நாலடியார் (18) நல்லினம் சேர்தல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-18

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – அரசியல்

18. நல்லினம் சேர்தல்

செய்யுள் – 01

“அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி
நெறியல்ல செய்து ஒழுகியவ்வும் – நெறி அறிந்த
நற் சார்வு சார கெடுமே வெயில் குறுகப்
புற் பனிப் பற்று விட்டாங்கு”
விளக்கம்
அறியாப் பருவத்தில் அடக்கம் இல்லாதோடு கூடி நெறி அல்லாதன செய்தமையால் நேர்ந்த பாவங்களும் நல்லாரை சார்ந்து ஒழுகலால், வெயில் மிகும் போது புல்லின் மேல் படிந்த பனிநீர் நீங்குதல் போல கெடும்.

செய்யுள் – 02

“அறியின் அற நெறி அஞ்சுமின் கூற்றம்
பொறுமின் பிறர் கடுஞ் சொல் போற்றுமின் வஞ்சம்
வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ் ஞான்றும்
பெறுமின் பெரியார் வாய்ச் சொல்”
விளக்கம்
அறத்தின் நெறியை அறியுங்கள்; எமனுக்கு அஞ்சுங்கள்; அறியார் சொல்லும் கடுஞ்சொற்களை பொறுத்துக் கொள்ளுங்கள்! தீயோர் நட்பை வெறுத்து ஒதுக்குங்கள்! எப்போதும் பெரியோர் அறவுரையை கேளுங்கள்!

செய்யுள் – 03

“அடைந்தார்ப் பிரிவும் அரும் பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறவால் – தொடங்கி
பிறப்பு இன்னாது என்று உணரும் பேர் அறிவினாரை
உறப் புணர்க அம்மா என் நெஞ்சு”
விளக்கம்
அன்புடன் தன்னை சார்ந்து இருப்பவர்களை பிரிதலும், மருந்தால் தீர்தற்கரிய நோயும், மரணமும் உடம்பும் எடுத்தார்க்கு உடனே வந்து எய்தலால், பழையதாக தொடர்ந்துவரும் பிறப்பினை துன்பம் தருவது என்று அறியும் சிறந்த அறிவுடையாரை என் நெஞ்சமானது சிக்கெனப் பற்றுவதாக.

செய்யுள் – 04

“இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள்
பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும்
நண்பு ஆற்றி நட்கப் பெறின்”
விளக்கம்
ஆராய்ந்து பார்த்தால், பிறப்பு துன்பம் தருவது எனினும் நற்குணங்கள் நிறைந்த நல்லோருடன் சேர்ந்து அவர் தம் நற்குணங்களைப் பெற்று எல்லா நாளும் அவர்களுடன் நட்பு கொள்வாராயின், அப்போது யாரும் இப்பிறப்பினை வெறுக்க மாட்டார்கள்.

செய்யுள் – 05

“ஊர் அங்கண் நீர் உரவு நீர்ச் சேர்ந்தகால்
பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் – ஓரும்
குல மாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்
நல மஅட்சி லாரைச் சார்ந்து”
விளக்கம்
ஊரில் உள்ள சாக்கடை நீர், கடல் நீரைச் சேர்ந்தால், அது பெயரும் வேறுபட்டு ‘தீர்த்தம்’ எனப் பெயர் பெறும் அதுபோல பெருமையில்லா குடியிற் பிறந்தவரும் பெரியாரைச் சேர்ந்தால் மலை போல உயர்ந்து நிற்பர்.

செய்யுள் – 06

“ஒண் கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய
அம் கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
குன்றிய சீர்மையர் ஆயினும் சீர் பெறுவர்
குன்று அன்னார் கேண்மை கொளின்”
விளக்கம்
அழகிய இடத்தையுடைய வானத்திலே ஒளி பொருந்திய சந்திரனை சேர்ந்திருப்பதால், முயலும் சந்திரனை தொழும்போது சேர்ந்து தொழப்படும். அதுபோல சிறப்பு இல்லாதவர் ஆயினும் குன்று போல உயர்ந்த நற்குணங்கள் உடையாரை சேர்வாராயின் பெருமை பெறுவர்.

செய்யுள் – 07

“பாலோடு அளாய நீர் பால் ஆகும் அல்லது
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல
பெரியார் பெருமையை சார்ந்து”
விளக்கம்
பாலுடன் கலந்த தண்ணீர் பாலாகவே தோன்றுமே அல்லாமல் நீரின் நிறத்தை வேறுபடுத்தி காட்டாது. அதுபோல நற்குணமுடைய பெரியாரின் பெருங்குணத்தைார சார்ந்தால், சிறியோரின் சிறுமை குணம் தோன்றாது.

செய்யுள் – 08

“கொல்லை இரும் புனத்து குற்றி அடைந்த புல்
ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு
மெல்லியரே ஆயினும் நற் சார்வு சார்ந்தார்மேல்
செல்லாவாம் செற்றார் சினம்”
விளக்கம்
புன்செய் நிலத்திலும், நன்செய் நிலத்திலும் மரக்கட்டையை சார்ந்து முளைத்திருக்கு புல்லானது உழவரின் கலப்பைக்கு சிறிதும் அசையாது, அதுபோல வலிமை அற்றவராயினும் வலிமை மிக்கோரை சார்ந்திருப்பது பகைவர் சினம் அவர்மேல் செல்லாது.

செய்யுள் – 09

“நில நலத்தால் நந்திய நெல்லேபோல் தம்தம்
குல நலத்தால் ஆகுவர் சான்றோர் – கல நலத்தை
தீவளி சென்று சிதைத் தாங்கு சான்றாண்மை
தீஇனம் சேரக் கெடும்”
விளக்கம்
நிலத்தின் வளத்தினால் செழித்து வளரும் நெற்பயிர் போல மக்கள் தாங்கள் சேரும் கூட்டத்தின் சிறப்பால் உயர்வர். கடலில் செல்லும் மரக்கலத்தை சுழல் காற்று தாக்கி கெடுப்பது போல ஒருவரின் உயர்குணம் தீயோருடன் சேர்வதால் கெடும்.

செய்யுள் – 10

“மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர் – புனத்து
வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறி புனம் தீப்பட்டக்கால்”
விளக்கம்
காடு தீப்பற்றி எரியும் போது மணம் வீசும் சந்தன மரமும், வேங்கை மரமும் கூட வெந்து போகும். அதுபோல, மனதில் ஒரு குற்றமும் இல்லாத நல்லவராயினும் அவர்கள் தாம் சேர்ந்த தீய இனத்தின் காரணமாக இகழப்படுவர் – naladiyar seiyul vilakkam-18.

– கோமகன்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *