மின்னிதழ் ஜூன் 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh june 2023

சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்:  லோகநாயகி மோகன்குமார் 

வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.

நீரோடை மாத மின்னிதழ்

உருளைக்கிழங்கு உணவுவகைகள்

செல்லப்பிள்ளை - சிறுகதை

பிரசன்னாவுக்கு இன்று முக்கியமான நாள். நெற்றியில் பட்டை,கையில் ஏதோ காகிதம் போல் வைத்திருந்தான். கைகளில் வியர்வையை அடிக்கடி துடைத்து கொண்டு அங்கிருந்த பொருட்களை எல்லாம் புதிதாக பார்ப்பதுபோல் பார்த்து கொண்டிருந்தான்.மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன இருந்தாலும் தைரியசாலிபோல் காட்டிக்கொண்டான்.

அங்கிருந்த அறையில் இருந்து ஒருவர் வெளியே வந்து நீங்க என்று ஒன்றும் புரியாதவர் போல முழித்தார். சார் என் பேர் பிரசன்னா, நேத்து எனக்கு போன்
பண்ணிருந்தீங்க…இன்னைக்கு வந்து பாக்க சொன்னீங்க .. என்று நெளிந்துகொண்டே பவ்யமாக பேசினான்.

ஓ..சாரி ப்ரோ …மறந்துட்டேன்..வாங்க…என்று ஒரு அறைக்குள் அழைத்து சென்றார்…கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… என்று சொல்லி ,இருள் சூழ்ந்த அறையை வெளிச்சமாக்கிவிட்டு வெளியே அவசரமாக கிளம்பி சென்றார். அங்கிருந்த பொருட்களை தொட்டு பார்க்கலாமா..ஏதாவது சொல்லுவாங்களா என்று தயக்கத்துடன் அமர்ந்து கொண்டிருந்தான். அங்கே இருந்த சுற்றும் நாற்காலியில் அமர்ந்து கொண்டவனுக்கு நினைவில் அவனது கடந்த நாட்கள் ஓடத்தொடங்கின.

அப்பா ஒரு லாரி ஓட்டுநர். அம்மா பால் வியாபாரம். இந்த சிறிய வருமானத்தில் எங்கள் குடும்பம் நகர்ந்து கொண்டிருந்தது. நா அம்மா செல்லம்.. அக்கா அப்பா செல்லம்.. எங்களுக்கு சொத்து பெருசா இல்லனாலும், எங்க சேட்டைகளுக்கு பஞ்சமே இருக்காது. என் அக்கா படிப்புல படு சுட்டி!… ஆனாலும் ,எங்க அம்மாக்கு நான் தா செல்ல பிள்ளை!… ஏன்னா? எங்க வீட்ல ரெண்டு தலைமுறைக்கு அப்புறம் பிறந்த ஒரே பையன் நா!…என் அக்கா வாங்குற ஒரு சப்ஜெக்ட் மார்க் தா என்னோட அஞ்சு சப்ஜெக்ட்டும் சேர்த்து இருக்கும்.என் அப்பா ரெண்டு மார்க்கும் ஒத்து பாத்து சிரிப்பார்!…ஆனா ஒரு நாள்கூட திட்டியது இல்லை!… ஒரு நாள் அக்கா ஹாஸ்டல் சேந்து படிக்கபோரேன்னு சொன்னா…என் வீட்டுல சேத்து விடல… எனக்கு ஹாஸ்டல படிக்க விருப்பமே இல்ல…என்ன சேத்து விட்டாங்க…வேற வழி இல்லாம படிச்சு முடுச்ச….

அப்புறம் என் அக்கா ஒரு இன்ஜினியரிங் காலேஜ் …நா ஒரு இன்ஜினியரிங் காலேஜ்…என் அக்கா லோன் போட்டு ச்சா…கவித கட்டுரைன்னு எழுதி பெரிய சீன
போடுவா…ஆனா வீட்ல யாருமே கண்டுக்க மாட்டாங்க… ஏன்னா? அவளை படிப்பு முடிச்சதும் கல்யாணம் பன்ற பிளான் தா….என்ன அப்படியே விழுந்து விழுந்து கவனிப்பாங்க…காலேஜ் போக வண்டி! செலவுக்கு பணம்! எல்லாம் கிடைக்கும். அப்புறம் என் அக்கா கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகிட்டேன்னு சொன்னா…என் அம்மா “நீ சம்பாதிச்சு எங்கள காப்பாத்த வேண்டாம் ஒழுங்கா வீட்டு வேலை கத்துக்க…அது போதும்னு” சொல்லிட்டாங்க….எனக்கு என் அக்காவை பாத்தா ஒரே சிரிப்பா இருக்கும்…அவளை வெறுப்பேத்திக்கிட்டே இருக்கிறது தா என் ஒரே வேலை.ஒரு வழியா இன்ஜினியரிங் கோர்ஸ் முடிஞ்சுது…அதுக்கு அப்பறம் வேலைக்கு போகனும்.

