குழந்தைகள் தின சிறப்பு கவிதைகள்
by Neerodai Mahes · Published · Updated
மாய வலைக்குள் சிக்காத குழந்தைகள்
பெற்றோரின் அலட்சியத்தால் செல்போன் உபயோகிக்காத குழந்தைகள்
குடும்ப சூழல் அறிந்து உதவிகள் நிகாரித்து
சுய முன்னேற்ற பாதையை அமைக்கும் குழந்தைகள்
குழந்தை தொழிலாளர்களுக்கு நிகழும் கொடுமைகளை உரக்க கூறும் குழந்தைகள்
காணொளியில் உறவை விடுத்து நேரே சென்று உறவாடும் குழந்தைகள்
அம்மா அப்பாவுக்கு போட்டியாக நினைக்காமல் அவர்களை மதிக்கும் குழந்தைகள்
அனைவரும் மாய வலையில் சிக்காத நல்ல குழந்தைகளே!!!
தெய்வமே குழந்தைகளாய்…
தெய்வமென ஒன்றுண்டு என்பார் சிலர், இல்லை என்பாரும் சிலர்,
இருந்திருக்கலாம் என மையமாய் எண்ணுவாரும் சிலர்
வள்ளுவத்தை பொதுமறையென வாழுத்துவதில்
இவர்களெல்லாம் இணைந்தே இருப்பர் என்பதனால்
தெய்வம் தொழாலாள் என்ற வரியினை வசதியாய் ஏற்றுக் கொண்டு
தெய்வத்தின் மாண்புகள் இவையென எவ்வெவற்றை பட்டியலிட்டாலும்
அப்பட்டியலின் அனைத்து மாண்புகளும்
குழந்தைகளின் குறும்புத் தனத்திற்கு ஒப்பென சிந்தித்ததால்
தெய்வமே குழந்தைகளாய் ஆகுமென ஏற்போமே
தெய்வமே குழந்தைகளாய்
மடியில் தவழ்ந்தாட
மழலை ஒன்றில்லாமல்
“மலடி” சொல்லக்கேட்டு
மரணித்த என் தருணங்கள்
மாதங்கள் நோன்பிருந்தேன்
மண்சோறும் தானுண்டென்
“மடிப்பிச்சை” தான்வேண்டி
மன்றாடி வேண்டிவந்தேன்
காமாட்சி, மீனாட்சி பேர்சொல்லி
கந்தனென்றும், கண்ணனென்றும்
கனிமழலை கனவில் கண்டு
கடவுளிடம் மனுக்கொடுத்தேன்
கொடுத்த முற்பிறவி சாபத்தின்
கொடிய நாள்கணக்கு தீர
கொடியோடு கொஞ்சி விளையாட
கொடுத்த கனி இரண்டும் சேர்ந்தது
விண்ணோடு வாழ்ந்திருந்த
வியனுலகின் தெய்வங்கள்
பெண்ணோடு விளையாட
பிள்ளைகளாய் வந்ததுவோ? -அது
செய்கின்ற சிறு குறும்பில்
சேர்த்த இன்பங்கள் கோடிபேரும்
தையல் பட்ட பெருந்துயரை
தைத்திடவே நெஞ்சமும் அமைதிபெறும்.
தெய்வமே குழந்தைகளாய்
கண்மூடி வேண்டிய கடவுளவன் குரலைக்
கேட்க எண்ணி கோவில் கடந்து
வீடு வந்ததும் ஓடி வந்து
அணைத்து அன்பு முத்தம் மழையில்
என்னை நனைத்து
எனக்கென்ன கொணர்ந்தாய்
என கேட்டதும் இதோ என
இனிப்புகளை நீட்ட
அவள் சிரிப்பில்
இனிப்பு தோற்றுப் போய் நின்றது
வா சாமி கும்பிடலாம் என
இப்படித்தான் வழிபாடு என சொல்லி
சில நிமிடங்களில்
என்ன வேண்டிகொண்டாய்
எனக் கேட்டால்
அவள் சொன்ன பதிலில்
அதிசயித்துப் போனது அப்பாவின் மனது
உங்க சிரிப்பும் அன்பும் எப்போதும் இருக்கணும்
தெய்வமே குழந்தைகளாய் இல்லம் நிறைந்திருக்கயில்
கவலை கொள்ளக் காரணம் ஏன்?
கடவுளின் குரலைக் கேட்ட நிறைவில் நான்
குழந்தை
என்ற வெள்ளக்கடதாசி
என் கையில்…
குழந்தை
என்ற ஓவியம்
வரையட்டுமாம் எனக்கு…
அன்பு என்ற
பென்சில் கூரால்
கோடுகள் வரைகிறேன்…
மழலை மொழி,
குறும்புத்தனம்,
பிடிவாதம் ,
சின்னச்சின்னக் கோபம்,
அன்புச்சண்டைகள்
போன்ற வர்ணங்களை
தீட்டி முடிக்கிறேன்.
இதோ ஓர்
அழகான குழந்தை
ஓவியம் தயார்…