ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 7
வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் இறுதி பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam7
பாடல் – 31
“பத்தி யெனும்மேனி நாட்டித் – தொந்த
பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி
சத்தியம் என்றதை யீட்டி – நாளும்
தன்வசம் ஆக்கிக்கொள் சமயங்கள் ஓட்டி!”
விளக்கம்
மனிதா! அன்புக்கத்தால் உன் உடல் மேனியை ஒளி வடிவமாக்கு; உன் உயிரானது உறவுப் பற்றுகளை விட்டொழித்து, உலக பற்றற்ற இடமான தெய்வ ஒளியைக் காணட்டும்; அந்த தெய்வ ஒளிக் காட்சியே வாய்மையெனும் சத்தியமென்று நெஞ்ணிலே கொண்டு அதை ஓம்பி வழிபடுக! இதை நாள்தோறும் குறிக்கோளாய் கொண்டு வசப்படுத்துக! உறவாக்கிக் கொள்க! வேறு சமயங்களென்னும் பொய்யான கொள்கைகளை சாராமல் ஒழித்து விடுக!
பாடல் – 32
“செப்பரும் பலவித மோகம் – எல்லாம்
சீயென்று ஒறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அடங்கா யோகம் – நன்றாய்
ஓர்ந்தறி வாய்அவற்று உண்மைசம் போகம்”
விளக்கம்
மனித மனமே! நீ ணொல்லுதற்கே கூசுகின்ற பல வகையான ஆசைகளை எல்லாம் ‘சீ’ என்று வெறுத்து ஒழிக்க வேண்டும்; அறிவை உறுதியாக தூய்மைப் படுத்திக் கொள்வது நன்று; ஒப்பிட்டு உரைக்க முடியாத அரிய தவமாகிய ‘இயமம்’ முதலான எட்டு வகைத் தவப் பயிற்சியில் ஈடுபடுக; அவற்றை நன்கு உள்ளத்தில் ஆராய்ந்து கடைபிடிப்பாயாக!
அவற்றால் உண்மையான அக இன்பத்தையும், இறையொளி உறவையும் பெற முடியும்.
இயமம் முதலான எட்டு வகை தவநிலை அட்டாங்க யோகம் என்பர். அவை:-
- இயமம் – ஒழுக்கம்
- நியமம் – நியதிகள் (வரையறை)
- ஆசனம் – இருக்கை நிலை
- பிராணாயாமம் – மூச்சுக் கட்டுப்பாடு
- பிரத்தியாகாரம் – பற்றற்ற மனநிலை
- தாரணம் – ஒரு நிலைப்படுத்தல்
- தியானம் – மன ஓர்மை
- சமாதி – பரம் பொருளுடன் இணைதல்
பாடல் – 33
“எவ்வகை யாகநன் நீதி – அவை
எல்லாம் அறிந்தே எடுத்துநீ போதி
ஒவ்வா என்றபல் சாதி – யாவும்
ஒன்றென்று அறிந்தே உணர்ந்துற ஓதி!”
விளக்கம்
மனிதா! அறநெறியில் வாழ்ந்து அதை காப்பாற்றுக; அறம் என்னும் தெய்வமான நீதியை எந்த வகையிலும் நன்கு அறிந்து தெளிந்து கொண்டு, எடுத்துரைத்து, தலைமுறை தலைமுறையாக அமைதியுடன் வாழ நீ காப்பாற்றுக! மக்களாய் பிறத்த எல்லோரும் ஒரே மதிப்பென்பதை நிலை நாட்டுக. சாதி என்ற பெயரால் வேறுபாடு கற்பிக்கும் மடமையை ஒழிக்க!
பாடல் – 34
“கள்ளவே டம்புனை யாதே – பல
கங்கையி லேஉன் கடம்நனை யாதே;
கொள்ளைகொள் ளநினை யாதே – நட்புக்
கொண்டு பிரிந்துநீ கோள் முனை யாதே”
விளக்கம்
மனிதா! மக்களைப் பலவாறு ஏமாற்றுவதற்காக கடவுளின் பெயராலும், கள்ள அமைப்புகளின் பெயராலும் கள்ள நோக்கத்தோடு உடம்பிலே பல ஒப்பனை வேடங்களை புணையக் கூடாது. பல ஆறுகளிலும், பெய்கை நீரிலும் சென்று உடம்பை நனைத்து நீராடுவதாலே நீ செய்த தீவினையின் சுமை தீராது! பிறருடைய பொருளை வஞ்சித்துக் கொள்ளையடிக்க எண்ணாதே! ஒருவரோடு நட்பு கொண்டு, பின்னே பிரிந்து செல்ல நினைக்காதே; நட்பு கெடும்படி யாரிடமும் கோள் சொல்லாமல் ஒழுக்கமுடனே வாழ்க!
பாடல் – 35
“எங்கும் சயப்பிர காசன் – அன்பர்
இன்ப இருதயத்து இருந்திடும் வாசன்;
துங்க அடியவர் தாசன் – தன்னைத்
துதிக்கிற பதவி அருளுவன் ஈசன்!”
விளக்கம்
மனிதா! நீ கடவுளை எப்போதும் நினைத்தால் முழு மனிதனாய் நிறைவோடு வாழ்வாய்!
கடவுள் உலகம் எங்கும் பேரொளியாக திகழ்பவன்; அன்பர்களின் நெஞ்ச மலரில் வீற்றிருப்பவன்; உள்ளத்தால் உயர்ந்த அடியவர்களுக்கு அடியவனாய் உறவாடுபவன்; தன்னை நம்பி வழிபட்டு வாழ்பவருக்கு பேரின்ப வீட்டை அருளுவான். எனவே நீயும் வழிபட்டு வணங்கி அருள் பெறுக!
– கோமகன், சென்னை
அருமையான நிறைவான பகுதி …சித்தர் தம் பாடல்கள்.. இன்று அனைவரும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் ..தொகுத்து விளக்கத்துடன் அளித்த சகோதரர் கோமகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்