என் அம்மாக்கு… நா இன்ஜினியரிங் முடிச்சு பெரிய கம்பனிக்கு வேலைக்கு போகனும்னு ஆசை!.. ஆனா… எனக்கு அரசாங்க வேலைக்கு போகனும்னு
ஆசை!.அப்பாகிட்ட சொன்னேன்..எங்க வீட்ல நா என்ன சொன்னாலும் ஓகே தா!…அதுக்கு அப்புறம் நல்ல கோச்சிங் சென்டெரா பாத்து சேந்துட்டேன்..அந்த நேரம் பாத்து அம்மாக்கு ஒடம்பு சரி இல்ல…அம்மாக்கு மருந்து செலவு.. எனக்கு செலவுனு பட்ஜெட் எகிறிடுச்சு…அக்கா இத சாக்க வச்சு அழுது புலம்பி எப்படியோ வேலைக்கு சேந்துட்டா… ஆனாலும் வீட்டுக்கு பக்கத்திலியே இருந்த ஒரு சின்ன கம்பனிக்கு தா அனுப்பினாங்க…

அப்பாக்கு திடீர்ன்னு.. லாரி ஓடுன மில்ல இழுத்து ஆறு மாசம் மூடிட்டாங்க… ஆனா.. இத்தனை பிரச்சனையும் வீட்ல யாரும் என்கிட்ட காட்டிக்கவே இல்ல… ஏன்னா வீட்டுப்பிரச்சனையே நெனச்சு தேர்வுல கோட்ட விட்டுற கூடாதுனு தா…
நானும் தொடர்ந்து எழுதிட்டே இருந்த…எப்ப பாத்தாலும் ஒன்னு ரெண்டு மார்க்ல போய்டும்… நா நல்லா எழுதினா தேர்வு ரத்து ஆகிடும்…அக்காக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க…வரனோட வருமானம் எல்லாம் லட்ச கணக்கில் இருந்துச்சு…
இத பாத்து என் வீட்ல இருக்கவங்களுக்கு என்ன நெனச்சு கவலையும் சேந்து வந்திடுச்சு… அப்புறம் என் அம்மாக்கு எங்கிட்ட எதிர் பார்ப்பு அதிகமாகிடுச்சு…
அக்காக்கு கல்யாணம் முடிவாகி…கல்யாணத்துக்கு முந்துன நாள் ஒரே அழுகை…அவ அழுதது என்ன நெனச்சு, “வேலைக்கு போ!…அப்பா இன்னும் எத்தனை நாள் உன்ன பாத்துக்க முடியும்?…அப்பாக்கும் வயசாகுது……வண்டி ஓட்ட முடியல்ல…நீ அவங்கள நல்லா பாத்துக்கனும் …உன்ன நம்பி தா அவங்க எல்லாரும் இருக்காங்க”னு சொன்னா”…எனக்கு அப்ப ஒரு இனம் புரியா உணர்வு…இனிமே அரசாங்க வெளியவே நம்ப வேண்டாம் நம்ம ஏதாவது செய்யனும்னு நெனச்சேன்…

சில நாட்களில் , என் வீட்டில் இல்லாத அக்காவின் பொறுப்புகள் அவளின் நினைவுகளை அடிக்கடி இழுத்துவரும் …என் புள்ள இருந்தா… இத செய்வா அத
செய்வானு… அப்பாக்கு ஒரே ‘அக்காபுராணம்’ தான் .என் அக்கா வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் தா புரிஞ்சுது என் அக்கா எல்லாரு மனசிலயும் எந்த அளவு இருக்கானு…அதுக்கு அப்புறம் சரி ஒரு வேலைக்கு போவோம்னு போனேன்…அங்க எனக்கு பதினைந்து ஆயிரம் சம்பளம்… நா வேலைல சேந்த உடனே ஜாதகம் போட்டாச்சு…பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க…அம்மாகிட்ட கூட கேட்ட.. “இப்ப தா அக்கா கல்யாணம் முடிஞ்சுது…உடனே ஏன் எனக்கு பாக்குறீங்க? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னேன்…என் அம்மா சொன்னது எனக்கு கொஞ்சம் வியப்பா இருந்துச்சு… பொண்ணுங்களுக்கு சீக்கிரம் பண்ணிடலாம்…பையனுக்கு தா கஷ்டம்!னு சொன்னாங்க…

