மதுரவனம் – சிறுகதை

கவிஞர், கதாசிரியர் கவி தேவிகா அவர்கள் எழுதிய சுவாரஸ்யமான கதை “மதுரவனம்” – mathuravanam sirukathai

mathuravanam sirukathai

மது இல்லம்

வைகறை கடந்த அழகியகாலை, வெளியே புட்கள் இனிய ராகமிசைத்துக் கொண்டிருந்த வேளையில், அடர்ந்த வனத்தைத் தாண்டி ஆள்அரவமற்ற தனிஇடத்தில் ஒற்றை வீட்டில் தொலைக்காட்சி பெட்டி அன்றைய நொடிப்பொழுது நிகழ்வுகளை தன் நித்திய கடமையை உரத்த தொனியில் ஊருக்கே கேட்கும் வண்ணம் உரைத்துக்கொண்டிருந்தது.

அருகில் வீடுகள் கட்டிடங்கள் இல்லாத காரணத்தால் அந்த தொலைக்காட்சி பெட்டியிலிருந்து வரும் ஒலிகள் ஒலிபெருக்கியை போல இரைந்துகொண்டிருந்தது . அழகிய வீடு, சுற்றிலும் இயற்கை எழில், நீண்டு பெருகி ஓடும் நீரோடை, இன்னிசை பாடும் இளந்தென்றல், அதற்கேற்றாற்போல் தலையசைக்கும் உயர்ந்தோங்கிய மரங்கள், ஜதி சொல்லும் நீரோடையென கொள்ளை அழகு வாய்ந்த அழகிய வீடு “மது இல்லம்”

தொலைக்காட்சி முன் அன்றைய நாளிதழ் செய்திகளை மென்றுகொண்டு கையில் தேநீர் கோப்பையோடு ஐம்பது வயதை கடந்த மாநிறமும் திடமான உடலமைப்பும் பெற்ற தந்தை மோகன் சோபாவில் வீற்றிருக்க, எதிரே இளம்வாலிபனாக மோகனின் சாயலையொத்த ராஜா தனது தேநீர்கோப்பையோடு தொலைக்காட்சி செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தான் – mathuravanam sirukathai.

தந்தையும் மகனும் காவல்துறையில் பெரிய பதவிகளை வகித்து நேர்மையான அதிகாரி என்று புகழ் பெற்றவர்கள். மோகனின் மனைவி மது இல்லத்தரசி. ஆனால் இறைவனடியில் சேர்ந்துவிட்டார்.

பேயுமில்லை அமானுஷ்யமுமில்லை

அவ்வேளையில் வந்த செய்தியை இருவருமாக உற்று கவனிக்க “கடந்த மாதத்தை போலவே இன்றும் பேய்க்காட்டில் மீண்டும் ஒரு சடலம் கிடைக்கபெற்றது. மரணத்திற்கான பிண்ணனி என்னவென்று தெரியவில்லை, இறந்தவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்றும், அவர் அந்த பேய்க்காட்டுக்கு வரக் காரணமென்ன வென்றும் தெரியவில்லை. மீண்டும் பேய்க்காட்டில் அமானுஷ்யங்களின் ஆட்டம் ஆரம்பமாகியிருக்கிறதோ ? இன்று நிகழ்ந்த மரணத்தையும் சேர்த்து இரண்டு மாதத்தில் ஐந்து மரணங்கள் நிகந்துள்ளது. எனினும் இதற்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது…..” என்ற செய்தியை கேட்டு முடித்ததும் ஒரு சிறு அமைதிக்கு பிறகு தங்கள் விவாதத்தைத் தொடங்கினார்கள் தந்தையும் மகனும்.

இந்த 21 ம் நூற்றாண்டிலும் என்னப்பா இது பேய் பிசாசு என்று பேசி கொண்டிருக்கிறார்கள். பேயுமில்லை அமானுஷ்யமுமில்லை. சில மனிதர்களால் உருவாக்கப்படும் கதைதான் இது .

இறந்தவர்களில் ஒருவர்

அப்படியல்ல ராஜா அமானுஷ்யமில்லை என்று உறுதியாக கூறிவிட முடியாது.நம்மை மீறி நடக்கும் சில நிகழ்வுகள் துர் மரணங்கள் அமானுஷ்ய சக்திகள் உள்ளதை நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறது.

பேயாவது அமானுஷ்யமாவது எல்லாமே நம்மால் நம்பப்படுகிற பொய்யான ஒன்று. நான் இதை நம்புவதாகவேயில்லை. ஒன்று அந்த காட்டில் விலையுயர்ந்த பொக்கிஷங்கள் இருக்க வேண்டும். இல்லை சமூகத்திற்கு பங்கம் விளைவிக்கும் தீயச் செயல்கள் ஏதாவது நடந்துகொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் ஐந்து மரணங்களும் நிகழ காரணமென்ன. இறந்தவர்களில் ஒருவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர், ஒருவர் தொழிலதிபர், ஒரு பெண்மணி, காவல் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் தென்படவில்லை. தனக்கே உரியதான பல சந்தேக கோணத்தில் விவாதித்தான் ராஜா.

இதற்கு தீர்வு காணவேண்டுமெனின் நாம் இப்பொழுதே தொடங்குவோம் நமதுபயணத்தை பேய்க்காட்டுக்கு . தந்தை கூற தங்களது பயணத்திற்கு ஆயத்தமாகி ஏற்பாடுகளுடன் கிளம்பினார்கள்.அவர்களின் மகிழுந்து மண்ணில் பறக்கத் தொடங்கியது…

இனி பேய்க்காட்டில் அமானுஷ்யங்களின் ஆட்டம்…..

அவர்கள் செல்லும்பாதைகளில் கட்டிடங்கள் தென்படவேயில்லை. சுற்றிலும் உயர்ந்தோங்கிய மரங்கள். வழியில் கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்த மயானம் அதை அடுத்த சிறு தூரத்தில் அந்த காட்டுக்கு செல்லும் முகப்பு வழி தெரிந்தது. முகப்பில் கற்சிலையொன்று வரவேற்பதுபோல அமைக்கப்பட்டிருந்தது. அருகில் மதுரவனம் என்ற பெயர் பொறிக்கப் பட்டிருந்தது. கிட்டதட்ட கி.பி 15 ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட தோற்றம். காட்டுக்குள் வண்டிநுழைவதற்காக அந்த பெரிய இரும்பு கதவை திறக்க எத்தனித்து ராஜா இறங்க முயற்சிக்க அந்த பெரிய இரும்பு கதவு தானாகவே பெரிய பயங்கர சத்தத்துடன் திறக்கிறது – mathuravanam sirukathai.

சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு பயந்த இருவரும் தானாக திறக்கும் கதவை கண்டு விழியிமைக்காது பார்க்கின்றனர்.
“இதோ ஆரம்பித்துவிட்டது நமக்கு நான் சொல்லும்போது நம்பவில்லை , நீ இப்போது நேரிலே காண்கிறாயா?” மோகன் கூற, அப்பா அடிக்கிற காற்றில் ஆளையே தூக்கும்போது கதவு திறக்காதா ??!!. வாங்க இதெல்லாம்
பெரிய விஷயமா.. முன்னேறி செல்வோம். ரொம்ப ஆவலாயிருக்கிறது உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள..

தித்திக்கும் வனமேதான்

உன்னை சொல்லி குற்றமில்லை உன் வயது அப்படி.சரி வா செல்லலாம். என்று வண்டியை கிளப்ப பயங்கர சப்தமிட்டுக்கொண்டு வயது முதிர்ந்த ஒருவர் அவர்கள் முன் தோன்றுகிறார். பயத்தில் வியர்த்து கொட்டியது இருவருக்கும். ஜடா முடி ,கருப்பான, அழுக்கான கந்தல் உடையோடு, கையில் கம்புடன் விசித்திரமாக காட்சியளித்தார் .

“உள்ளே வருகிறீர்களா ! வாருங்கள் ??!! வாருங்கள் ?? எப்படி திரும்பி போறீங்கனு
பார்க்கலாம்” ஒருவித சப்தமிட்டுக்கொண்டே காட்டுக்குள் சென்று மறைந்தார்.

பதற்றம் ஒருவாறு தணிந்தபிறகு உள்ளே நுழைந்தனர். “மதுரவனம் உண்மையிலேயே மயக்கும் வனம். இயற்கையெழில் பூத்துக்குலுங்கும் மரங்கள் செடி கொடிகள், அப்பப்பா தித்திக்கும் வனமேதான். ஆகையால் தான் மதுரவனமென்று பெயர் வந்ததோ. கண்ணை கவரும் கொள்ளையழகு “கண்கள் விரிய பார்த்துக்கொண்டே வந்தான் ராஜா.

முன்னேறி சென்றனர்

அப்பா “இந்தகாகாட்டில் விலைமதிக்கமுடியாத பொக்கிஷங்கள் ஏதேனும் இருக்குமென சந்தேகப்படுகிறேன். உங்களுக்கு என்ன தோன்றுகிறது?? “. “இருக்கலாம். இல்லை அமானுஷ்யங்களின் கூட்டங்கள் இங்கே தங்கி நரமாமிசங்களை வேட்டையாடவும் கூட செய்யலாம் யாருக்கு தெரியும் ??!!” ஒருவித திகில் குரலில் சொல்ல இருவரும் நகைத்துக்கொண்டே காட்டுக்குள் சென்றனர். உள்ளே செல்ல செல்ல பகலே இரவாக தெரியுமளவுக்கு ஒளி மங்குகிறது மரங்கள் சூழ்ந்த அடர்வனமென்பதால். போக போக வெளிச்சமென்பது முற்றிலும் இல்லாமல் போக பாதைகளும் கரடுமுடராக இருக்க சற்று தொலைவில் வண்டி நின்றுவிட்டது.

அதற்குமேல் வண்டியில் பயணிப்பதும் இயலாத காரியமென்பதால் இருவரும்வண்டியிலிருந்து இறங்கி கைப்பையுடன் மங்கல் ஒளி வெளிச்சத்தில் நடக்கத் தொடங்கினர். கரிய இருள் ஒருபுறம், விநோதமாக கேட்கும் மிருகங்களின் சத்தம்,உயர்ந்தோங்கிய மரங்கள் ஆடுவதை பார்த்தால் காடே அதிர்வது போல காட்சி, சில மூலிகை செடிகளிலிருந்துவரும் நறுமணம் என திகிலால் இதயம் சற்று வேகமாக துடித்துக்கொண்டிருக்க திரும்பி வர சரியான பாதை தெரிய வேண்டுமென்பதற்காக மரத்தின் கிளைகளை ஒடித்துக்கொண்டே முன்னேறி சென்றனர் இருவரும்.

ராஜாவின் பின்முதுகில் யாரோ கை வைத்து காதருகே அழைப்பது போல தோன்ற மெல்ல திரும்பி பார்க்கிறான். பின்னாடி ஒருவருமே இல்லை. தன்னையுமறியாது வியர்த்து கொட்ட சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தந்தையை அழைக்கிறான். தனக்கு முன்னே சென்றுகொண்டிருந்த தந்தையிடமிருந்து எவ்வித பதிலும் வராதது கண்டுபயந்து ஓடி சென்று பார்க்கிறான். தந்தை ஒரு மரத்தடியின் கீழே நிற்பதை பார்த்தான் – mathuravanam sirukathai.

ஆளுக்கொரு திசையில்

என்னப்பா , “எத்தனை முறை அழைப்பது தாங்கள் ஏன்பதிலளிக்கவில்லை “ கூறிக்கொண்டே தந்தயருகே வந்தவன் மேலும் பேச வார்த்தை வரவில்லை.

அவர்களுக்கு முன்பு ஆறடி உயரத்திற்கு நாகபாம்பு தன் பெண் நாகத்தோடு இணைந்து நடம் புரிந்து கொண்டிருந்ததை பார்த்து என்ன செய்வதென்றறியாமல் நின்றுவிட்டார்கள். சில நொடிகள் கடந்ததும் அப்பா கையில்தான் துப்பாக்கி இருக்கிறதே பிறகென்ன சுட்டுவிடலாமா என்றான் ராஜா. இல்லை மகனே நாம் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது.

அவைகள் வாழும் வீடு காடு . நாம் தான் அந்நியர்கள் . ஆகவே அவைகள் அதன்வழி செல்லும் வரையில் அமைதி காப்போம். அவைகள் ஆட்டம் அடங்கியதும் இவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். செல்லும் பாதை இரண்டாக பிரிவதை க் கண்டு எந்த வழியில் செல்வதென குழப்பம் ஏற்படுகிறது. உடனே ராஜா , “அப்பா இருவரும் ஆளுக்கொரு வழியில் செல்லலாம் என்றான்”. இல்லை ராஜா அடர்ந்த வனமிது. ஆளுக்கொரு திசையில் சென்றால் சேர்வது கடினம்.

எதுவாயிருந்தாலும் சேர்ந்தே செல்வோம் என்றார். சரிஎன்று தலையாட்டிய வண்ணம் பார்க்க அவனது வலகைபக்கமுள்ள வழியில் ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது. நடுத்தரவயதொத்த அந்த பெண் பார்ப்பதற்கு அவனுடைய தாயின் சாயலிலே இருந்தார். அவனுடைய வலப்பக்கமாக செல்லும் வழியில் தன்னை வரச்சொல்வதுபோல ஒரு முகபாவம் இவனுக்கு தோன்றியது. அந்த வழியாகவே சென்று கண்ணுக்கு அப்பால் அந்த பெண் மறைந்தே போனாள். என்ன ராஜா எந்த பாதையில் செல்வது என்று தோள்பிடித்து மோகன் கேட்டபோது தான் ராஜா சுயநினைவுக்கு வந்தான் போலும் ஏதும் பேசாது அந்த பெண் சென்ற திசையை நோக்கி கை காட்டினான்.

பயத்தின் உச்சம்

“ஓஓ அந்த பக்கமாக செல்லலாம் என்கிறாயா சரி உன் விருப்பம்” சொல்லிக்கொண்டே அவனோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். ராஜா சற்று மனக்குழப்பத்தோடு செல்கிறான். அதன்பிறகு அவன் அங்கு கண்ட காட்சிகள் அவனுக்கு எதையோ நினைவுபடுத்துவதை போன்ற எண்ணம். இதுதான் அவன் முதன்முதலாக காட்டுக்குவருவது.

ஆனால் ஏற்கனவே இவ்விடத்தை பார்த்து பழகியது போல் உணர்வு. அதிலும் தாயின் முகத்தை இங்கு பார்த்ததையெண்ணி ஆனந்தப்படுவதா இல்லை கவலைகொள்ளவா என்று மனதுக்குள் போராடிக்கொண்டிருந்தான். அந்த வழியில் இரண்டு மைல் தூரம் கடந்த பிறகு ஒருபாழடைந்த கட்டிடம் தென்படவே அங்கு சற்று இளைப்பாறலாம் என்று தந்தை சொல்வதற்கு தலையாட்டிக்கொண்டே அங்கே சென்றனர்.

அது பாழடைந்துபோன மிகப்பெரிய அரண்மனை போல இருந்தது அதன் கதவுகளெல்லாம் உடைந்து கட்டிடமெல்லாம் சிதைந்து காணப்பட்டது. சுவர்களில் அழகழகான ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன. ஆனால் எதுவும் முழுமையாக இல்லை. ஆங்காங்கே மங்கி களையிழந்து தென்பட்டது. சற்று உள்ளே சென்றால் நிறைய அறைகள் தென்பட்டது. ஒரு அறைக்குள் சென்று சூழ்ந்திருந்த தூசிகளை தட்டிவிட்டு உள்ளே சென்றனர்.

அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை நிலைகுலைய செய்தது. பெரியதாக வரையப்பட்டிருந்த பெண்ணின் ஓவியம். மகாராணி போல உடை நகையணிந்து சாந்தமாக முகபாவத்துடன் வரையப்பட்டிருந்த ஓவியம் தன் தாயின் முகச்சாயலில் இருப்பதை கண்டு வியந்து நின்றான் ராஜா. இந்த நடுகாட்டில் இதை முற்றிலும் எதிர்பார்க்காத மோகன் என்ன செய்வதென்று தெரியாது நின்றார். அடுத்த அறைக்குள் செல்ல முற்படும்போது ஏதோ ஒரு அறையிலிருந்து அலறல் கேட்க அங்கே விரைந்தனர் இருவரும்.

தரை நகர்வது போல

அங்கே சுவற்றில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை கண்டு ஸ்தம்பித்துபோயினர். ஏனெனின் தற்போது அவர்கள் பார்த்தது இவ்விருவரின் ஓவியங்களைத்தான். ராஜாவின் உடைதரித்து வீரவாளை கையில் ஏந்தியவாறு இருவரும் சிம்மாசனத்தில் அமர்ந்தவாறு வரையப்பட்டிருந்தது. என்ன நடக்கிறதென்று ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்து திகைக்க மேலும் மற்ற அறைகளை பார்க்கும் ஆவலில் இருவரும் செல்கின்றனர். ஏற்கனவே பழகிய இடமாக உணர்ந்தனர் இருவரும்.

அப்போது கீழறையில் நடுவில் ஒருசிலை நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சிலையைப்போலவே முகப்பிலும் இருந்தது ஞாபகம் வர ராஜா அதனருகே சென்று தொட்டுபார்த்தான். திடீரென தரையின் கீழ்பகுதி நகர்வது போல தோன்ற சற்றே விலகி நின்றான். கீழே பார்த்தால் அரசர்காலத்தில் ஏற்படுத்துவது போல ரகசிய வழியொன்று தென்பட்டது. இருவரின் இதயமும் படபடக்க உள்ளே சென்றனர். சற்றுதூரம் சென்றதும்

மிகப்பெரிய ஒளி தென்பட்டது. அதை காணும் ஆவலில் விரைந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி பிரமிக்க வைத்தது. தங்கம் வைரம் போன்றவற்றை எதிர்பார்த்து சென்றனர் போலும். ஆனால் அங்கோ ஒரு சிறிய குளத்தில் ஒற்றை தாமரை பொன்னொளி வீசி மலர்ந்திருந்தது. அதனருகே சென்றுபார்த்தனர். அருகில் செப்புதகட்டில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. என்ன வென்று பார்த்தனர்.

தகட்டில்” மதுரகுளத்தில் மலர்ந்த மணமிகு மதுரகமலமதை தனதாக்கி கொள்வான் எவனோ அவனே இவ்வுலகை வெல்பவன்”. அதை படித்ததும் இருவரும் சற்று யோசித்தனர். பிறகு ராஜா அப்பா இதை எடுத்து செல்வோமா என்றான். வேண்டாம் ராஜா இந்த மலரால் தான் இந்த காடு மிகவும் இயற்கை எழிலோடு இருக்கிறது என எண்ணுகிறேன். மேலும் இந்த காட்டின் இயற்கை வளம் குன்றிவிடும்.

திக் திக் பயத்தோடு

இப்படியொரு அதிசய மலரை நீ பெற்றதை அறிந்தால் மற்றவரும் இந்த காட்டை பாழ்படுத்த முற்படுவர். “இல்லை அப்பா இதை விட்டு செல்ல மனமில்லை. எடுத்து சொல்வோமா” மீண்டும் கேட்க கோபத்தோடு வேண்டாம் ராஜா எனும் உரத்த குரலில் கத்த.,திடீரென அந்த அரண்மனை மண்டபம் இடிந்து விழ ஆரம்பித்தது. ராஜாவிற்கு மலரை விட்டு செல்ல மனமில்லை. ஆனால் மோகன் உடனே ராஜாவின் கையை பற்றிக்கொண்டு வெளியேறினார்.

அவர்கள் கண்முன்னே அந்த அரண்மனை இடிந்து விழுந்தது. இனியும் இங்கு நிற்பது சரியில்லை என்று சொல்லிக்கொண்டே ராஜா வை இழுத்துக்கொண்டே விரைந்தான் வந்த வழியை நோக்கி, பின்னாடி அவர்களை யாரோ துரத்தி வருவது போல தோன்றவே இருவரும் ஓட ஆரம்பித்தனர்.

இங்கு வந்துவிட்டு உயிரோடு திரும்பிவிடுவீர்களா

விரட்டும் வேகம் அதிகரிக்க அவர்களும் தங்கள் வேகத்தை கூட்டி ஓடினர். பயங்கர சத்தமும் அவர்களை மேலும் பீதிக்குள்ளாக்க இதயத்துடிப்பின் சத்தம் செவிகளில் கேட்க பயத்தோடு ஓட்டத்தை வேகப்படுத்தினர். வந்த வழியின் இறுதியை அடைந்ததும் அவர்கள் வந்த வண்டியை காணவில்லை.

திக் திக் என்ற பயத்தோடு வியர்த்துக்கொட்ட எப்படியாவது வெளியே தப்பிவிட எண்ணி ஓட்டம் பிடித்தனர். அந்த இரும்பு கதவை தாண்டியும் ஓட்டமெடுத்தனர். அவர்களை துரத்தி வந்த அந்த பயங்கரர முதியவர் “ இங்கு வந்துவிட்டு உயிரோடு திரும்பிவிடுவீர்களா ஹா ஹா” என்று என்று அலறிய ஓலம் செவிப்பறைகளில் மோத இருவரும் தட்டுதடுமாறி இடறி மயானத்தின் கல்லறையின் மீது விழுந்தனர். கல்லறையின் மேலே “ இங்கே மோகன் ,மதுமதி , ராஜா ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று எழுதப்பட்டிருந்தது – mathuravanam sirukathai.

You may also like...

8 Responses

 1. கதை யின் முடிவில் சொல்ல வந்தது என்ன? பேய் இருக்கிறதா அல்லது இல்லையா? எனக்கு தோன்றும் அநுபவம் பயத்தில் பாறை மேல் விழுந்தது உயிர் பிரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்

 2. நிர்மலா says:

  கதை சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்த்துக்கள்

 3. தி.வள்ளி says:

  அப்ப்ப்பா செம திரில்..கதை ஆரம்பம் முதல் முடிவு வரை நிறைய திருப்பங்களோடு தித்திக் என்ற திகிலை அளித்தவரே நகர்கிறது ..வர்ணனைகள் பிரமாதம் ..பெயர்கள் மதுரவனம்.. மதுமதி மிக அழகான பெயர்கள்..அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் சகோதரி ..வாழ்த்துக்களுடன் …

 4. K Dhakshinamoorthy says:

  ஆஹா அற்புதம் … கதை சுவாரஸ்யமாக நகர்கிறது ….

 5. GANESHBABU says:

  திக் திக் பயத்தோடு நானும் பின் தொடர்ந்தேன் கதையின் வரியில்.

 6. ரமணி முருகேஷ் says:

  கதை விறுவிறுவென நகர்வது அதன் வெற்றி.
  வாசிக்கத் தொடங்கினால் நிறுத்த இயலவில்லை. அருமை

 7. Nachiyar says:

  வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அருமை அருமை சிறந்த விறு விறுப்பான திகில் கதை கவி தேவிகா தொடர்ந்து எழுதுங்கள்

 8. அரிகரபுத்ரன் says:

  எதிர்பாராத திருப்பங்கள் . திக் திக் என்று செல்லும் விதம், திசையறியாது போனவர் திரும்பி வருவாரா என்று நகரும் கதை மிக நன்று .