குறுந்தொகை பகுதி 6

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 6

kurunthogai paadal vilakkam

செய்யுள் விளக்கம்

  1. அவனே மணப்பான்

பாடியவர்: குற்றியனார்
துறை: தலைவன் விரைவில் மணந்து கொள்ளவில்லையே என்று வருந்தும் தலைவிக்கு ஆறுதல் மொழி கூறிய தோழிக் கூற்றான நெய்தல் திணைப் பாடல்:

“கூன்முன் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நாலறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும், தூமணல் சேர்பனை
யானும் காதலென்; யாயும் நனிவெய்யன்;
எந்தையும் கொடீஇயர் வேண்டும்;
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே”

விளக்கம்: வளைந்த முள்ளையுடைய முள்ளிச் செடியின் மிகுந்த குளிர்ச்சியுள்ள கரிய மலர்கள், தொடுத்த நூல் அறுந்து சிந்தின முத்துக்களை போல காற்றால் சிதறி நீர் துறைகளில் எல்லாம் பரந்து கிடக்கின்ற வெண்மையான மணல் பரந்த கடற்கரை தலைவனை உன் கணவனாக்க நானும் விரும்புகிறேன். நம் தாயும் அவனை விரும்புகிறாள். தந்தையும் அவனுக்கே மணம் புரிந்து கொடுக்கவே விரும்புகின்றார். பழி தூற்றும் இவ்வூரில் உள்ளவர்களும் உன்னை அவனோடு இணைத்து உனக்கும் அவனுக்கும் காதல் உண்டென்று மொழிகின்றனர்.
கருத்து: நீ விரும்பியவனுக்கே உன்னை மணம் செய்து வைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆகையால் நீ வருந்தாதே


  1. நான் செய்த முயற்சி

பாடியவர்: பனம்பரனார்
துறை: மணம் கேட்டு மகிழ்ந்த தலைவியை பார்த்து, “இந்த மகிழ்ச்சி என்னால் நேர்ந்தது” தோழி கூறிய குறிஞ்சித் திணைப் பாடல்:

“ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பில்
சூர், நசைந்து அனையையாய், நடுங்கல் கண்டே
நரத்தம் நாறும் குவையிரும் கூந்தல்!
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை!
பரிந்தனென் அல்லனோ இறைஇறை யானே”

விளக்கம்: நரந்தம் பூவின் மணம் வீசும் அடர்ந்த நீண்ட கூந்தலையும், வரிசையாக விளங்குகின்ற வெண்மையான பற்களையும் உடைய பெண்ணே! தன்னிடம் பொருந்திய ஆண்யானை மிதித்த பள்ளத்திலே தண்ணீர் நிறைந்து காணப்படும். மலையிலுள்ள தெய்வத்தால் விரும்பப் பட்டதை போன்றவளாய் நீ நடுங்குவதைக் கண்டு நான் பலதடவை உன் துயத்தை கண்டு வருந்தி உன் தாயாரிடம் உண்மையை உரைத்தேன் அல்லவா?
கருத்து: உன் துன்பத்தை கண்டு பொறுக்காமல் நான் உன் தாயாரிடம் உண்மையை உரைத்தேன்.


  1. உறுதிமொழி எங்கே

பாடியவர்: கோப் பெருஞ்சோழன்
துறை: மணம் புரியாமல் காலங்கடத்திய தலைவனை பார்த்து தோழி கூறிய மருதத்திணை பாடல்:

“எம் அணங்கினவே மகிழ்ந! முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறிஅயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம்ஊர் வியன்துறை
நேருஇறை முன்கை பற்றிச்
சூர் அரமகளிரொடு உற்ற சூளே”

விளக்கம்: தலைவனை வீட்டின் முன் அரும்பு முற்றி மலர்ந்த புன்க மரத்தின் பூக்கள் சிதறி கிடக்கின்ற மணலின் காட்சி, வேலனால் அமைக்கப்பட்ட முருகனுக்கு வெறியாட்டு எடுக்கும் இடங்களிலெல்லாம் செந்நெல்லால் ஆகிய வெண்மையான பொரிகள் சிந்தியிருப்பதை போல காணப்படும். இத்தகைய மணல் மேடுகள் பொருந்திய பெரிய நீர்த்துறையிலே என் தலைவியின் முன் கையைப் பற்றி, நேர்மை தவறியவர்களுக்கு அச்சம் தரும் தெய்வ மகளிரை சாட்சி வைத்து நீ கைறிய உறுதிமொழி இப்பொழுது எம்மை துன்புறுத்தின.
கருத்து; நீ சொல்லியபடி விரைவில் மணம் கொள்; அப்பொழுது தான் எம் துன்பம் தொலையும்.


