குழந்தைகள் தின சிறப்பு சிறுகதை

அனைவருக்கும் இனிய குழந்தைகள் தினம் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த சிறப்பு தினத்திற்காக தி.வள்ளி அவர்கள் எழுதிய சிறுகதை வெளியிடுவதில் மகிழ்ச்சி – kuzhanthaigal thinam sirukathai.

kuzhanthaigal thinam sirukathai

யார் புத்திசாலி?

“பாட்டி விளையாடி, விளையாடி போரடித்துவிட்டது. ஏதாவது ராஜா கதை இருந்தால் சொல்லு…” என்று நச்சரித்த பேத்தியை மடியில் அமர்த்திக்கொண்டு கதை சொல்லத் தொடங்கினார் ராஜாத்தி அம்மாள்.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் அவரு ரொம்ப நல்லவரு .நாடு நகரத்தையெல்லாம் நல்லபடியா ஆட்சி செஞ்சாரு. அவருகிட்ட ஒரு முதல்-மந்திரி இருந்தாரு. அவர் மிகவும் புத்திசாலி. ராஜா நல்லபடியா ஆட்சி செய்ய ரொம்ப துணையா இருந்தாரு..ராஜாவுடைய மனைவி மகாராணியும் ரொம்ப நல்லவங்க தான். ஆனா அவங்க மனசுல ஒரு சின்ன குறை இருந்துச்சு.

ராணிக்கு வல்லபன்னு ஒரு தம்பி இருந்தான். அவன் ரொம்ப முரடன். ராணிக்கு மந்திரி பதவியை அவனுக்கு வாங்கி கொடுத்திடணும்ன்னு ரொம்ப நாள் ஆசை .ஒருநாள் ராஜாகிட்ட நந்தவனத்தில் உட்கார்ந்திருக்கும் போது மெதுவாக பேச்ச ஆரம்பிச்சாங்க … – kuzhanthaigal thinam sirukathai

“மன்னா! எனக்கு ரொம்ப நாளா ஒரு யோசனை…”

“ராணி! நீ என்ன நினைக்கிறாயோ, அதை என்கிட்ட தயங்காமல் சொல்லு!” என்றார் ராஜா அன்போடு…

மன்னா நமது முதன்மந்திரிக்கும் வயதாகிறது.அவர் பதவிக்கு யாராவது இளைஞனை கொண்டுவந்தால் மிகவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். நம் வல்லபனை முதன்மந்திரியாக்கினால் என்ன?” என்று நேரடியாகவே ராணி கேட்டாள்.

மன்னர் சிரித்துக்கொண்டே,”ராணி! உன் எண்ணம் அதுவானால் அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும். ஒன்று செய்வோம்… நான். முதன் மந்திரியையும்,உன் தம்பியையும் அழைத்து ஒரு கேள்வி கேட்கிறேன்… யார் சரியாக பதில் கூறுகிறார்களோ அவர்களே முதன்மந்திரி…” என்றார் முடிவாக.

யார் முதல் மந்திரி

பின் காவலர்களை அழைத்து இருவரையும் அவரிடம் அழைத்து வரச்செய்தார். பின் அவ்விருவரையும் பார்த்து,” நான் கேட்கும் கேள்விக்கு தக்க பதில் கூறுபவரே இக்கணம் முதல் முதன்மந்திரி” என்று அறிவித்தார்.

ராணியும் அவள் தம்பியும் மனம் மகிழ்ந்தனர்.”கேளுங்கள் மன்னா.. நாங்கள் பதில் கூற சித்தமாக இருக்கிறோம்” என்றார் முதன்மந்திரி. வல்லபனும் ஆமோதித்தான்.

மன்னர் அவர்களைப் பார்த்து,” என் மேல் ஒருவன் ஏறி, என் மார்பை கால்களால் உதைத்து, என் முகத்தை கைகளால் குத்தினான்… அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று கேட்டார்.

குட்டி இளவரசன் மட்டுமே

வல்லபன் முந்திக்கொண்டு, “அரசே! இது என்ன கொடுமை.. நாடாளும் தங்களை ஒருவன் கால்களால் உதைப்பதா? அவனை மாறுகால் மாறுகை வாங்க வேண்டும்.காலையும் கையையும் வெட்டப்பட்டு அவன் சாக வேண்டும்..” என்றான் ஆவேசமாக.

“என்ன முதன்மந்திரி! அமைதியாய் சிரிக்கிறீர்.. வல்லவன் பதில் கூறிவிட்டான் …உங்கள் பதில் என்ன?” என்றார் மன்னர்.

“மன்னா! தங்களை உதைத்த கால்களுக்கு தண்டையும், அடித்த கைகளுக்கு தங்க காப்பு அணிவித்து, ராஜகுமாரன் கன்னத்தில் ஒரு முத்தம் தர வேண்டும்! தங்கள் மீது ஏறி உரிமையாய் விளையாடும் பேறுபெற்றவர் குட்டி இளவரசன் மட்டுமே..” என்று பதில் கூறினார்.

மன்னன் புன்னகைத்தவாறே, ராணியைப் பார்க்க, ராணி தலை குனிந்து குனிந்து கொண்டாள். ‘தகுதியானவருக்கு மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும்’ என்பதையும் புரிந்து கொண்டார் .

“என்ன கண்ணு! பாட்டி சொன்ன கதை புடிச்சிருக்கா?” என்று ராஜாத்தியம்மா கேட்க… தலையாட்டிக் கொண்டே “ரொம்ப நல்லா இருக்கு பாட்டி” என்று சிரித்தவாறு ஓடினாள் சுட்டிப் பெண் பேத்தி.

– தி.வள்ளி, திருநெல்வேலி.

You may also like...

6 Responses

  1. Rajakumari says:

    கதை நன்றாக இருக்கிறது

  2. உஷாமுத்துராமன் says:

    அருமையான கதை வாழ்த்துக்கள்

  3. ப்ரியா பிரபு says:

    கதை நன்றாக இருக்கிறது..

  4. தி.வள்ளி says:

    மிக்க நன்றி சகோதரிகளே

  5. நிர்மலா says:

    சிறுவர் சிறுகதை மிக நன்று.

  6. ஜாகிர் உசேன் says:

    யாரொருவரும் மற்றவருக்கு இழைக்கும் தீங்கில்
    தமக்கும் ஒரு பங்குண்டு என்பதை அழகாய் உரைக்கிறது இந்தக் கதை

    நண்மை செய்வோருக்கு நன்மையும் தீமை இழைப்பவர்களுக்கு தீமையுமே கூலியாய்க் கொடுப்பது இயற்கையின் நீதியாகும்

    மனிதர்களைப்போல் பிறழ்ந்து விடுவதில்லை இயற்கையின் நீதி
    அது ஒரு போதும் பிறழ்ந்திடாது
    அதற்கு முன் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை
    யாராக இருந்தாலும் அவரவர்களின்செயலுக்கான கூலியை அதை தவறாமல் வழங்கிவிடும்…!