மின்னிதழ் ஆகஸ்ட் 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh august 2023

சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்: சந்தோஷ் 

வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.

நீரோடை மாத மின்னிதழ்

சுய முன்னேற்ற சிந்தனைகள் - நீரோடைமகேஸ்

கொங்கு வட்டார வழக்கில் எழுதிய கொங்கு சமையல்

விருப்பம் - சிறுகதை

என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். பலநாள் பார்க்காததால் நானும் அவளும் வெகுநேரம் உரையாடினோம். அப்போது அவள் குழந்தையைப் பற்றி விசாரித்தேன். இன்னும் உன் குழந்தை பள்ளி முடிந்து வரவில்லையே என்று. அதற்கு அவள், ‘பள்ளி முடிந்து இந்நேரம் அவள் சிறப்பு கணித பயிற்சி கூடத்திற்கு சென்றிருப்பாள் என்றாள். எதற்கு பள்ளியில் தான் கற்றுக்கொடுப்பார்களே என்றேன். இல்லை அவள் அதில் மதிப்பெண் குறைவாக வாங்குகிறாள் என்றாள். சிறிது நேரம் கழித்து அவள் மகள் வந்தாள். நான் பேசலாம் என்று எத்தனிக்கும் முன்னே அவள் அறைக்குள் சென்றாள்.

எனக்கோ ஆச்சர்யம்! இந்த வயதில் இருக்க வேண்டிய மகிழ்ச்சியோ ஆரவாரமோ அவளிடத்தில் இல்லை என்று. என் தோழி சமையலறைக்கு சென்றிருந்தாள், அந்நேரம் நான் அவள் மகளை கண்டேன், அவள் கூனி குறுகி அழுதுக்கொண்டிருந்தாள். என்னாயிற்று என்று விசாரித்தேன். ஒன்றுமில்லை என்று மழுப்பினாள். கட்டி அணைத்து கேட்டேன், அழுதுக் கொண்டே கூறினாள். எனக்கு கணிதம் படிக்க விருப்பம் இல்லை, அம்மா தான் வற்புறுத்துகிறார் என்று. வேறு என்ன விருப்பம் எனக் கேட்டேன். எனக்கு சங்கீதம் கற்றுக்கொள்ள விருப்பம், அதை கூறினாள் அம்மா என்னை வைகிறார் என்றாள்.

உடனே நான் தோழியை அழைத்து உன் குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்று அப்பொழுது தான் அவள் வாழ்வில் முன்னேறுவாள் என்று வலியுறுத்தினேன். அவளும் தன் தவறை உணர்ந்து சரி என்றாள். விருப்பத்துடன் செய்யும் எந்த செயலும் வீணாவதில்லை.. விருப்பமில்லாமல் செய்யும் எந்த ஒரு செயலும் நம்மை வருத்தும்!

இந்த பதிவு வாயிலாக கவிஞர்கள் கேப்டன் ராஜ் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோரை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம்.

வானவில்
வானத்தின் வில்லே வானவில்லே…
ஒரு நிமிடம் பூக்கும் பூவே!
மீண்டும் எப்போது வருவாயோ?

கிருஷ்ணவேணி

~~~~~~~~~~~~~~~~~


வாரிசு

அகப்பையில் அகப்பட்டது ஒரு துளி,
பேரானந்தத்தில் கணவன்,
பேரன் வரப்போகிறான் என்றாள் பாட்டி,
குல வாரிசு வரப்போகிறது என்றார் தாத்தா,
மருமகன் தான் என்றாள் அத்தை,
உன்னை போலவே சேட்டை செய்ய வரப் போகிறான்
உன் மகன் என்றனர் அக்கம்பக்கத்தினர்….
ஆணோ!!! பெண்ணோ!!!என ஆர்ப்பரித்தான் கணவன்….

ஆண் பிள்ளை மட்டும் பிறக்கட்டும்…. முனிஸ்வரனுக்கு கெடா,
அங்கம்,பங்காளிகளுக்கு கறி சோறு,
பழனி முருகனுக்கு முடி காணிக்கை,
ஆசை மனைவிக்கு ஐந்து சவரன் தாலி சரடு என்றான் கணவன்..

மாதம் மலர்ந்தது,
வயிறு பெருத்தது, கருமுதிர்ந்தது,
ஐந்தில் கசப்பு கஞ்சியும்,
ஏழில் வளைகாப்பிற்க்கு
நாள் பிறந்தது….

ஊரை வளைத்து போட்டான் வளைகாப்பை,
கைகளில் வளையல்கள் குலுங்கின.
சந்தனமும், குங்குமமும் கன்னத்தில் படர்ந்தன,
அறுசுவையும் பந்தியை நிரப்பின,
திருமணத்தை விட அதிக வசூலை தந்தது வந்தோர்கள் வைத்து தந்த பணம்…..
பேரன்பினாலும், பெரும் இன்பத்தினாலும் இனிதே நிறைவேறியது வளைகாப்பு….
ஆசை மனைவியை அவள் அன்னை வீட்டில் விட்டு சென்றான் அன்பு கணவன் ….

ஒரு நாள் இரவுவேளை வலியோடு அலறல்,அந்த அலறலின் இறுதி தொனியில்…
அல்லி பூத்தாற்போல்,
மல்லி மலந்தாற்போல்,
செவ்வானம் மேலும் சிவந்தாற்போல்,
இரண்டு கைகளிலும் நிலாவை தூக்கி சுமந்தாற்போல்
கைகளில் பெருமூச்சு விட்டது அழகிய பெண்குழந்தை!!
அந்த குழந்தையை கைகளில் சுமந்து இருந்தால் எம்.பி.பி.எஸ் படிக்காத உள்ளூர் மருத்துவச்சி இறுதியாக
வாரிசு பிறந்தது ஊர்வாயை அடைக்க….

கேப்டன் ராஜ்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *