திருக்குறள்

அதிகாரம் - 110 முகப்பு / Home

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

(1091) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.

கலைஞர் மு. கருணாநிதி - காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

(1092) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

கலைஞர் மு. கருணாநிதி - கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

(1093) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.

கலைஞர் மு. கருணாநிதி - கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

(1094) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

கலைஞர் மு. கருணாநிதி - நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

(1095) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

கலைஞர் மு. கருணாநிதி - அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

(1096) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - (பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.

கலைஞர் மு. கருணாநிதி - காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

(1097) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - (ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

கலைஞர் மு. கருணாநிதி - பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்

அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

(1098) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.

கலைஞர் மு. கருணாநிதி - நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

(1099) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

கலைஞர் மு. கருணாநிதி - காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

(1100) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

கலைஞர் மு. கருணாநிதி - ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன

Previous | Next