நீரோடை இலக்கிய நிகழ்வு 10
by Neerodai Mahes · Published · Updated
நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நீரோடை இலக்கிய நிகழ்வு 10-ல் “வெற்றியைப் பிடி” சிறார் பாடல் நூலை அறிமுகம் செய்து பேசிய திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் அவர்கள் தன் இலக்கியப் பயணத்தில் கலந்துகொண்ட முதல் இணையவழி நிகழ்வு என்பதைப் பதிவு செய்தார். நீரோடைக்குக் கிடைத்த பெருமையாகவே கருத்துகிறோம். கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் அழகு சேர்க்கிறது அடுத்த நிகழ்வு… – நீரோடை மகேஸ்.
நன்றியாய்… சில வரிகள்
**********************
பாராட்டுக்குரிய நீரோடை இலக்கிய அமைப்பின் சந்திப்பு 10 ஆம் நிகழ்வில் 19/1/2025ல்…
பிரபல திரைப்பட இயக்குனர் பெருமைக்குரிய திரு. ராசி அழகப்பன் அவர்களால் எனது
“வெற்றியைப் பிடி !” என்ற சிறுவர் பாடல் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
நீரோடை மகேஸ் அவர்களது சிறப்பான ஒருங்கிணைப்பில் பங்கெடுத்துக் கொண்டதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். சேலம் மாவட்டம் சலகண்டபுரத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ஜ.க. நாகப்பன் என்னும் நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக கதை, கவிதை, நாடகம், வெண்பாக்கள், இசைப் பாடல்கள் எனப் பல விதமாக எழுதி வருகிறேன். எனது படைப்புகளில் சிறுவர்களுக்கான பாடல்களை தொகுத்து “வெற்றியைப் பிடி..!” என்ற நூலாக சேலம் “யாவரும் கேளிர் தமிழ்மன்றம்..!” வாயிலாக வெளியிடப்பட்டது.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்…! என்ற குறளுக்கான பொருளை அன்றறிந்தேன். அதனினும் சிறப்பான ஒரு மகிழ்வை, நிறைவை இன்றைய நீரோடை “கூகுள் மீட்டிங்” சந்திப்பில் அடைந்தேன். இது உண்மை. நாள்தோறும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்படத்துறை பிரபலமான ராசி அழகப்பன் அவர்கள் எனது சிறுவர் பாடல் நூலை அறிமுகப் படுத்தி நிகழ்த்திய உரை அவ்வளவு அற்புதம். (நேரம் ஒதுக்கி நூலை முழுவதும் படித்ததற்காகவே, அவருக்கு பல நன்றி சொல்ல வேண்டும்) ஒரு படைப்பாளியின் படைப்பை, அவனது நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதைக் காட்சிப்படம் போல விளக்கிச் சொல்வது எல்லோருக்கும் எளிதாகக் கைவரக்கூடியதல்ல. அவர் சிறந்த திரைப்பட இயக்குனர் என்பதனால் அது சாத்தியமானது என்று கருதுகிறேன்.
ராசி.அழகப்பன் ஐயா என் நூலைப் பற்றிப் பேசும்போது எவ்வளவு பரந்த மனதோடு பேசினார் என்பது அவரது தடையற்ற பாராட்டில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் நூல் வெளியிட்ட போது பலரும் இந்த நூலுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பாராட்டினார்கள்.
இன்று ராசி. அழகப்பன் ஐயாவின் பாராட்டைக் கேட்கும்போது எனக்கு தேசிய விருது கிடைத்தது போன்ற மகிழ்ச்சி உண்டானது மறுக்க முடியாத உண்மை. ஒரு படைப்பாளிக்குத் தேவையான சரியான அங்கீகாரத்தை வழங்கிய ஐயாவுக்கும், நீரோடை மகேஸ் அவர்களுக்கும் நீரோடையில் என்நூலை இணைத்துவிட்ட பேரன்பு பார்த்திபன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை நெகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன் ஜ.க. நாகப்பன்.

வணக்கங்க!
இன்றைய நீரோடை இலக்கியச் சந்திப்பில் பங்கேற்ற அனைவருக்கும் மனதிற்கு நெருக்கமான நிகழ்வாக அமைந்திருக்கும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன். திரு.நாகப்பன் அவர்களின் வெற்றியைப்பிடி நுலை அறிமுகம் செய்த திரு ராசி அழகப்பன் அய்யா எது வாழ்க்கையின் அழகியல் என்பதை விண்வெளியில் பந்தல் அமைந்து சூரிய, சந்திரரை நாயகர்களாக்கி விளக்கு, யானை, பெரியார், அணிலண்ணாவை அழைந்து வந்து தேசையம்மா… , நிலா நிலா.. ஓடி வா என பாடிய குழந்தை பாடல் ஆசிரியர் M.G. ராஜா அவர்களைப் பற்றி கூறிய விவரங்கள் ‘வெற்றியைப் பிடி’ த்துக் கொள்ளுங்கள் என அனைவரிடமும் கொடுத்த அய்யாவிற்கு நன்றி. விமலா அவர்களின் பூனையின் உருவம் மாறினாலும் குணம் மாறவில்லை என்ற கருத்துடன் கூறிய கதை சிறப்பு. சகீலாவின் நமது மூத்தோரை நம் எவ்வாறு தள்ளி வைக்கின்றோம் என்பது பற்றிய மறதி கவிதை அற்புதம். சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் அவர்களின் கடிதம் கதை நம் முன்னோர்கள் வாழையடி வாழையாக எவ்வாறு சொன்ன சொல்லை காப்பாற்றினார்கள் என்ற பெருமையை பறை சற்றியது. நிகழ்வில் பங்களித்த அனைவருக்கும் நன்றி
– எழுத்தாளர் சூலூர் ஆனந்தி.