கவிதை தொகுப்பு 39

நீரோடை முகநூல் குழுவை அலங்கரிக்கும் உறுப்பினர்கள் (ஆறு கவிஞர்கள் – கவிமுகில் அனுராதா, கவி தேவிகா, தி. வள்ளி, ம.சக்திவேலாயுதம், ப. தானப்பன் மற்றும் நீரோடை மகேஸ்) எழுதிய கவிதைகள் (கவிதை தொகுப்பு 39) – ilakkiya kavithai thoguppu.

ilakkiya kavithai thoguppu

நான் சாவித்ரி அல்ல

அப்பாற்பட்ட என் மனம்….
புன்னகையைப்
பரிசாக்கி
வெளிச்சத்தை
மட்டுமே
வெளிப்படுத்தி
உன் சடங்கு சம்பிரதாயங்களைக்
கடந்தே
பயணிக்கிறது….
எனக்காய்
அழவோ
ஆறுதல் சொல்லவோ துணியாத
விழிகளையும் கரங்களையும்
நேசித்தாக
வேண்டிய நிர்பந்தங்களைச்
சுமந்தபடியே
நகர்கிறது….
என் வலிகளைப் புறந்தள்ளும்
உன்னைப் புறந்தள்ள
எத்தனை வலிகளையும்
தாங்கிய
என்னை
ஏளனமாய்ப் பார்க்கிறாய்….
நல்ல
வேலைக்காரியாய்
மருமகளாய்
தாரமாய்
தாயாய்
இருப்பதிலேயே
என் வெற்றிக்
கோப்பையைப் பரிசளிக்கிறாய்…
எப்பொழுதும் நினைப்பதுண்டு
ஆணாய்ப் பிறப்பெடுக்க…..
ஓயாமல்
பாத்திரம் துலக்க,
சளைக்காமல்
சமையல் செய்ய,
துணிகளைத் துவைக்க,
வீடு பெருக்க,
வாந்தி எடுக்க,
வயிறு பெருக்க
வேண்டாம்
ஒரு ஜென்மம்…
மடுத்துப் போய்விட்ட வாழ்க்கையொன்றை
வாழ்ந்து காட்ட
நீ சத்தியவானுமில்லை….
நான் சாவித்திரியுமில்லை… – ilakkiya kavithai thoguppu

– கவிமுகில் அனுராதா, கோவை


ஆறு

தனிப் பாதையா
எனத் தெரியவில்லை
வருகிறேன்.
காண்கிறேன்
ஒடிக் கொண்டிருக்கும் நதியினை.
அமர வேண்டும் போலிருக்கிறது
அமர்கிறேன்.
நான் எதனையும் இடவில்லை
வளையங்களாய்
இதழ் விரிக்கிறது நீர்.
என் எண்ணங்களும்
சற்றே பின்னோக்கி
சென்றிருக்கும் என
எண்ணுகிறேன்.
மூக்குத்திப்பூ.
வண்டி மை.
பாண்டி.
கோ…கோ என.
பேரின்ப பெருாஆனந்தம்.
சொத்..தென விழுகிறது
மரக்குச்சியொன்று.
திடுக்கிடவில்லை.
ஆனாலும்
கலைந்து நிகழ்நிலைக்கு
வருகிறேன்.
அமைதியாய்
அதே வளையங்களோடு
ஓடிக் கொண்டிருக்கிறது.

– ப. தானப்பன்


முழுமை

கால்சட்டையின் பணப்பையில்
துழாவி எடுத்த சில்லறையை இங்கே பார்த்துப்பார்த்து
கழித்தேன் அன்றைய நாளை!
மாலையானது..
ஒரு பக்கம்
தேநீர் கடையின் ஆவியில் மனம் செல்லத் துடித்தது…
இன்னொரு பக்கம்
அதே கடையின் வாசலில்
சுடச்சுட சுடப்படும்
வடையின் வாசனையில்
மனம் ஏங்கித் தவித்தது…
ஒருவழியாக முடிவெடுத்து
வடையை காகிதத் தாளில் எடுத்திடவே…
மன ஏக்கத்தை
நிவர்த்தி செய்தேன்!
அப்போதும்
அதே நாணயத்தை
எடுத்துப் பார்த்தேன்…
என் முன்னே
வயது முதிர்ந்தவர்
கையேந்தி நிற்க…
எடுத்த வடையை பிய்த்து
பாதி கொடுத்திடவே..
முழு வடையை நோக்கி
அவர் கை நீட்டிடவே…
மிச்ச பாதியையும் கொடுத்து
முழுமையானேன் நான்!
எனினும் என் சுடச்சுடக் கனவுகள் இன்னும்
ஆவியாகவுமில்லை..
ஆறிப்போகவுமில்லை…
கொதித்துக் கொண்டும்…
சுட்டுக்கொண்டும்!

– ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்


தேடல்

எங்கும் எங்கும் தேடுகிறேன்
எங்கே தொலைத்தேன் தெரியவில்லை?

அம்மி அரைக்கையில் தொலைத்தேனா?
அடுப்படி நிழலில் தொலைத்தேனா?

கவனமாய்..கரிசனமாய்..
கடமையாற்றும் காலத்தில்தான்.. தொலைத்தேனா?

அடுக்கடுக்காய் உறவுகள்..
அவசரத்தில்தான் தொலைத்தேனா?

எண்ணி எண்ணி பார்க்கிறேன்..
எங்கே தொலைத்தேன் தெரியவில்லை…

தொலைத்ததை இன்னும் மீட்கவில்லை…
தொலைத்தது எதுவென சொல்லவில்லை…

ஆம்! என்னை எனக்குள் தேடுகிறேன்
எங்கே தொலைத்தேன் தெரியவில்லை????

– தி. வள்ளி, திருநெல்வேலி


ஒத்திகையின்றி நடக்கும்
வாழ்வியல் நாடகங்களில்
பல்வேறு வேடமிடும்
நாடகதாரிகள்…… நாம்….
உண்மை முகங்களை
உள்ள உறைக்குள்ளிருத்தி
பொய்களை பிரதிபலிக்க
ஒப்பனைகள் செய்யப்பட்ட
வேடதாரிகள்… நாம்….
உண்மைகள் உறங்காது
உயிர்க்கும் வரை……
நித்தமும் தொடரும்
நிரந்தமற்ற நாடகங்கள்……

– கவி தேவிகா


சிட்டுக்குருவிகள் தோரணம்

நீண்ட கொடியில் விடுதலை
பெறவியலாத ஆடை அல்ல
நாங்கள் !
நினைத்தால் வானம் வசப்படும்..

ஓய்வெடுக்க அமரவில்லை
துக்கம் விசாரிக்க அமரவில்லை
நீரும் தானியமும் அருகிலில்லை
கனவுகள் தூரமில்லை
கவலைகள் தேவையில்லை.. – ilakkiya kavithai thoguppu

உலர்ந்த கொடியில்
உலராத எங்கள் மனம்…
நாளைய விடியல் நோக்கி
சிந்திக்கும் பயமில்லை…
என்றும் நாங்கள்
மகிழ்ச்சிப் பறவைகளாய்
கவலைகளை கானல் நீரில்
கரைத்துக்கொண்டே…

– கவித்தென்றல் நீரோடை மகேஸ்

You may also like...

6 Responses

  1. மா கோமகன் says:

    இன்றைய கவிதைகள் எல்லாமே ஒவ்வொரு வகையில் என் உள்ளம் கவர்ந்தன குறிப்பாக நீரோடை மகேஸ் கவிதையில் “நீண்ட கொடியில் விடுதலை பெறவியலாத ஆடைகற் அல்ல நாங்கள் நினைத்தால் வானம் வசப்படும்” என்பது சிட்டுக்குருவிகளுக்கு மட்டுமல்ல மனித மனங்களுக்குமே தானே

  2. தி.வள்ளி says:

    கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  3. Kavi devika says:

    நீரோடையில் அறிமுகமாகும் புதுமை கவிஞர்களுக்கு வாழ்த்துகள்…

  4. Priyaprabhu says:

    கவிதைகள் அருமை..💐💐

  5. N.கோமதி says:

    அன்பானவர்களின்
    இதயத்தில் இடம்பெயர்ந்த
    இனிய வள்ளியே…
    தேடல் வேண்டாம்..
    சுகமான சுமையாய்
    இருக்கிறாய் …பத்திரமாய்..

  6. கு.ஏஞ்சலின் கமலா says:

    அழகான அற்புதமான அர்த்தமான அருமையான கவிகள்.. பாராட்டுகள்