தொகுப்பு
சிறுவாணி சிட்டு என்ற புனைப்பெயரில் கவிதை எழுதி வரும் அ.செந்தில்குமார் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம்.
வண்ண வண்ண மலர்களில்
உன் முகம் காண தினமும்
வண்ணத்துப்பூச்சியாய்
பறந்துகொண்டிருக்கிறேன்…!
தென்றல் காற்றாய் என்னை
தேடி வருவாய் என
முற்றத்தில் காத்திருக்கிறேன்..!
அலைகளின் ஆர்ப்பரிப்பில்
உன் அரவணைப்பை ஆசையுடன்
எதிர்பார்த்து கடல் மணலில்
காத்திருக்கிறேன்…!
தாரகைகளின் மினுமினுப்பில்
உன் காந்த கண்களை காண
தவியாய் தவித்திருக்கிறேன்…!
அதோ…
தொலைதூர வானவில்லாக நீ..
உன்னை தொட்டு விட
முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன்…!
– சிறுவாணி சிட்டு
பார்த்துக்கொண்டு இருப்பதில்
இல்லை ஆனந்தம்…
பிரிந்து பின் பார்ப்பதில்
இருக்கிறது ஆனந்தம்…!
பத்திரமாக இருப்பதில்
இல்லை ஆனந்தம்…
பாதித்து பின் மீள்வதில்
உள்ளது ஆனந்தம்…!
கேட்டவுடன் கிடைப்பதில்
இல்லை ஆனந்தம்…
கேட்டது மறந்து போன பின்
கிடைப்பதில்
இருக்கிறது ஆனந்தம்…!
தொடர்ந்த வெற்றியில்
இல்லை ஆனந்தம்…
தோல்விக்கு பின் கிடைக்கும்
வெற்றியில் தான் ஆனந்தம்…!
தொடர்ந்த மழையில்
இல்லை ஆனந்தம்…
வறட்சிக்கு பின் கிடைக்கும்
மழையில் தான் ஆனந்தம்…!
நிறைகளை பார்ப்பதில்
இல்லை ஆனந்தம்…
குறைகளை பாராமல்
செல்வதே ஆனந்தம்…!
– சிறுவாணி சிட்டு
ஆயிரம் வண்ண மலர்களாக
மனதை மயக்கும் மழலைகள்..!
ஒன்று ஓட, மற்றொன்று சிரிக்க,
பிறிதொன்று அழுது ஆர்ப்பரிக்க..
முத்தமிட்டு கன்னத்தை கிள்ளிய
மழலை அவள் மனதை
கொள்ளை கொண்டது..
ஓடி, ஓடி அமுதூட்டிய அவளுக்கு
சிறு தளிர்களின் சிரிப்பலைகள்
செவித்தேனாய் இனித்தது…!
சிறு சலனத்தால் விழித்து எழ,
கண்டதெல்லாம் கனவு
எனும் போது மனம் சோர்ந்து
உடல் துவண்டது…
வயிற்றில் வெறுமை உணர்வு
வேதனையாகி வலியானது…
அவள் மணவாழ்வு மணக்காமல்
இருப்பதற்கு கருவறை காரணமாம்..
ஆம்…அவளின் கருவறைக்கு
உயிரில்லையென மாமியார்
மண்ணை அள்ளி வீசுகிறாள்…
மணம் புரிந்தவனோ மௌனிக்கிறான்…
என் கருவறையை உயிர்ப்பிக்க
ஏதேனும் மந்திரம் உண்டா
என உறக்கத்தில் உளறுகிறது அந்த ஏதுமறியா
பெண்ணின் உதடுகள்….!
– சிறுவாணி சிட்டு
மென்மையான மனங்களில்
சில வலிகள் எப்போதும்
காயப்படுத்தும் மனிதர்களால்…!
சிந்தனை சிறகுகளில் சில
காயங்கள் சிறகுகளை விரிக்க
தடை விதிக்கும்
தன்னலவாதிகளால்…!
மௌனம் காத்தல் என்றும்
மனதிற்கு நல்லது என்பதும்
மன்னித்து வாழ்வதே மரணத்தை
வெல்லும் என்பதும்
விஞ்ஞானம் வியந்த
விந்தை மருந்துகள்…!
– சிறுவாணி சிட்டு.
கொங்கு சமையல் - கத்தரிக்காய் சுண்டாங்கி
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 4
வ.மிளகாய் – 4
புளி – சிறிதளவு
உப்பு – தேவைக்கு.
எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
கத்தரிக்காயின் மீது சிறிது எண்ணெய் தடவி காம்பு நீக்காமல் நான்காக பிளந்து, சிறிது உப்பு தடவிக் கொள்ளவும்.
கத்தரிக்காயை தீயில் நன்றாக வாட்டி எடுத்து சூடு ஆகிய பின் தோல் நீக்கிக் கொள்ளவும்.
மிளகாயை மைகோதியில் கோர்த்து மிதமான தீயில் வாட்டி கொள்ளவும்.
கத்தரிக்காய், மிளகாய், புளி,தேவையான அளவுக்கு உப்பு சேர்ந்து அரைக்கவும்.
இப்போது களிக்கு தொட்டுக் கொள்ள சுவையான கத்தரிக்காய் சுண்டாங்கி தயார்.
– ஆனந்தி, சூலூர்
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 4
சி.வெங்காயம் – 50 கி
வ.மிளகாய் – 4
பூண்டு – 5
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
புளி – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை:
கத்தரிக்காயை ஆவியில் வேகவைத்து தோல் நீக்கிக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய்,பூண்டு மஞ்சள் தூள்,கறிவேப்பிலை,புளி,உப்பு ஆகியவற்றை எண்ணெயில் வதக்கிய பின் தோல் நீக்கிய கத்தரிக்காயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது களிக்கு தொட்டுக் கொள்ள சுவையான கத்தரிக்காய் சுண்டாங்கி தயார்.
– ஆனந்தி, சூலூர்
ச. மாடசாமி அவர்கள் தமிழகத்தின் முன்னணி கல்வி சிந்தனையாளர்களில் ஒருவர்
ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்
தனது அனுபவங்களையும், கல்வி உளவியல் பற்றியும் எளிய நடையில் நகைச்சுவையாக எழுதுபவர். இந்தப் புத்தகமும் கல்வி பற்றிய கட்டுரைகளைக் கொண்டது தான்…
புத்தகத்தில் பத்து கட்டுரைகள் உள்ளன. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா என்ற முதல் கட்டுரையில் ஆசிரியர்களின் பேனா பற்றி எழுதி இருக்கிறார். மாணவர்களின் தேர்வு தாளில் ஆசிரியர்களின் பேனாவால் எதிர்மறை கருத்துக்கள் எழுதப்படுவதை பற்றியும் அவ்வாறு எழுதப்பட்ட தாள்களை மாணவர்கள், பிற மாணவர்கள் பார்க்காத வண்ணம் மறைத்து வைப்பதையும் பற்றி சிறப்பாக எழுதி இருக்கிறார்…
தனது வகுப்பறையில் மாற்று முயற்சியாக சிவப்பு பேனாவை வைத்து நேர்மறையாக விமர்சனம் செய்வதை ஆரம்பித்திருக்கிறார் நன்றாக எழுதப்பட்ட விடைத்தாள்களில் நன்று, சிறப்பு, அருமை என்பது போன்ற பல நல்ல உற்சாகமூட்டும் வார்த்தைகளை எழுதி இருக்கிறார். அந்த முறை மாணவர்கள் யாரும் விடைத்தாள்களை பதுக்கல் செய்யாமல் ஒருவருக்கொருவர் தங்களின் விடைத்தாள்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்
இந்த மாற்றம் மிகச் சிறப்பாக வேலை செய்ததாக தனது புத்தகத்தில் எழுதி இருக்கிறார்..
ஆசிரியர்களின் கையில் இருக்கும் சிவப்பு பேனா தனது அதிகார தோரணையை இழக்கும் போது தான் உயிரோட்டமான வகுப்பறை அமைகிறது என்ற கருத்தை சிறப்பாக பதிவு செய்துள்ளார்..
ஒவ்வொரு கட்டுரையிலுமே ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் பற்றியும் ஆசிரியர்களிடம் மாற்றிக் கொள்ளப்பட வேண்டிய பழக்கங்கள் குறித்தும் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
மாணவர்களை மலர வைத்து கற்பிப்பதே உண்மையான கல்வி என்ற கருத்தை அனைத்து கட்டுரைகளிலுமே எடுத்துக்காட்டியுள்ளார்
ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கல்வி நூல்களான **டோட்டோ ஜான் பகல் கனவு** ஆகியவற்றைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.
மாணவர் மைய கற்பித்தல் நடைபெறும் தற்காலத்தில் அனைத்து ஆசிரியர்களும் தனது வகுப்பறையில் கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன மாற்றங்கள் பரிசோதனைகளைப் பற்றி தெரிந்து கொள்ள இவரின் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
பல்வேறு பணிச்சுமைகளால் மனதில் உற்சாகம் குறையும் போதெல்லாம் என்னை மீட்டெடுப்பவை இது மாதிரியான புத்தகங்கள் தான்..
வகுப்பறையில் புதுமையை புகுத்த விரும்பும் அனைத்து ஆசிரியர்களும் அவசியம் ஒரு முறை வாசிக்க வேண்டிய புத்தகம் இது…
வெளியீடு : பாரதி புத்தகாலயம் விலை ரூபாய் 80
நட்புடன் அ சுசீலா ஆசிரியை அவிநாசி