நாலடியார் செய்யுள் விளக்கம் (6 – துறவு)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-6

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – துறவற இயல்

06. துறவு

செய்யுள் – 01

விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின் முன் நில்லாதாம் பாவம் – விளக்கு நெய்
தேய்விடத்துச் சென்று இருள் பாய்ந்தாங்கு வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது”

விளக்கம்
விளக்கொளி வர அங்கே இருந்த இருள் அகல்வது போல, ஒருவன் செய்த தவத்தின் முன்னே பாவம் குறையும். விளக்கில் நெய் குறையும் போது, இருள் பரவுவது போல நல்வினை நீங்கும் இடத்தில் பாவம் நிறைத்து நிற்கும்

செய்யுள் – 02

“நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி
தலையாயார் தம் கருமம் செய்யார் – தொலைவு இல்லார்
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல்”

விளக்கம்
நிலையாமை, நோய், மூப்பு, சாவுத் துன்பம் இவ்வுடம்புக்கு உண்டு என ஞான நூல்களை கற்று உணர்ந்த, அறிவுடையோர் தமக்கு உறுதியான தவத்தை செய்வர். முடிவில்லாத இலக்கண நூல், சோதிட நூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களை விடாமல் சொல்லிக் கொண்டு திரியும் பித்தரை விட அறிவில்லாதவர் உலகில் இல்லை!

செய்யுள் – 03

“இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலி என்று இவை எல்லாம் – மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம் உய்யக் கொண்டு”

விளக்கம்
இல்லற வாழ்வு, இளமை, அழகு, செல்வாக்கு, செல்வம், வலிமை என இவை எல்லாம் நாளடைவில் நிலையில்லாமல் போகும் என அறிந்த சான்றோர் தாம் கடைத்தேறும் வழியை மேற் கொண்டு காலம்
தாழ்த்தாது இரு வகை பற்றுகளை துறப்பர்.

செய்யுள் – 04

துன்பம் பலநாள் உழந்தும் ஒரு நாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
இடை தெரிந்து இன்னாமை நோக்கி மனை ஆறு
அடைவு ஒழிந்தார் ஆன்று அமைந்தார்”

விளக்கம்:
அறிவில்லாதவர், பல நாள் துன்பத்தில் வருந்தினாலும் ஒருநாள் கிடைக்கும் அற்ப இன்பத்தை விரும்புவர். ஆனால் சான்றோர் இன்பத்தின் நிலையற்ற தன்மையையும் அதனால் வரும் துன்பத்தையும் உணர்ந்து துறவு மேற்கொள்வர்.

செய்யுள் – 05

“கொன்னே கழிந்தன்று இளைமையும் இன்னே
பிணியொடு மூப்பும் வருமால் துணிவு ஒன்றி
என்னொடு சூழாது எழு நெஞ்சே போதியோ
நல்நெறி சேரா நமக்கு”

விளக்கம்
என் இளமைப் பருவம் வீணாக கழிந்தது. இப்போது நோயும் முதுமையும் வந்து சேர்ந்தது ஆதாலால் துணிவுடன் என்னோடு ஆராயாது புலன் வழி செல்லும் என் மனமே, நமக்கு நன்மை உண்டாக நீ என்னுடன் வருவாயாக. நாம் அறிவு வழிச் செல்லலாம் – naladiyar seiyul vilakkam-6.

செய்யுள் – 06

“மாண்ட குணத்தொடு மக்கட் பேறு இல் எனினும்
பூண்டான் கழித்தற்கு அருமையால் – பூண்ட
மிடி என்னும் காரணத்தின் மேன்முறைக்கண்ணே
கடி என்றார் கற்று அறிந்தார்”

விளக்கம்
மாட்சிமை குணங்களும் பிள்ளைப் பேறும் மனைவியிடம் இல்லா விட்டாலும், மணம் கொண்ட கணவன் அவளை விட்டு விட முடியாது. எனவே திருமணம் என்பது ஒருவன் தானே மேற் கொண்ட துன்பமாகும். ஆதலால் ஒழுக்க நூல்களில் உள்ள கருத்துகளை கற்றுணர்ந்த ஞானிகள் “திருமணம் செய்து கொள்ளாதீர்” என்றனர்.

செய்யுள் – 07

“ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய
தாக்க அருந் துன்பங்கள் தாம் தலைவந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே ஒழுக்கம்
காக்கும் திருவத்தவர்”

விளக்கம்
முயற்சியுடன் தாம் மேற்கொண்ட விரதங்களும் உள்ளமும் சிதையுமாறு, தடுக்க முடியாத துன்பங்கள் வந்த போதும் அவற்றை விலக்கி தம் விரதத்தை நிலை நிறுத்தும் மனவலிமை உள்ளவரே துறவற ஒழுக்கம் காக்க சிறந்தவர்.

செய்யுள் – 08

“தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி மற்று
எம்மை இகழ்ந்த வினைப் பயத்தான் – உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்”

விளக்கம்
பிறர் தம்மை பழித்து பேசியதை பொறுத்துக் கொள்வதோடு அல்லாமல், “இகழ்ந்து பேசிய இவர்கள் எரியும் நரகத்தில் வீழ்ந்து துன்புறுவார்களே!” என வருந்த வேண்டியது துறவிகளின் கடமையாகும்.

செய்யுள் – 09

“மெய் வாய் கண் மூக்கு செவி எனப் பேர் பெற்ற
ஐ வாய வேட்கை அவாவினை – கைவாய்
கலங்காமல் காத்து உய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்”

விளக்கம்
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களையும் அடக்கி, ஐம்புலன்களாலான ஆசையை சேரவிடாமல் காத்து, நல்லொழுக்கத்தில் செல்லும் வல்லமை உடையோன் தவறாமல் வீடு பேற்றை அடைவான்.

செய்யுள் – 10

“துன்பமே மீதூரக் கண்டும் துறவு உள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
இசைதொறும் மற்று அதன் இன்னாமை நோக்கி
பசைத்தல் பரியதாம் மேல்”

விளக்கம்
அறிவில்லாதோர் வாழ்க்கையில் துன்பம் மிகுதியாக வந்தாலும், துறவறத்தை நினையாது, சிற்றின்பத்தையே விரும்புவர். ஆனால் அறிவுடையோர் சிற்றின்பத்தால் துன்பம் வருமென கண்டறிந்து அதை விரும்பார்.

– கோமகன்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *