நிலவிலா வானம் சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய கதை – நிலவிலா வானம் சிறுகதை

மார்கழி மாதக் குளிர் சில்லென்று உடலை ஊடுருவியது. கருக்கலிலேயே எழுந்து பரபரவென வேலையை ஆரம்பித்தாள் மல்லிகா.

கிராமத்து மல்லிகாவிற்கு சென்னை, கல்யாணமான புதிதில் ஒரு பிரமிப்பை கொடுத்தது வாஸ்தவம்தான்.கிராமத்தில் வளர்ந்ததால் உழைக்க அஞ்சியவளில்லை . அவள் கணவன் வேலுவும் நல்ல உழைப்பாளி குறைந்த சம்பளத்தில் டீக்கடையில் வேலை பார்த்து வந்தான்.

“எத்தனை நாள்தான் அடுத்தவங்க கிட்ட கைகட்டி வேலை பார்க்க போறீங்க… நாம சுயமாக உழைத்து முன்னேறினாத்தான் நல்லா இருக்க முடியும்” என்றாள் மல்லிகா.
“இட்லி கடை வேணா போடலாம்.. அதை தவிர எனக்கு வேற ஒன்னும் பெருசா தொழில் தெரியாது” என்றான் வேலு தயக்கத்தோடு.

“அப்ப தள்ளுவண்டியில, இட்லி கடை போடலாம்… தள்ளுவண்டி வாங்கிக்குவோம்.இட்லி, தோசை, சட்னி, சாம்பார்,முடிஞ்சா கொஞ்சம் வடையும் சேர்த்து போடுவோம் .நானும் சேர்ந்து உழைக்கிறேன்.நீங்க தைரியமா ஆரம்பிங்க” என்றாள் மல்லிகா.சொன்னதோடு நிற்காமல் தன் தாய் வீட்டு சீதனமாக இருந்த ஒரே ஒரு தங்க சங்கிலியையும் விற்று காசாக்கி அவன் கையில் கொடுத்தாள்.

அவளுடைய தன்னம்பிக்கை வார்த்தை வேலுவுக்கு தைரியத்தை கொடுக்க தள்ளுவண்டி வியாபாரத்தை கணவனும் மனைவியுமாக ஆரம்பித்தனர். அதிகாலையிலேயே கடையை ஆரம்பித்துவிடுவார்கள். சுடச்சுட காப்பியும், இட்லி ,தோசையும் தரமாக கொடுத்ததால், வியாபாரம் களைகட்டியது. மல்லிகா கட்டும் செட்டு மாக குடித்தனம் நடத்தியதில் சொந்தமாய் ஒரு சிறு குடிசை போட முடிந்தது அவர்கள் அன்பாய் வாழ்ந்த தாம்பத்தியத்திற்கு சாட்சியாய் அபிராமி, அச்சுதன் இருவரும் பிறந்தனர்.குழந்தைகள் பிறந்த போது கூட பத்தே நாளில் மல்லிகா வேலை பார்க்க தொடங்கி விடுவாள். அவள் மனவுறுதி வேலுவுக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது.

அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் கடை 10 மணி வரை வியாபாரம் போகும் .பிறகு வீட்டிற்கு போய் மற்ற வேலைகளையும் ,கடைக்கு தேவையானவற்றை ரெடி பண்ணுவார்கள்.
“ராத்திரி இட்லி, தோசையுடன், சப்பாத்தியும் சேர்த்து வியாபாரம் பண்ணினா என்னையா?” என்றாள் மல்லிகா .

“சட்னி, சாம்பாரோட, குருமா, சப்பாத்தி எல்லாம் வீட்டிலேயே செஞ்சு எடுத்துட்டு போயிடுவோம்… இட்லி தோசை வண்டியிலேயே சூடாக போடுவோம்”என்றான் வேலு

கூட்டம் நன்றாக வர …இரவு கடை முiடிய பதினொரு மணி ஆகிவிடும். பிறகு வீட்டிற்கு வந்து மற்ற வேலைகளை பார்ப்பார்கள். கடை வியாபாரம் நன்றாக போக , அரசாங்கம் உதவித் தொகை தர…ஒரு சிறுவீடு சொந்தமாக கட்டிக்கொண்டார்கள்.

அக்கம் பக்கத்திலிருந்தவர்களுக்கே அவர்கள் வளர்ச்சி பெரும் பொறாமையை உண்டாக்கியது. யார் கண்பட்டதோ… சரக்கு வாங்க சென்ற வேலுவை விபத்து ரூபத்தில் காலன் கொண்டுபோக… இடிந்து போனாள் மல்லிகா.

ஓரிரு மாதங்கள் அழுது கொண்டிருந்தவள்…. குழந்தைகள் இருவரையும் நல்லபடியாக வளர்க்க வேண்டுமே… குழந்தைகளை பட்டினி போட முடியுமா? மனதைத் தேற்றிக் கொண்டாள் மல்லிகா, தன் கணவன் தன்னிடம் இரு ஜீவன்களோடு சேர்த்து தான் நேசித்த தொழிலையும் அல்லவா விட்டுச் சென்றிருக்கிறான். அழுது புலம்பி கொண்டிருப்பதில் அர்த்தமில்லை… ஆறுதல் சொல்லும் யாரும் வாழ்நாள் முழுவதும் துணை வரப்போவதில்லை. தன் சுமையை தான் தானே சுமக்க வேண்டும்.

“தந்தை இறந்த இரு செல்வங்களையும் நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவது என் கடமை” இயல்பாகவே அவளிடமிருந்த மன உறுதி பல மடங்கானது.கடையை திரும்ப திறக்க ஏற்பாடுகளை ஆரம்பித்தாள். “புருஷன் செத்து நாளாகல அதற்குள் வியாபாரத்தை ஆரம்பிக்கிறா? “என்று அக்கம் பக்கத்தார் பேச்சு அவள் காதில் விழவில்லை. இலக்கு ஒன்றே கண்ணில் தெரிய.. தனது கடையை திரும்ப ஆரம்பித்தாள்.தனக்கு உதவியாக தெரிந்த பெண்ணை வைத்துக் கொண்டாள்.

அதற்கும் வந்தது சோதனை. அன்று அதிகாலையிலேயே சரசரவென நிறைய கார்கள் வந்து நிற்க, அதிகாரிகள் நிறைய பேர் அந்த இடத்தை பார்வையிட்டனர்.அதில் ஒருவர் அவளிடம் வந்து “அம்மா.. இந்த இடத்தில கடையெல்லாம் இனி போடக்கூடாது .இங்கு பாலம் கட்டப் போறோம். வேலையை ஆரம்பித்து விடுவோம் நாளைக்கு வரும்போது கடை இங்க இருக்க கூடாது “என்றார். அதிர்ந்து போனாள் மல்லிகா.

வீட்டிற்கு போனவள் ,”கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை? தலை என்று பார்த்து பாரத்த வைக்கிறியா?'”என்று மருகினாள். என்ன செய்வது என்று ஏங்கியவள்.. ஒரு முடிவுக்கு வந்தாள். மறுநாள் அருகிலிருந்த அரசு மருத்துவமனை அருகே கடையை போட்டாள்.

பரந்து விரிந்திருந்த வேப்பமர நிழலிலே கூரையாக.. தள்ளுவண்டி வியாபாரம் களைகட்டியது… விதியே மல்லிகாவிடம் அடிவாங்கி ஓடியது… மல்லிகாவின் வாழ்க்கை மலராய் மணம் வீச விட்டாலும் சருகாய் காயாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.அவள் தன்னம்பிக்கையால் … … – நிலவிலா வானம் சிறுகதை

(வீதியோரம் வாழ்க்கைக்காக போராடும் பல மல்லிகாகளுக்கு இக்கதை சமர்ப்பணம் …)

தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...