கதை நீரோடை (ஒரு பக்க கதைகளின் தொகுப்பு)
மனோஜ்குமார் அவர்கள் எழுதிய ஒரு பக்க கதைகளை வெளியிடுவதன் வாயிலாக நீரோடையில் கதாசிரியரின் பயணம் சிறப்பாக நகர்கிறது.
வீட்டுக்காரர்
தனது மனைவியோடு வாடகை வீட்டை பார்த்தார் ராமசாமி.
“என்னங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அட்வான்ஸ் வாடகை எவ்வளவுன்னு
கேட்டு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துடுங்க.” அவரது மனைவி துரிதப்படுத்தினாள்.
“வாடகை ஐந்தாயிரம். அட்வான்ஸ் ஒரு லட்சம்” சொன்னார் வீட்டுக்காரர்.
“சரிங்க நாங்க போன் பண்ணுறோம்” என்றபடி அவரது அலைபேசி எண்ணை
வாங்கிக் கொண்டு புறப்பட்டார் ராமசாமி.
“ஐம்பதாயிரம் அட்வான்ஸ்ன்னா வாடகைக்கு குடி போயிருந்திருக்கலாம். 20 மடங்கு
அட்வான்ஸ் கேட்டா யார் போவா?” சலிப்பாக சொன்னார் ராமசாமி.
“என்னங்க! வாடகையை பாக்குறப்போ குறைவுதான். அட்வான்ஸ் தான் அதிகம். நம்ம
பேங்க் அக்கவுண்ட்ல இருக்கிற பணத்தை எடுத்து, இந்த வீட்டுக்கே வாடகைக்கு குடி
போலாங்க” அவரது மனைவியின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் வாடகைக்கு
குடியேறினார்.
ஒரு வருடம் கழிந்து, அவருக்கு பணி மாற்றம் கிடைக்கவே வீட்டை காலி செய்து
விட்டு அட்வான்ஸ் தொகையை திரும்பக்கேட்டார் ராமசாமி.
வீட்டுக்காரர் வாங்கிய ஒரு லட்சத்தோடு 5000 சேர்த்து ஒரு லட்சத்து 5 ஆயிரம்
பணத்தை கொடுத்தார். ராமசாமி ஆச்சரியப்பட்டு “எதற்கு இந்த ஐந்தாயிரம்?” என்று
கேட்டார்.
“இது நீங்க கொடுத்த அட்வான்ஸ் கான வட்டி. வீடு வாடகைக்கு விடுறப்போ
வாடகை கொடுக்காம போனாலோ ஏதாச்சும் டேமேஜ் ஆனாலோ தான் அட்வான்ஸ்
கேக்கறாங்க, நான் உங்ககிட்ட வாங்குன அட்வான்ஸ் புதுசா வீடு கட்டுனதுனால
கொஞ்சம் கடனாய் போச்சு. அத சரி கட்ட தான் அட்வான்ஸ் தொகையை அதிகமா
கேட்டேன். இதே பணத்தை நீங்க வங்கியில போட்டு இருந்தா, இதைவிட குறைவா
தான் வட்டி கிடைக்கும்.
வீட்டுக்காரர் சொல்லச் சொல்ல “இந்த காலத்துல இப்படி ஒரு வீட்டுக்காரரா?”
அவரைப் பார்க்கப் பார்க்க பெருமையாக இருந்தது ராமசாமிக்கு.
மனோஜ் குமார்
தன்னம்பிக்கை
“ஏன்டா கிளாசுக்கு லேட்டு? போய் வெளியே நின்னு கிளாசை
கவனி”கண்ணனை திட்டினார் ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்பு ஆசிரியர். அடுத்த நாளும்
அவன் வகுப்புக்கு தாமதமாக வந்தான்.
”இன்னைக்கும் கிளாசுக்கு லேட்டா? கிளாஸ் முடிஞ்ச பிறகு, என்னை
தனியா வந்து பாரு!” கோபமாகச் சொன்னார் ஆசிரியர்.
வகுப்பு முடிந்த பிறகு,
“கிளாசுக்கு நேரத்துக்கு வராத நீ, எப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆன பிறகு,
நேரத்துக்கு களத்துக்கு போய், மக்களோட பிரச்னையை தீர்ப்ப? ஐ.ஏ.எஸ் அதிகாரி
வேலையில, டைமிங் ரொம்ப முக்கியம். என்ன உன் பிரச்சனை..?”கேட்டார்
ஆசிரியர். அவன் தலைகுனிவை பதிலாகத் தந்துவிட்டு கிளம்பினான்.
”நீ படிச்சா என்ன… படிக்காட்டி என்ன” அன்றிலிருந்து அவர்
கண்டிப்பதில்லை.
பரீட்சை முடிந்து ரிசல்ட் வர கண்ணன் முதல் மாணவனாக தேர்வாகி
இருந்தான். பயிற்சி வகுப்பு பாராட்டு விழாவில்.
“தினமும் லேட்டா வர்ற கண்ணன் மேல எனக்கு கோபம். ஒருநாள்
கார்ல வந்தப்போ இவன் சந்தைல மீன் வியாபாரம் செஞ்சுகிட்டு இருந்தான்.
அதுக்கப்பறம் பம்பரம் மாதிரி சுழன்று குளிச்சி உடை மாற்றி கிளாசுக்கு
வருவான். அந்த நிகழ்வ பார்த்த பிறகு இவன ஏன் லேட்டுன்னு திட்டல,
இவனோட விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இவன ஐ.ஏ.எஸ்
அதிகாரி ஆக்கியிருக்கு” அவர் சொல்லி முடிக்கவில்லை கைதட்டல்கள்
விண்ணைப் பிளந்தது.
மனோஜ் குமார்
போங்கு
“என்ன சார் இது? வீட்டு வாடகை அக்ரீமெண்ட் பத்திரத்தில, என் பெயர்
போடாம வேற ஒருத்தர் பெயர் போட்டிருக்கு. நான் தானே டெனன்ட்.
நான் தானே மாசாமாசம் வாடகை தரேன். அப்புறம் எனக்கு என்ன
மரியாதை? அப்புறம் வீடு காலி செய்யும்பொழுது, அவருக்கு தான்
அட்வான்ஸ் பணம் போகும். எனக்கு ஒரு நயா பைசா வந்து சேராது”
வீட்டு உரிமையாளரை கேட்டான் அருண்
“எனக்கு தெரியாது மிஸ்டர் அருண். உங்க பிரண்ட் பிரபு தான் அப்படி
போட சொன்னாரு!” என்று பதிலளித்தார் வீட்டு உரிமையாளர்
அலைபேசியில் அழைத்து, தனது நண்பன் பிரபுவிடம் ஏன் இப்படி
செய்தான் என கேட்டு காரணத்தை தெரிந்து கொள்ள முயற்சித்தான்
அருண். ஆனால் பிரபு அவன் அழைப்பை ஏற்கவில்லை
அலைபேசி எடுப்பதில்லை என்று நண்பன் பிரபு வீட்டுக்கு அடிக்கடி
நேரில் சென்று வந்தான். ஆனால், பிரபு அவன்
செல்லும்பொழுதெல்லாம் இருப்பதில்லை
அவன் வீட்டில் உள்ளவர்களை விசாரிக்கும்பொழுது, “அவர் வீட்டுக்கே
சரியா வரதில்லை. நிறைய நாள் வேற வீட்டுல, வெளியே
எங்கேயாவது தங்கிடுவாரு!” என்று பதிலளித்தார்கள்
ஆகையால், வெறுப்பில் அலைந்து திரிந்து நொந்துவிட்டான். அருண்
இந்த வெறுப்பில், வீட்டு வாடகை தருவது நிறுத்தினான்.
வீட்டு உரிமையாளர் மூன்று மாதங்கள் கழித்து, அருணை
அலைபேசியில் அழைத்தார்
“கரெக்டா வீட்டு வாடகை தருவீங்க! என்ன ஆச்சி? ஏன் திடீர்னு மூணு
மாசம் வாடகை தரது நிறுத்திதீங்க?” வீட்டு உரிமையாளர் அருணை
கேட்டார்
“சார்! நான் இனிமேல் வீட்டு வாடகை தரதுல எந்த பிரயோஜனமும்
இல்லை. இனிமே ஒத்துவராது. நான் வீட்டை காலி செய்றேன். நான்
வேற ஒரு வீட்டை பார்த்துக்கிறேன். என்னை நீங்களும், பிரபுவும்
நல்லா ஏமாத்துறீங்க! வீட்டு அட்வான்ஸ் மட்டும் கழிச்சிட்டு கொடுங்க”
பதிலளித்தான் அருண்
அருண் வீட்டை காலி செய்தான். அவன் வீடு காலி செய்த பிறகு, யாரும்
அந்த வீட்டுக்கு வரவில்லை. ஆகையால், சரியான வருமானம்
வராமல், சரியான டெனன்ட் கிடைக்காமல், வீட்டு உரிமையாளர்
கஷ்டப்பட்டார். இதற்கிடையில், அவரின் மனைவிக்கு மோசமான
பக்கவாதம் நோய் வந்து வாட்டியது
“அருண் என்னை மன்னிச்சுடு பா! நீ திரும்பவும் வா பா! உன்னை
ஏமாத்துனதுக்கு கடவுள் எனக்கு தண்டனை கொடுத்துத்தாறு. சரியான
வருமானம் இல்லாம நாறுறேன். நீ வீட்டை காலி செய்த பிறகு, எனக்கு
யாரும் சரியான டெனன்ட் கிடைக்கல. என் மனைவிக்கு மோசமான
பக்கவாத நோய் வந்திருக்கு. அந்த நோய்க்கான டிரீட்மென்டுக்கு
செலவு செய்ய கூட கையில தேவையான பணம் வேற இல்லை” தன்
தவறை உணர்ந்து, வீட்டு உரிமையாளர் அருணிடம் கெஞ்சினார்
“என்னை மன்னிச்சிடுங்க சார்! எனக்கு குடியிருக்க புது வாடகை வீடு
கிடைச்சாச்சு. இனிமேல எந்த டெனன்ட்டையும் இப்படி ஏமாத்தாதீங்க!
உங்களுக்கு உதவி செய்ற நிலைமையில கூட நான் இல்லை. என்
பணம் என் செலவுக்கே சரியா போகுது” அருண் சொன்னான்
மனோஜ் குமார்