மின்னிதழ் மார்ச் 2024

நீரோடை கதை சொல்லி போட்டிக்கு நல்ல வரவேற்பை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு நன்றி. முதல் கட்ட போட்டி நிறைவுற்று முடிவுகள் வெளியாகி நீரோடை இலக்கிய விழாவில் தங்க நாணயம் மற்றும் கதை சொல்லி விருதுகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் கட்ட போட்டி நடைபெற்று வருகிறது பலர் கதைகளை அனுப்பி வருகின்றனர். கதைகளை நமது வளையொலியில் (YouTube) வெளியிட்டு வருகிறோம்.. – maatha ithazh march 2023

நீரோடை மாத மின்னிதழ்

சுய முன்னேற்ற சிந்தனைகள் - நீரோடைமகேஸ்

கவிஞர் அறிமுகம் - சுபாஷினி

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்

மகவாய் தவழும்போதும்
மகளாய் வளரும்போதும்
மங்கையாய் மலரும்போதும்
தெரிவதில்லை அவள் சிறகுகளின் நீளம்,
மனையாளாய் மணமேடை அக்னியில்
எரியும்போதுதான் உணர்கிறாள்.

திருமணம் தவறெனச் சொல்லவில்லை,
சிலருக்கு தலைவி பட்டம்
பலருக்கு அபாக்கியவாதி,
மலடி, தெண்டச்சோறு
எனப் பல பட்டங்கள்.

சோதிக்க ஆயிரம் இருந்தும்,
சாதிக்க பாயிரம் தேடுகிறாள்!
பெண் உரிமைக்கு பல நூறு
சட்டங்கள் இருந்தாலும்,
ஆணுக்கு சமூகம் வகுத்த
சௌகரியங்களே சட்டமாகிறது.

வீட்டில் விறகாய் எறிந்தவளுக்கு
உயிர் கொடுத்தான் எம் முண்டாசுக்கவிஞன்.
பெண் இனம் போற்றுவோம்
பெண் உரிமை காப்போம்
பெண்கள் தின வாழ்த்துக்களோடு.

 – நீரோடைமகேஸ்

அரைப் பிறந்தநாள் – ஒரு பக்க கதை

பலூன் தோரணம்  அரை வட்ட வடிவில் அந்த பிரம்மாண்டமான பங்களாவின்   வாசலை அலங்கரித்தது …உள்ளே நுழைந்ததும் உள்ள அலங்காரங்கள் அரை வட்ட வடிவில் பிரகாசிக்க …
சிறிய மேடையின் பின்னே இருந்த அலங்கார பூ வடிவமும் அரை கேக் வடிவத்தை எடுத்துக் காட்ட…மின்விளக்குகளால் அந்த தோட்டமே ஜொலித்தது ..

சிம்பிளான அலங்காரத்தில் வந்தவர்களை வரவேற்று கொண்டிருந்தாள் மங்களம்.. அவளுக்கு சினேகிதிகள் அதிகம் கிடையாது என்றாலும் மருமகள் அபர்ணாவிற்கும்
மகன் அபிஷேக்கும் நிறைய சினேகிதர்கள். அன்று பேரக் குழந்தை ஆர்யாவின் அரை வருட பிறந்தநாள். அதாவது குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகும் நிகழ்வைக் கொண்டாடும் ஒரு வைபவம்.

மங்களாவுக்கு அது மனதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வாக இருந்தது. ஒரு வருடம் வரையில் காத்திருந்து, பிறந்தநாள் கொண்டாடலாம் என்று சொல்லி பார்த்தாலும் மகனும் ,மருமகளும் ஒத்துக்கொள்ளவில்லை.அவசரமான இந்த அரை பிறந்தநாள் எதற்கு என்று மனதில் தோன்றினாலும் அதை வெளியே சொல்ல முடியாது . காலத்தின் மாற்றம் …அதற்காக பிள்ளைகளையும்  விட்டுக் கொடுக்க முடியாது, என்று எல்லோரையும் உபசரித்துக் கொண்டிருந்தாள்.

பாதி வடிவத்தில் வடிவமைக்கப் பட்டிருந்த கேக் மேஜையை அலங்கரித்தது .குழந்தை சார்பாக பெற்றோர் கேக்கை வெட்ட ஆரவாரம் வீட்டை அதிர வைத்தது.

தன் சார்பாக தான் அழைத்திருந்த ஒரே விருந்தாளியான தன் அண்ணன் வர, ஓடிச்சென்று மங்களம் அவரை உபசரித்து உள்ளே அழைத்து வந்தாள். குழந்தையை வாழ்த்தி பரிசு கொடுத்தவர் மங்களாவை அழைத்துக்கொண்டு பூஜை அறைக்கு நடந்தார் .

தன் கையிலிருந்த ஒரு ஜோடி தங்க வளையலை மங்களத்திற்கு பரிசளித்துவிட்டு, சுவாமி முன் இருந்த விபூதியை எடுத்து அவள் நெற்றியில் இட்டு, குங்குமத்தை வைத்து, “தீர்க்க சுமங்கலியாக நீடூழி வாழவேண்டும்” என்று வாழ்த்தினார் அன்று 60 வது வயது பிறந்தநாள் காணும் தன் தங்கையை…அரை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அறுபதை மறந்த  உறவுகள் சத்தம்  காதைப் பிளந்தது.

தி.வள்ளி, திருநெல்வேலி.

You may also like...