அப்புறம் தரகர் வர சொல்லி ஜாதகம் குடுத்தாங்க……அந்த தரகர், ஜாதகத்துல சம்பளத்தை பாத்து … “இந்த காலத்துல, இந்த சம்பளத்தை வச்சு உங்க பைய எப்படி குடும்ப நடத்துவானு நீங்க பொண்ணு தேடுறீங்க? பொண்ணு வீட்ல எல்லாம் லட்ச கணக்கில் சம்பளம் எதிர்பாக்குற கலம்மா …நீ இன்னும் எந்த காலத்துல இருக்க?”ன்னு கேட்டதும் என் அம்மா அழுதுகிட்டே இருந்தாங்க…..என் வண்டி சத்தம் கேட்டதும் ஓடி வந்து வாசலை பாக்குற அம்மா… சாப்பிட்டியானு கூட கேக்குல…என் அம்மா இப்படி போனது எனக்கு ரொம்ப வித்யாசமா இருந்துச்சு…எனக்கு எதோ யாருமே இல்லாத மாதிரி ஒரு உணர்வு..யாராவது என்ன பத்தி விசாரிச்சா ஒரே அழுகை தா…அதுக்கு அப்புறம் என்ன எதுக்கு எடுத்தாலும் மத்தவங்களோட ஒப்பிட்டு திட்ட
ஆரம்பிச்சுட்டாங்க….

இதல்லாம் கேள்வி பட்டு பக்கத்துக்கு வீட்டுக்காரங்க அவங்க பையகிட்ட சொல்லி வேற வேலைக்கு ஏற்பாடு செய்யறேன்னு சொன்னாங்க… ஆனா,
அவ என்ன விட சின்ன பைய!…அவன்கிட்ட வேலை வேணும்னு நிக்கிறது எனக்கு அசிங்கமா இருந்துச்சு!…இப்படியே நாலு வருஷம் ஓடிடுச்சு!
தீபாவளி சமயத்துல, நல்ல காலைல நேரம்…ஏழு மணிக்கெல்லாம் போன் வந்திடுச்சு… எனக்கு வேலைல பதவி உயர்வு கிடைச்சுதுனு…வீட்ல எல்லாருக்கும்
சந்தோசம்…அம்மா பக்கத்துக்கு வீட்ல இனிப்பு குடுத்து, “என்னமோ.. என் பையனுக்கு செல்ல குடுத்து கெடுத்துடேன், பொறுப்பில்லாம வளத்துட்டேன்னு
சொன்னிங்களே!…இப்ப பாருங்க… என் பைய புது ஆரம்பிக்கிற யூனிட்டுக்கு மேனேஜராம்… நீங்க… வேணும்னா பாருங்க.. இன்னும் ஒரு வருசத்துல ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கி, அதுல ரெண்டு அடுக்கு வீடு கட்டிடுவா… கிரக பிரவேசத்துக்கு மொத பத்திரிக்கை உங்களுக்கு தாணு” ஒரே ஆர்ப்பாட்டம்!….அப்பா .. “இனி இந்த குடும்பத்தை நீ காப்பாத்திடுவனு நம்பிக்கை வந்துடுச்சு பா..இப்படியே மேலும் மேலும் வளரனும்”னு சொன்னாரு….அன்னிக்கு நடந்தது எனக்கு ஒரு கனவு மாதிரி இருந்துச்சு….திடீர்னு! யாரோ உருட்டி எழுப்புர மாதிரி இருந்துச்சு…மாமா! எழுந்திருங்க…அம்மாச்சி கூப்பிடுறாங்கனு…அக்கா பொண்ணு எழுப்பினா…அட…

