நாலடியார் (30) மானம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-30

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – துன்பவியல்

30. மானம்

செய்யுள் – 01

“திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதங் கண்டக் கடைத்தும் – எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே
மான முடையார் மனம்”
விளக்கம்: செல்வச் செருக்கினால் நற்குணம் இல்லாதார் செய்யும் அவமதிப்பைக் கண்ட போது, மானம் உடையார் மனத்தில், காற்றிலே பற்றிப் படர்ந்து எரியும் தீப்போல அனல் மிகும்.

செய்யுள் – 02

“என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பா டுரைப்பரோ தம்முடையார் தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்”
விளக்கம்: தனது மானத்தை காப்பவர் பசி நோயால் உடல் வற்றி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும், தகுதி இல்லாதவர் பின்னே சென்று தமது வறுமையை எடுத்துக் கூற மாட்டார்கள். குறிப்பால் அறிந்து கொள்ளும் பேரறிவு உடையாரிடம் தமது துன்பத்தை கூறியிருப்பாரோ? கூறியிருப்பார்.

செய்யுள் – 03

“யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல் – நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு”
விளக்கம்: நாம் வறுமையுடையவராக இருந்தாலும், செல்வம் உடையவரை வீட்டின் உள்ளே அழைத்து மனைவியை அறிமுகம் செய்து வைப்போம். ஆனால் செல்வரோ, நாம் பார்த்தவுடனே மனைவியின் கற்பு கெடும் என நாணி, நம்மை வாயிலில் புறத்திலே உட்கார வைத்து சோறிடுவார். எனவே செல்வர் தொடர்பை மறந்திடுக.

செய்யுள் – 04

“இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடா
தும்மையும் நல்ல பயத்தலால் – செம்மையின்
நனம் கமழுங் கதுப்பினாய் நன்றேகாண்
மான முடையார் மதிப்பு”
விளக்கம்: நல்ல கஸ்தூரி மனம் கமலும் கன்னத்தை உடையவளே! மானம் உடையவரது பெருமித வாழ்க்கை இப்பிறப்பிலும் நன்மையை உண்டாக்கும் இறந்த பிறகும் புகழைத் தரும்; ஒழுக்க நெறிகள் கெடாத புண்ணியத்தால் மறுமையிலும் நன்மை விளைவிக்கு. ஆதலால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக. (கதுப்பு என்பதற்கு கன்னம் என்றும் கூந்தல் என்றும் பொருள் உண்டு)

செய்யுள் – 05

“பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார் – சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றல் இன்று”
விளக்கம்: பாவமும் மற்ற பழியும் தோன்றக் கூடிய செயல்களை சான்றோர் தாம் சாவதாயினும் செய்ய மாட்டார்கள். ஏனெனில், சாவுத் துன்பம் ஒரு நாளில் அதுவும் ஒரு நொடிப் பொழுதில் அனுபவிக்க கூடியதாக இருக்கிறது. மேலும் அந்த சாவுத் துன்பம் அப்பாவமும் பழியும் போல உயிர் உள்ளவரை நிலைத்து நின்று துன்பம் தருவதாகும்.

செய்யுள் – 06

“மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்
நல்கூர்த்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்”
விளக்கம்: வளமுடைய இப்பெரிய உலகில் வாழ்பவர் எல்லாரினும் மிக்க செல்வம் உடையவராக இருந்தாலும் வறியோருக்கு ஒரு பொருளை கொடுத்து உதவுவாராயின் வறியவரே ஆவர். வறுமையுற்றிருந்தாலும் செல்வரிடம் சென்று இரவாதார் பெரு முத்தரையர் போன்ற செல்வம் உடையவர் ஆவார்.

செய்யுள் – 07

“கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும் – புடைபரந்த
விற்புருவ வேனெடுங் கண்ணாய் தலையெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்”
விளக்கம்: வில் போன்ற புருவத்தின் கீழ் வேல் போல உலாவி வரும் கண்ணை உடையவளே! கீழ்மக்களெல்லாம் தம்மை வாட்டும் பசிக்கு அஞ்சுவர். இடைப்பட்டவர் எல்லாம் தமக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சுவர்; தலையாய மேன்மக்கள் எல்லாம் தமக்கு வரும் பழிக்கு அஞ்சுவர்.

செய்யுள் – 08

“நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக் குங்கால் – கொல்லன்
உலையூதுந் தீயேபோல்ஙுள்கனலுங் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்”
விளக்கம்: முன்பு இவர் நல்லவர்; மிகவும் அருளுடையவர்; இப்போது வறுமையுற்றார் என இகழ்ந்து செல்பவர்கள் அலட்சியமாக நோக்குங்கால், மானமுடையார் உள்ளம் கொல்லன் உலைக் களத்தில் துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கும்.

செய்யுள் – 09

“நச்சியார்க் கீயாமை நாணன்று, நாணாளும்
அச்சத்தால் நாணுதல் நாணன்றாம் எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லா திருப்பது நாண்”
விளக்கம்: நம்மை விரும்பி வந்தவர்க்கு ஒன்றைக் கொடாமல் இருப்பது நாணம் அன்று; எல்லா நாளும் தீயவைக்கு அஞ்சும் அச்சத்தால் அவை செய்ய நாணுதலும் நாணம் அன்று. உண்மையில் நம்மை எளியவராக நினைத்து, செல்வத்தால் உயர்ந்தவர் நமக்கு செய்த அவமரியாதையை பிறருக்கு சொல்லாமல் இருப்பதே நாணம் ஆகும்.

செய்யுள் – 10

“கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்த்த துண்ணா திறக்கும் இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்,
மானம் மழுங்க வரின்”
.விளக்கம்: காட்டில் இருக்கும் புலியானது, தான் கொன்ற காட்டுப் பசு இடப்பக்கமாக வீழ்ந்ததாயின், அதை உண்ணாது பட்டினி கிடந்து இறக்கும். அது போல, இடம் அகன்ற விண்ணுலகம் கைக்கு கிடைப்பதாயினும், அது மானம் கெட வருமாயின் அந்த விண்ணுலகையும் வேண்டார் விழுமியோர் – naladiyar seiyul vilakkam-30.

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...