ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 1
பதிணெண் சித்தர்களில் கடுவெளி சித்தரும் ஒருவர் இவர் இறைவனை பேரொளியாய் கண்டு பேரின்பம் அடைந்தவர். இவரது பாடல்கள் “ஆனந்தக்களிப்பு” எனும் பெயர் பெறும்
“நந்தவனத்திலோர் ஆண்டி” எனக் தொடங்கும் பாடல் பாடாதவரும் கேளாதவருமே இருக்க முடியாதெனலாம் – kaduveli siddhar padalgal vilakkam
சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த இறைவனின் சித்தப்படி நடப்பவர்களுமே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதனாலேயே ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்ற சொல் வழக்கு இருக்கிறது. சித்தர்கள் பிறந்த இடமும், அவர்கள் உலாவிய இடமும், சமாதி அடைந்த இடமும், சித்தர்கள் அருளாசி கிடைக்கும் இடங்களாக இன்றும் வணங்கப்பட்டு வருகின்றன. அப்படி சிறப்புவாய்ந்த கடுவெளி சித்தரின் பாடல்களுக்கு கோமகன் அவர்கள் உரை விளக்கம் எழுதுகிறார்.
பாடல் – 01
“பாப ம்செய் யாதிரு மனமே! – நாளைக்
கோபம்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபம்செய் யாதிரு மனமே”
விளக்கம்
மனித நெஞ்சே! இம்மண்ணிலே நீ யாருடைய மனமும் வருந்தும்படியாக தீவினை செய்யாமல், உன்னை காத்துக் கொண்டு வாழ்வாயாக! ஏனென்றால் நாளையே உன் மேல் சினம் கொண்டு யமன் வந்து உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடிவிடுவான். இது உனக்கு எச்சரிக்கையாகும். எனவே நீ தீவினை செய்யாமல் அமைதி காப்பாயாக.
பாடல் – 02
“சாபம் கொடுத்திட லாமோ? விதி
தன்னைநம் மாலே தடுத்திட லாமோ?
கோபம் தொடுத்திட லாமோ? – இச்சை
கொள்ளக் கருத்தை கெடுத்திட லாமோ?”
விளக்கம்
மனித மனமே! அறநெறியின் முடிவான ஊழ் என்னும் விதியை உருவாக்குவதே நீதான். நல்வினை, தீவினையால் ஏற்படும் பயனை நுகரப் போவதும் நீதான். எனவே நல்வினையால் உண்டாகும் நன்மையும், தீவினையால் உண்டாகும் தீமையும் ஒருவனால் தடுக்க முடியாது! இது தான் விதி! ஆதலால் நீ யாரையும் சாபம் விடக்கூடாது. அதைப்போல பிறர் துன்புறும்படி அவர்மேல் சினமும் கொள்ளக் கூடாது. ஒருவர் விருப்பம் கொள்ளுமாறு, தன் கருத்தை வஞ்சனை நோக்கில் கொடுக்கவும் கூடாது – kaduveli siddhar padalgal vilakkam.
பாடல் – 03
“சொல்லரும் சூதுபொய் மோசம் – செய்தால்
கற்றதை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் – எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்”
விளக்கம்
மனித மனமே! கவனித்துப் பார்! பிற மக்களிடம் சொல்வதற்கே நாக்கு கூசுகின்ற சூதாடலும், பொய் சொல்லுதலும், மோசடி செய்தலுமாகிய கொடுமைகளைச் செய்வதால், அதன் விளைவாக குற்றம் செய்தவனோடு அவனது சுற்றத்தையும், நட்பையும் முழுமையாக அழித்துவிடும். ஆதலால் மனிதர்களுக்கு எந்த நாளும் தீமை செய்யாமல் நன்மையே செய்தல் வேண்டும். அவர்களிடம் நல்ல அன்பும் பற்றும் கொள்ள வேண்டும்.
பாடல் – 04
“நீர்மேல் குமிழியிக் காயம் – இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்!
பார்மீதில் மெத்தவும் நேயம் – சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணும் உபாயம்”
விளக்கம்
மனித நெஞ்சே! உலகில் நீ அறிகின்ற அழியக் கூடிய மாயமான காட்சி எது தெரியுமா? அது தான் மனித உடம்பு! இது நீரில் தோன்றி அழியும் நீர்க்குமிழி போன்றது. இவ்வுண்மையை நீ நெறியாக உணர்ந்து கொண்டால், இந்த உலகப் பொருள்கள் மீது மிகுதியும் பற்று வைக்க மாட்டாய். இந்த நிலையாமை மனிதனை பற்றுக் கொள்ளாமல் வைத்து விடும்.
பாடல் – 05
“நந்த வனத்திலோர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!”
விளக்கம்
நந்தவனத்தை வாழ்விடமாக கொண்ட ஆண்டி ஒருவன் பத்து மாதங்களாக குயவனிடம் பணிந்து வேண்டி இலவசமாய் பெற்று வந்த மண்பாண்டம் ஒன்றினை பத்திரமாக கொள்ளாமல் தலையில் வைத்து கொண்டாடி கீழே போட்டு உடைத்தாற் போல பத்து மாதங்களாக கருவறை இருந்து வெளிவந்த இவ்வுடம்பை பேணிப் பாதுகாக்காமல் பகட்டாய் திரிந்து அழித்துக் கொள்கிறாய் என்பதை எண்ணிப் பார் மனிதமனமே!
– கோமகன், சென்னை
சிறப்பு நன்றி
மிகவும் அருமையான பதிவு…செவிவழியாக சில பாடல்களை கேட்டிருந்தாலும் சித்தரைப் பற்றிய குறிப்புகள் இதுவரை அறியாதது..மிக்க நன்றி…
அருமையான விளக்கங்கள்… வாழ்த்துகள்….