நாலடியார் செய்யுள் விளக்கம் (3 – யாக்கை நிலையாமை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-3

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – துறவற இயல்

03. யாக்கை நிலையாமை

செய்யுள் – 01

“மலைமிசைத் மோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசை
துஞ்சினார் என்று எனுத்து தூற்றப்பட்டார் அல்லால்
எஞசினர் இவ் உலகத்து இல்”
விளக்கம்
மலையின் மீது காணப்படும் சந்திரனைப் போல யானயின் தலையில் பிடித்த குடையினை உடைய அரசர்களும் உலகில் இறந்தனர் என இகழப்பட்டார்களே அல்லாமல் இவ்வுலகில் இறவாது எஞ்சி இருந்தவர் யாரும் இல்லை. மன்னாதி மன்னர்களும் மாண்டனர். என்றதனால் யாக்கை நிலையாமை உணர்த்தப்பட்டது.

செய்யுள் – 02

“வாழ் நாட்கு அலகா வயங்கு ஒலி மண்டிலம்
வீழ் நாள் படாஅது எழுதலால் வாழ் நாள்
உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும்
நிலவார் நிலமிசை மேல்”
விளக்கம்
உயிரோடு வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் உதயம் ஆவதால், ஆயுள் முடியும் முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள்.

செய்யுள் -03

“மன்றம் கறங்க மணப் பறை ஆயின
அன்று அவர்க்கு ஆங்கே பிணப் பறை ஆய் – பின்றை
ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்”
விளக்கம்
மணமண்டபத்தில் முழங்கும் வாத்திய இசை நின்று, அன்றைக்கு அங்கேயே மனிதருக்கு பிணப் பறையாக ஒலித்தலும் உண்டு என நினைக்கும் மாட்சிமை உடையோர் மனதால், பிறவிப் பிணியிலிருந்து நீங்கும் வழியை உறுதியாய் பற்றியிருப்பார்.

செய்யுள் – 04

“சென்றே எறிப ஒருகால் சிறு வரை
நின்றே எறிப பறையினை – நன்றேகாண்
முக் காலைக் கொட்டினுள் மூடி தீக் கொண்டு எழுவர்
செத்தாரை சாவர் சுமந்து”
விளக்கம்
பறையடிப்போர் இறப்பு வீட்டிற்குச் சென்று ஒரு முறை பினப்பறை அடிப்பார்; சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை அடிப்பர்; மூன்றாவது முறை பறை அடிப்பதற்கு முன் எதிர் காலத்தில் சாக போகிறவர்கள் செத்தவரை துணியால் மூடி நெருப்பை எடுத்துக் கொண்டு சுடுகாட்டை நோக்கி தூக்கிச் செல்வார்கள்

செய்யுள் – 05

“கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலற
பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும் – மணம் கொண்டு ஈண்டு
உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினான் சாற்றுமே
டொண் டொண் டொண் என்னும் பறை” – naladiyar seiyul vilakkam-3
விளக்கம்
உறவினர் கூட்டமாக கூவி அழ, பிணத்தை தூக்கி கொண்டு சுடுகாட்டுக்கு செல்பவரை பார்த்தும், திருமணம் செய்து கொண்டு இவ்வுலகில் நிச்சயமாய் இன்பம் உண்டு, இன்பம் உண்டு என மயங்குபவனுக்கு, ‘டொண், டொண், டொண்’, என ஒலிக்கும் சாப்பறையானது இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் நிலையான இல்லை என்ற உண்மையை உரைக்கும்.

செய்யுள் – 06

“நார்த் தொடுத்து ஈர்க்கில் என் நன்று ஆய்ந்து அடக்கில் என்
பார்த்துழிப் பெய்யில் என் பல்லோர் பழிக்கின் என்
தோற்பையுள் நின்று தொழில் அறச் செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டக்கால்”
விளக்கம்
தோற் பையாகிய உடம்பிலிருந்து, தான் செய்ய வேண்டிய தொழில்களை முழுமையாக செய்து, அதன் பயனை தானே அனுபவிக்கிற கூத்தாடியாகி உயிர், உடலை விட்டு சென்றால், பின் அவ்வுடலை கயிற்றால் கட்டி இழுத்தால் தான் என்ன? நன்றாக சுத்தம் செய்து அடக்கம் செய்தால் தான் என்ன? கண்ட இடத்தில் போட்டால் தான் என்ன? பலரும் பழித்தால் தான் என்ன? எனவே உயிர் இருக்கும் போதே மேலான செயல்களை செய்க!

செய்யுள் – 07

“படு மழை மொக்குளின் பல் காலும் தோன்றி
கெடும் இது ஒர் யாக்கை என்று எண்ணி – தடுமாற்றம்
தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை
நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல்”
விளக்கம்
வீழ்கின்ற மழை நீரிலே தோன்றும் குமிழிபோலப் பலமுறை தோன்றி அழியும் ஒரு வகைப் பொருள் இந்த உடம்பு எனக் கருதி, இப்பிறவி துன்பத்தைப் போக்கிக் கொள்வோம் நாம் என உணர்ந்து, அதற்கான அறங்களைச் செய்யும் உறுதியான நல்ல ஞானமுள்ளவரை இவ்வுலகில் ஒத்திருப்பவர் யார்? ஒருவரும் இல்லை.

செய்யுள் – 08

“யாக்கையை யாப்புடைதாப் பெற்றவர் தாம் பெற்ற
யாக்கையால் ஆய பயன் கொள்க – யாக்கை
மலை ஊடும் மஞ்சு போல் தோன்றி மற்று ஆங்கே
நிலையாது நீந்துவிடும்”
விளக்கம்
உடம்பை, உறுதியுடையவராக முன் செய்த நல் வினைப் பயனால் பெற்றவர், அதனால் ஆகும் பயனான நற்காரியங்களை செய்வாராக! ஏனெனில் மலை மீது உலாவும் மேகம் போல் காணப்பட்டு நிலை பெறாது இவ்வுடல் அழிந்து விடும்.

செய்யுள் – 09

“புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை என்று எண்ணி
இன்னினியே செய்க அறவினை – இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேள் அலறச்
சென்றான் எனப்படுதலால்”
விளக்கம்
ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தாற்: உட்கார்ந்தான்: படுத்தான்: தன் உறவினர் அலறி அழ இறந்தான் என்று கூறப்படுவதால், புல் நுனியிலிருக்கும் நீர்த்துளிப் போல நிலையில்லாத தன்மையுடையது இந்த உடம்பு என்று எண்ணி, இப்பொழுதே அறவினைகளைச் செய்க!

செய்யுள் – 10

“கேளாது வந்து கிளைகளாய் இல் தோன்றி
வாழாதே போவரால் மாந்தர்கள் – வாளாதே
சேக்கை மரன் ஒழியச் சேண் நீங்கு புள் போல
யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து”
விளக்கம்
மனிதர்கள், ‘வரட்டுமா’ எனக் கேளாமல் வந்து உறவினராய்ஒரு வீட்டில் பிறந்து பின், தாம் வாழ்ந்த கூடு மரத்திலே கிடக்க தூரத்திலே பறந்து செல்லும் பறவைகளைப் போல சுற்றத்தாரிடம் உடம்பை விட்டு விட்டு இறந்து போவார்கள்.

– கோமகன்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    அருமை ..ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி …இன்னும் சொல்வதன் அர்த்தம் விளங்க பாடலும் விளக்கமும் மிகவும் அருமை ..சகோதரர் கோமகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்