அதிகாரம் - 77முகப்பு / Home
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
(761) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.
கலைஞர் மு. கருணாநிதி - எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும்
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
(762) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.
கலைஞர் மு. கருணாநிதி - போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
(763) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
கலைஞர் மு. கருணாநிதி - எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
(764) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - (போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.
கலைஞர் மு. கருணாநிதி - எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
(765) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.
கலைஞர் மு. கருணாநிதி - உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
(766) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.
கலைஞர் மு. கருணாநிதி - வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
(767) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.
கலைஞர் மு. கருணாநிதி - களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
(768) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.
கலைஞர் மு. கருணாநிதி - போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
(769) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.
கலைஞர் மு. கருணாநிதி - சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
(770) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.
கலைஞர் மு. கருணாநிதி - உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது