பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 7

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பாரதியாரின் புதிய ஆத்திசூடி பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 7

bharathiyar puthiya aathichudi
நீதீ நூல் பயில்

இறுதி நீதீ இதுவென்றே
சொல்வது நம் தமிழ்மொழி
நூல்கள் எல்லாவற்றுக்கும்
சிறப்பான இயல்பென்றே
ஆனாதாலே எல்லாம் படி
எங்கும் படி எதையும் படி
அன்றிபடிக்க முயற்சி செய்

நுனியளவு செல்

நுனி என்பதுவே நுண்மை
என்றே ஆராய்ந்தறிதலாம்
என்பதாயின் எந்தவொரு
பொருளையும் ஆராய்ந்தே
அறிதல் சான்றோர்களது
இயல்பென உணர்ந்தே
நமக்கும் நுனித்தல் நலமே

நூலினை பகுத்துணர்

நூல் என்ப நுணுக்கமான
பல்வேறு கருத்துகளிலான
சிறப்புறு பெட்டகம் எனவே
நூலை படிப்பதன்றி அது
சுட்டும் கருவினை ஞானக்
கண் கொண்டு
நோக்குதல் அழகியலே

நெற்றி சுருங்கிடேல்

நெற்றியதன் இயல்பதுவே
நெஞ்சத்து எண்ணங்களை
நெருங்கியோருக்கு உரை
நிலைகண்ணாடி அதனால்
அது சுருங்கிட நெருக்கமது
குறையும் இருவரிடையில்
தானாகவே

நேர்படப் பேசு

புறங்கூறுதல் பொருந்தாது
உயர்ந்தோர்க்கு எனபதை
உணர்வீராயின் நேர்படப்
பேசுதல் இயல்பாயுங்கள்
இதயத்திருந்தே வருவதே
புறங்கூறுதல் புல்லரது
செயலதுவாகுமாமே

நையப் புடை

இழிந்தோரது செயல்கள்
எதிர் தோன்ற நீ கண்டும்
காணாமல் போவதென்ப
அறிவார்ந்த செயலன்று
என தெரிந்தே அவரை
நன்கு நையப்புடைத்தல்
நயமானதொரு செயலே

நொந்தது சாகும்

நொந்துதல் என்பதற்கு
பொருளென வருவதுவே
வலுவின்மை என்பதாமே
வலுவில்லா செயல்களும்
சிந்தனையும் இறுதியாக
சாக்காட்டு பயணம்
இட்டுச் செல்லுமே – bharathiyar puthiya aathichudi 7

நோற்பது கைவிடேல்

நோற்பது எதுவென்றால்
தவமியற்றல் என்போரே
தவறில்லை அதில் தான்
என்றாலும் நோற்பெனில்
பொறுமையெனவுமொரு
பொருளுண்டெனஅறிந்து
பொறுமைக் கைவிடேல்

பணத்தினைப் பெருக்கு

பணமே வாழ்க்கைக்கு
ஆதாரமென ஆனதாலே
பணத்தைப் பெருக்குதல்
அவசியமானாலும் வரும்
வருவாயில் சேமிப்பதும்
வாழ்வின் வசந்தம் வருகிற
பெருக்குதலாம்

பாட்டினில் அன்பு செய்

பா எழுதுகிற பாவேந்தன்
நீ எனவானால் உன்னுடை
பாவினுள் ஊடுதறியென
அன்பை அதிகமாகவே
கைக்கொள்ளல் அவசியம்
என்றுணர பாவும் சிறக்க
பாரும் உயருமாமே

– மா கோமகன்

You may also like...