  1. யான் இங்கே என் நலன் அங்கே

பாடியவர்: மீனெறி தூண்டிலார்
துறை: தலைவன் மணம் புரியாமல் காலத்தை கடத்தியதால் ஏற்பட்ட துன்பத்தை தலைவி தோழிக்கு கூறிய குறிஞ்சித் திணை பாடல்:

“யானே ஈண்டையேனே, என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்,
கான யானை கைவிடு பசும்கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே”

விளக்கம்: தோழி, யான் மட்டும் இங்கே இருக்கின்றேன். என்னோடு சேர்ந்திருந்த என் அழகு, தினைப் புனத்தை காப்போர் விடுகின்ற கவண் கல் ஓசைக்கு அஞ்சி காட்டு யானை கைவிட்ட பசுமையான மூங்கில் மீன் விழுந்த தூண்டிலைப் போல விர்ரென்று கிளம்புகின்ற காட்டை உடைய அத் தலைவனோடு நாங்கள் கூடியிருந்த அவ்விடத்திற்கே போய்விட்டது.
கருத்து: யான் மட்டும் இங்குள்ளேன் என் அழகெல்லாம் அங்கு போய்விட்டது.


  1. இன்னும் சில நாட்களே இருப்பாள்

பாடியவர்: நெய்தற் காற்கியர்
துறை: தலைவன் வேலிக்கு வெளியே நிற்கும்போது, ‘அவளை மணந்து கொள்ளா விட்டால் இன்னும் சில நாட்கள் தான் உயிர் வாழ்வாள்’ என்று தோழி கூறிய நெய்தல்திணைப் பாடல்:

“மாக்கழி மணிபூக் கூம்பத், தூத்திரை
பொங்கு பிதிர்த் துவலை யொடுமங்குல் தைஇக்
கையற வந்த தைவரல் ஊதையொடு,
இன்னா உறையுட் டாகும்
சின்னாட்டு, அம்மஇச் சிறுநல் ஊரே”

விளக்கம்: பெரிய நீர்க்கழிகளில் உள்ள நீலமணி போன்ற மலர்கள் குவியும்படி வெண்மையான அலைகளிலிருந்து மிகுதியாக சிந்துகின்ற நீர்த் துளிகளுடன் மேகத்தை தடவிக் கொண்டு பிரிந்தோர் செயல் அறும்படி வந்த எல்லாவற்றையும் தடவுகின்ற, ஊதைக் காற்றோடும் கூடிய இந்த சிறிய நல்ல ஊர் துன்பம் தரும் உறைவிடமாக இருக்கின்ற சில நாட்களையுடையதாகும்.
கருத்து: தலைவன் விரைந்து வந்து மணக்கா விட்டால் தலைவி இன்னும் சில நாட்களே உயிர் வாழ்வாள்


  1. மிகவும் இரங்க தக்கவை

பாடியவர்: சிறைக்குடியாந்தையார்
துறை: தலைவியை உடன் அழைத்து செல்ல மறுத்த தலைவன் தான் சென்ற வழியில் உள்ள கொடுமையை கண்டு கூறி தலைவன் கூற்றாக பாலைத்திணைப் பாடல்:

“வேட்டச் செந்நாய் கிளைத்து ஊண்மிச்சில்
குளவி மொய்த்த அழுகல் சின்னீர்
வளையுடைக் கையர் எம்மாடு உணீஇயர்
வருகதில் அம்ம தானே,
அளியளோ! அளியல் என்நெஞ்சு அமர்ந்தோளே”

விளக்கம்: வேட்டையாட வந்த செந்நாய்கள் தோண்டி உண்ட மீதமாகிய காட்டு மல்லிகை பூக்கள் விழுந்து மூடிந அழுகல் நாற்றம் வீசும் இச் சிறிய நீரை, வளையல் அணிந்த கையை உடைய தலைவியை எம்மோடு கூட விருந்துண்ண வருக என்று அழைத்தால் என் உள்ளத்தில் உறைந்திருக்கும் அவள் மிகவும் இரங்கத் தக்கவளாயிருப்பாள்.
கருத்து: தீமை நிறைந்த இவ்வழியே தலைவி வருவதற்கு தகுந்தவள் அல்லள்.


  1. இறந்தாலும் இன்பம் உண்டு

பாடியவர்: சிறைக் குடியாந்தையார்
துறை: காவலுக்கு உள்ளாக்கப்பட்ட தலைவி, ‘தலைவனும் நானும் தனித்திருப்பதை விட, ஒன்றாக இருந்து உயிர் விடுதலே சிறந்தது’ என தலைவி தோழிக்கு உரைத்த மருதத்திணை பாடல்;

“பூஇடைப் படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர்உறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிதுஆகிய தண்டாக் காமமொடு
உடன்உயிர் போகுக! தில்ல, கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே”

விளக்கம்: தோழியே! செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து ஒழுகி கணவன், மனைவி எனும் இருவராகவே பல பிறவிகளிலும் பிறந்து வாழ்ந்த இவ்வுலகிலே, இப்பொழுது தனித் தனியாக பிரிந்து வாழ்தலாகிய இத்துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு, மலர் தங்களிடையே நின்று சிறிது நேரம் தடுத்தாலும் அதனால் பல ஆண்டுகள் கழிந்தது போன்ற துன்பத்தை அடைகின்ற நீரிலே வாழ்கின்ற மகன்றிற் பறவையின் ஒன்றுபட்ட வாழ்க்கையை போல பிரிவதற்கு முடியாத நீங்கா அன்புடன் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கும் போதே ஒன்றாகவே எங்கள் உயிர் போக வேண்டும்.
கருத்து: தலைவனை பிரிந்து தனித்திருப்பதை விட உயிர் விடுதலே சிறத்ததாகும்.


  1. என் நோயை நீக்க முடியுமா?

பாடியவர்: வெள்ளிவீதியார்
துறை: தனக்கு புத்தி சொன்ன தோழனிடம் என் காதல் நோய் பொறுக்க முடியாதது: இதனை நீக்க செய்தால் நன்று என தலைவன் கூறிய குறிஞ்சித்திணைப் பாடல்.

“இடிக்கும் கேளிர்! நும்குறையாக
நிறுக்கல் ஆற்றினோ நன்று; மன்தில்லை;
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய்உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே”

விளக்கம்: இடித்துரை கூறும் உற்ற நண்பரே! உமது காரியமாக என் காம நோயைத் தடுத்து நிறுத்த முடியுமானால் அது சிறந்த நன்மையாகும். சூரியனின் வெயிலினால் காய்கின்ற கற்பாறையில் கை இல்லாத ஊமை ஒருவன் தன் கண்ணால் மட்டும் பாதுகாக்க முயல்கின்ற வெண்ணெய் உருவதை போல என்னால் பொறுத்துக் கொள்ள முடியாதது.
கருத்து: காதல் என் உள்ளத்தை கவர்ந்து கொண்டது என்னால் இனி அதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.


  1. உன்னை மறப்பரோ

பாடியவர்: மோசி கீரனார்
துறை: பொருள் தேடச் சென்ற தலைவனை எண்ணி வருந்திக் கொண்டிருந்த தலைவிக்கு தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்த பாலைத் திணைப் பாடல்.

“பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்;
அரலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவிநாறும், நின்
நறுநுதல் மறப்பரோ: மற்றே, முயலவும்
சுரம்பல விலக்கிய அரும்பொருள்
நிரம்பா, அகலின் நீடலோ இன்றே”

விளக்கம்: ஒரு கண் உள்ள மாக்கிணை என்னும் வாத்தியத்தை தாளத்துடன் இயக்கும் பாணர் முதலிய இரவலர்களை பாதுகாக்கும் தலைவனுடைய அரலை என்னும் மலையிலே அகலமான வாயையும் ஆழத்தையும் உடைய சுனையிலே பூத்த குவளை மலர்களோடு சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகைப் பூவின் மணம் வீசிக் கொண்டிருக்கின்ற உன்னுடைய நல்ல நெற்றியை மறப்பரோ. பல நாட்கள் வருந்தி முயன்றாலும் பாலை நில வழி பலவற்றை குறுக்கிட்டு நின்று தேடும் கிடைப்பதற்கரிய செல்வம் எளிதில் போதுமளவு கிடைத்து விடாது. இந்த உண்மை அவருக்கும் தெரியும் ஆதலால் அவர் பொருள் தேட போயிருக்கும் காலம் நீளாது; விரைவில் வருவர்.
கருத்து: தலைவன் உன்னையே நினைத்திருப்பவன்; தாமதிக்க மாட்டான்; விரைவில் வருவான்.


  1. காணுதலும் இன்பமே

பாடியவர்: பரணர்
துறை: தலைவனைப் பிரிந்த தலைவி தனது துன்பத்தை தோழிக்கு கூறிய பாலைத்திணை பாடல் இதோ:

“குந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
கட்பு நக்கு ஆங்கு காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்து இனிதே”

விளக்கம்: குறுகிய அடியை உடைய கூதளாஞ் செடி காற்றில் அசைந்து கொண்டிருகின்ற உயர்ந்த மலை உச்சியில் உள்ள பெரிய தேன் அடையைப் பார்த்த நடக்க முடியாத முடவன் உள்ளங்கையை சிறிய பாத்திரம் போல குவித்துக் கொண்டு மலையின் அடியிலே இருந்து கொண்டு அந்த தேனடையை குறித்து தன்கையை நக்கிக் கொண்டிருப்பது போல காதலர் எனக்கு நன்மை செய்யாவிடினும், விரும்பாவிடினும் அவரை நான் பலமுறை என் கண்களால் பார்த்துக் கொண்டு
இருப்பதினாலேயே என் உள்ளத்திற்கு இன்பமாகும்.
கருத்து: தலைவரை காணாமல் இருப்பது எனக்கு துன்பம். அவரை கண்டால் கூட நான் இன்பம் அடைவேன்- kurunthogai paadal vilakkam 6.

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...