ச்சே! இவ்வளவு நேரம் கனவா?…எழுந்து போனா…அம்மாகிட்ட வழக்கம் போல திட்டு … சும்மாவே அக்காவை பத்தி ஓகோன்னு பேசுவாங்க …இதுல வீட்ல இருந்தே சம்பாதிச்சா சொல்லவே வேணாம் …. “பொம்பள புள்ள வீட்ல இருந்தே சம்பாதிக்கிறா,நாலு பேரு மதிக்கிற மாதிரி வாழனும்னு நினைக்கிறா,உன்ன நெனச்சு நா எப்படி எல்லாம் கனவு கண்டேன்,என் நெனப்புல மண்ணள்ளி போட்டியே!” அப்படி… இப்படினு..ன்னு புலம்பல் ….. வழக்கம் போல காதுல போட்டுக்காம நண்பன பார்க்க நா கிளம்பிட்ட…. அப்புறம் அவங்க வீட்ல பேசிகிட்டு இருக்கும்போது புதுசா ஆரம்பிக்கிற வானொலி அலைவரிசைக்கு தொகுப்பாளர் வேணும்னு விளம்பரம் கண்ணில் பட்டது. கொஞ்சம் சமபலத்துக்கு ஏன் பிடிக்காத வேலை செய்யனும், மனசுக்கு பிடிச்ச வேலையா இருந்தா நல்ல இருக்கும் …கடவுள் அதுக்கு கூட கண்ண திறக்க மாட்டேங்குறான்…என்ற ஆதங்கத்துடன் இருந்தவனுக்கு, கடவுள் காட்டிய அந்த பக்கம் , மூடிய சுரங்க பாதையில் எங்கோ வெளிச்சம் இருப்பது மனதுக்கு எவ்வளவு ஆறுதலை தருமோ …அது போலத்தான் இருந்தது. எல்லா வெறும் வாய்ன்னு சொல்லறாங்களே… நமக்கு பேசறது தா திறமையோ ! ஒரு முறை முயற்சி பண்ணி பாப்போம்னு வந்துட்டேன்,

இன்னைக்கு கண்டிப்பா நல்லா பண்ணிடனும் என்று யோசித்தவாரே இருந்தான். அதற்குள் அந்த மனிதர் உள்ளே வந்தார்.. அங்கிருந்த நாற்காலியில் வந்து நான் தான் எல்லாம் என்ற கர்வத்துடன் இருப்பது போல் அமர்ந்தான்.உங்கள பத்தி சொல்லுங்க ப்ரோ..என்றார்..இவனும் இவனது சரித்திரத்தை கூறினான். உங்க வீடியோ அண்ட் வாய்ஸ் நைஸ் ..குட் ..என்றார் .. எதோ பெரிதாய் சாதித்தது போல் உணர்வு அவனுக்கு..சரி ப்ரோ நா சொன்ன மாதிரி தயாரா? ஸ்டார்ட் என்றவருக்கு..சரி என்று கூறிவிட்டு அங்கிருந்த ஒலிபெருக்கியை தனது உயரத்துக்கு மாற்றிக்கொண்டான் … எதையோ பேசி..அப்படினா!உடனே தொடர்பு கொள்ளுங்கள்!…. என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
நீங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் 8**30015** இது “செல்லப்பிள்ளைக்கான தேடல்”… நீங்க கேட்டுக்கொண்டு இருப்பது,” தமிழ் எப் .எம் 103.7” ஹலோ!….உங்க பேர்… என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தான் .

அங்கிருந்த மனிதர் குட்..கீப் இட் அப் … கொஞ்சம் பயம் இருக்கு…போக போக சரி ஆகிடும்…நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்த ..என்று அனுசரித்தார்.. இன்னொரு மனிதரை பார்க்கும் படி அனுப்பி விட்டு அவரின் அறைக்குள் சென்றார்… அங்க தா கடவுள் கதவை தெறந்து வச்சிருப்பாரு போல…… இனி பிரசன்னா, மக்களின் செல்ல பிள்ளை…

நித்யா நரேஷ்குமார், அந்தியூர்

பித்தலாட்டம் - சிறுகதை

வண்டியூர் கிராமத்தில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் ஒரு பெரிய கட்சியின் சார்பாக தேர்தலில் களம் இறங்கினர்.

பார்த்திபன் ஊர் தலைவர் பதவிக்கு நின்றார். அவரது சகாக்கள் கவுன்சிலர் பதவிகளுக்கு நின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கட்சி சார்பாக பலநபர்களை தேர்தல் களத்தில் நிற்கச் செய்திருந்தனர்.

பார்த்திபனும் அவரது சகாக்களும் தங்களுக்கு ஓட்டளிக்க வேண்டி வீடு வீடாக, பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள், “ஒவ்வொரு வீட்டுக்கும், ஆயிரம் ருபாய் கொடுத்து விடுவோம்!” என்று பேசிக் கொண்டு, ஒவ்வொரு வீடாக, பணப் பட்டுவாடா செய்தனர்.

அந்த கிராமத்தில் பாபு எனும் இளைஞன் அவனது மனைவி உமாவோடு வாழ்ந்து வந்தான். பார்த்திபனிடம் ஓட்டுக்காகப் பணம் வாங்காத ஒரு சிலரில் பாபுவும் ஒருவன். உள்ளாட்சி தேர்தலும் நடைபெற்று அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. பார்த்திபன் வெற்றி பெற்று ஊர் தலைவர் ஆனார். அவரது சகாக்கள் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் ஆகினர்.

ஒருநாள் ஊர் மக்களோடு சேர்ந்து பாபு மற்றும் அவனது மனைவி உமா, ஊர் தலைவர் பார்த்திபனிடம், ஊரின் பிரச்சனைகள் அடங்கிய புகார் மனு அளித்தனர். பாபுவை ஊர் தலைவர் பார்த்திபன் தனியாக அழைத்தார். பின்னர் புகார் மனுவை கிழித்து விட்டு குப்பை கூடையில் வீசினார்.
பிறகு பாபுவிடம், “தம்பி! மக்கள் பிரச்சனையை தீர்த்து வெச்சிட்டா! நாங்க எப்படி எலெக்சன்ல செலவழிச்ச பணத்தை திரும்ப மீட்கிறது? இந்த மக்கள், அந்த பணத்தை திருப்பி கொடுப்பாங்களா?” என்று கேள்வி கேட்டார்.

“ஐயா! மக்கள் ரொம்ப பாவம்! உங்களை நம்பி ஒட்டு போட்டு ஜெயிக்க வெச்சிருக்காங்க! நீங்க ஊருக்கு நல்லது பண்ணா, அடுத்த தடவை இதை விட பெரிய பதவில உங்களை உட்கார வைப்பாங்க!” என்று பாபு கூறினான்.

“தம்பி! உனக்கும் உன் பொண்டாட்டிக்கும், எவ்வளவு பணம் வேணாலும் கொட்டி தரேன்! வாங்கிட்டு, ராஜா மாதிரி செட்டில் ஆகிடு! சந்தோஷமா இரு! எதுக்கு இந்த வீணா போன ஜனங்களோட சேர்ந்து, உன் நேரத்தையும் உடம்பையும் கெடுத்துகிற? இந்த ஜனங்களை விட்டு தள்ளு!” என ஊர் தலைவர் பார்த்திபன் கூறுகிறார்

“ஐயா! முடியாதுங்க! மக்கள் பிரச்னையை, தீர்க்காம இந்த இடத்தை விட்டு போக மாட்டேன்” என பாபு கூறினான். அதனைக் கேட்டு கோபம் அடைந்த பார்த்திபன் “ஏன்டா! அறிவு இல்லை? ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டியா?” என பாபுவை திட்டி, மேஜையில் உள்ள சொம்பில் இருக்கும் தண்ணீரை பாபுவின் மேல் ஊற்றினார்.

இதனால் பொறுமை இழந்து, கோபம் அடையும் பாபு “டேய்!” என ஆவேசமாக கூச்சலிட்டான். பார்த்திபனின் சட்டையை பிடித்து அடிக்க முயன்றான்.
ஊர் தலைவர் பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள், பாபுவை மோசமாக போட்டு அடித்தனர். போலீசை வரவழைத்து, போலீஸ்காரர்களிடம் பாபுவை ஒப்படைத்தனர். போலீஸ்காரர்கள் பாபுவை கைது செய்து அழைத்து சென்றனர். உமா மற்றும் அன்கிருந்த மக்கள் கூட்டத்தினர் அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போலீஸ்காரர்கள் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அந்த இடமே போர்க்களமாக மாறியது. நடந்தவற்றை அதே கிராமத்தைச் சேர்ந்த விவேக் மற்றும் அவனது நண்பர்கள் வீடியோ எடுத்து ‘பேஸ்புக்’, ‘ட்விட்டர்’, ‘ஷேர்சாட்’, ‘இன்ஸ்டாகிராம்’ என சமூக ஊடக செயலிகள் மற்றும் வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளை பரப்பி விட்டனர். அச்செய்தி ஊரெல்லாம் நாடெல்லாம் வைரலாக பரவியது. அது மாநில முதலமைச்சர் வரை சென்றது.

முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையின் முடிவில் பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பதவி பறிபோனது. மீண்டும் ஒரு வருடம் கழித்து உள்ளாட்சி தேர்தல் புதிதாக நடைபெற்றது. அத்தேர்தலில் களமிறங்கி பாபு வெற்றி பெற்று, புதிய ஊர் தலைவராகவும் உமா துணை தலைவராகவும் விவேக் மற்றும் அவனது நண்பர்கள் புதிய கவுன்சிலர்களாக பதவியேற்றனர்.

அதன்பின் அந்த கிராமம் அபார வளர்ச்சி அடைந்து கிராம மக்கள் மகிழ்ச்சியோடு வாழ தொடங்கினர்.

M.மனோஜ் குமார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *