நாலடியார் (17) பெரியாரைப் பிழையாமை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-17
பொருட்பால் – அரசியல்
17. பெரியாரைப் பிழையாமை
செய்யுள் – 01
“பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் – வெறுத்த பின்
ஆர்க்கும் அருவி அணி மலை நல்நாட
போக்குதல் யார்க்கும் அரிது”
விளக்கம்
ஒலிக்கும் அருவிகளை அணிகளாக கொண்ட மலைகள் மிக்க நாட்டையுடைய வேந்தனே! ‘பொறுத்துக் கொள்வார்’ என நினைத்து, மாசற்ற பெரியோரிடத்து அவர் வருந்தத்தக்க குற்றங்களை செய்யாதிருத்தல் வேண்டும். ஏனெனில் அவர்கள் கோபித்த பின் அதனால் ஏற்படும் துன்பங்களை யாராலும் விலக்க முடியாது.
செய்யுள் – 02
“பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை
கொன்னே தலைக்கூட பெற்றிருந்தும் – அன்னோ
பயன் இல் பொழுதாக் கழிப்பரே நல்ல
நயம் இல் அறிவினவர்”
விளக்கம்
பொன்னையே கொடுத்தாலும் நெருங்குதற்கரிய பெரியாரை, யாதொரு பொருட்செலவுமின்றியே சேரத்தக்க நிலையை பெற்றிருந்தும், நற்பண்பு அற்ற அறிவிலார் காலத்தை கழிக்கின்றனரே!
செய்யுள் – 03
“அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகை மக்களால் மதிக்கற்பால நயம் உணரா
கை அறியா மாக்கள் இழிப்பும் எடுத்து ஏத்தும்”
வையார் வடித்த நூலார்”
விளக்கம்
அவமதிப்பு, மிக்க மதிப்பு ஆகிய இரண்டும் பெரியோர்களால் மதிக்கத்தக்கணவாகும்..கீழ்மக்களின் பழிப்புரையும், பாராட்டையும் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள்.
செய்யுள் – 04
“விரி நிற நாகம் விடர் உளதேனும்
உருமின் கடுஞ் சினம் சேண் நின்றும் உட்கும்
அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்
பெருமை உடையார் செயின்”
விளக்கம்
படம் விரிக்கும் நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே இருந்தாலும் தொலைவில் எழும் இடியோசைக்கு அஞ்சும். அதுபோல பெரியோர் சினம் கொள்வாராயின் தவறு செய்தவர் பாதுகாப்பான இடத்தை சார்ந்திருந்தாலும் தப்பி பிழைக்க மாட்டார்.
செய்யுள் – 05
“எம்மை அறிந்திலிர் எம் போல்வர் இல் என்று
தம்மை தாம் கொள்வது கோள் அன்று – தம்மை
அரியரா நோக்கி அறன் அறியும் சான்றோர்
பெரியாரக் கொள்வது கோள்”
விளக்கம்
“எம்மை நீர் அறியமாட்டீர்; எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை!” என தம்மை நாமே மதிப்பது பெருமை ஆகாது. அறம் உணர்ந்த சான்றோர் நமது அருமை அறிந்து ‘பெரியார்’ என மதிப்பதே பெருமை ஆகும்.
செய்யுள் – 06
“நளி கடல் தண் சேர்ப்ப நாள் நிழல் போல
விளியும் சிறியார் கேண்மை – விளிவு இன்றி
அல்கு நிழல்போல அகன்று அகன்று ஓடுமே
தொல் புகழாளர் தொடர்பு”
விளக்கம்
பெரியகடலின் குளிர்ந்த கரையை உடையவனே! சிறியோர் நட்பு காலை நேரத்து நிழல் போல வர வர குறையும். பெரியோர் நட்பு மாலை நேரத்து நிழல் போல மேலும் மேலும் வளரும்.
செய்யுள் – 07
“மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல் வேண்டா – துன்னிக்
குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம்
உழை தம்கண் சென்றார்க்கு ஒருங்கு”
விளக்கம்
கிளைகள் நெருங்கி தளிர் விட்டு தழைத்திருக்கும் குளிர்ச்சியான மரங்களெல்லாம் தம்மை வந்தடைந்தவர்க்கு நிழல் தருவது போல மன்னரின் செல்வத்தையும் மகளிரின் அழகையும் நெருங்கினவர்கள் அனுபவிப்பர்.
செய்யுள் – 08
“தெரியத் தெரியும் தெரிவு இலார்க்கண்ணும்
பெரிய பெரும் படர் நோய் செய்யும் – பெரிய
உலவா இருங் கழிச் சேர்ப்ப யார் மாட்டும்
கலவாமை கோடி உறும்”
விளக்கம்
நீர்வளம் குன்றாத கழிக்கரையை உடைய வேந்தனே! நன்மை தீமை ஆராய்ந்து உணரும் தெளிவில்லார் இடத்தும் நட்பு கொண்டு பின் பிரிய நேர்ந்தால் அப்பிரிவு மிக்க துன்பத்தை உண்டாக்கும். ஆதலால் யாரிடத்தும் நட்பு கொள்ளாமை கோடி பங்கு சிறந்ததாகும்.
செய்யுள் – 09
“கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும் – ஒல்வ
கொடாஅது ஒழிந்த பகவும் உரைப்பின்
படாஅ ஆம் பண்புடையார்கண்”
விளக்கம்
கற்க வேண்டிய நூல்களை கற்காமல் வீணாக கழிந்த நாளும், கேள்வியின் காரணமாக பெரியோரிடத்திற் செல்லாமல்ஙகழிந்த நாளும் பண்புடை யாரிடத்தும் உண்டாகளாம்.
செய்யுள் – 10
“பெரியார் பெருமை சிறு தகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் – தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனில்”
விளக்கம்
பெரியோர்க்கு பெருமை தருவது எளிமையும் பணிவுமாகும். மெய் ஞானியருக்கு உரிய பண்பாவது மனம், மொழி, மெய்களில் அடக்கமுடமையாம். ஆராய்ந்து பார்த்தால் தம்மை சார்ந்தவரின் வறுமையை போக்குவாராயின் செல்வம் உடையவரும் செல்வரே ஆவர்.
– கோமகன்
‘வீணாகக்’ காலத்தைக் கழிக்கின்றனர்
_ செய்யுள் 2