குறுந்தொகை பகுதி 3
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 3
செய்யுள் விளக்கம்
- பொய்யா மொழி புகழ மாட்டார்
பாடியவர்: ஒதலாந்தையார்
கார் காலம் வந்தது; பிரிந்த தலைவன் இன்னும் வரவில்லை; தலைவி வருத்துவாள்; என்று எண்ணிய தோழிக்கு தலைவி கூறுவது போல அமைந்த பாலைத்திணை பாடல்.
“வண்டுபடத் ததைந்த கொடிஇணர், இடைஇடுபு
பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புது பூங் கொன்றைக்
கானம், கார்எனக் கூறினும்
யானோ தேறேன், அவர்பொய் வழங்கலரே”
விளக்கம்: வண்டுகள் தேனை உண்ணுவதற்காக வந்து மொய்க்கும்படி அடர்ந்து மலர்ந்திருக்கின்ற நீண்ட பூங்கொத்துகளையும் இடை இடையே தழைகளையும் சேர்த்து, பொன்னால் செய்யப்பட்ட அழகான தலை அணிகளையும் தலையிலே கட்டியிருக்கின்ற பெண்களின் கூந்தலைப் போல காணப்படுகின்ற, புதிதாக மலர்ந்த பூக்களை உடைய கொன்றை மரங்களை கொண்டிருக்கிறது காடு. ஆதலால் கார் காலம் வந்து விட்டது என்று கூறினாலும் நான் இதை நம்ப மாட்டேன். ஏனென்றால் அவர் ஒரு பொழுதும் பொய்யுரை புகல மாட்டார்.
கரும்து: இது கார் காலம் என்று கூறினாலும் நம்ப மாட்டேன்.
- அழாதே! அவன் பிரியான்
பாடியவர்: சேரமான் எந்தை
தலைவிக்கு தோழி ஆறுதல் சொல்வதாக அமைந்த பாலைத்திணை பாடல் இது:-
“நீர்வார் கண்ணை தீ இவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே, சாரல்
சிலம்பு அணி கொண்ட வலம் அரி மராஅத்து
வேனில் அம்சினை கமழும்
தேம் ஊர் ஒன்றுதல் நின்னொடும் செலவே”
விளக்கம்: மலைப் பக்கமானது தனக்கு அழகாக கொண்டிருக்கும், வலப் பக்கமாக வளைந்து மலரும் மலர்களையுடைய வெண்கடம்ப மரத்திலே இளவேனிற் காலத்தில் அதன் அழகிய கிளைகளில் மணம் வீசிக் கொண்டிருக்கும் மலர் மலர்ந்திருக்கும். வண்டுகள் தேடி வருகின்ற மலர்களை போன்ற ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே! நீரொழுகும் கண்களை உடையவளாய் நீ இங்கே தணித்திருக்கும்படி யார் தான் பிரிந்து போவார். அப்படி அவர் பொருள் தேட போக நேர்ந்தால் உன்னை அழைத்துக் கொண்டுதான் போவார். ஆதலால் வருந்தாதே
கருத்து: தலைவர் உன்னை தனியாக விட்டு பிரிந்து போக மாட்டார்.
- இன்னும் பாடுக! இனிதே பாடுக!
பாடியவர்: ஔவையார்
துறை: தாயார் தம் மகளின் மாறுதலைப் பற்றி கட்டுவிச்சியிடம் குறி கேட்கின்ற போது உண்மை விளங்க தோழி சொல்லிய குறிஞ்சித் திணைப் பாட்டு:
“அகவன் மகளே? அகவன் மகளே?
மனவு கோப்புஅன்ன நல்நெடும் கூந்தல்
அகவன் மகளே? பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே? அவர்
நல்நெடும் குன்றம் பாடிய பாட்டே?”
விளக்கம்: அகவல் மகளே, தெய்வங்களைக் கூவிப் பாடும் கட்டுவிச்சியே, சங்கு மணிகளை கோத்த மாலை போன்ற வெண்மையான நல்ல கூந்தலை உடைய கட்டுவிச்சியே, பாட்டுகளைப் பாடுக, இன்னும் பாடுக. அவனுடைய நல்ல மலையை புகழ்ந்து பாடிய பாட்டுகளை இன்னும் பாடுவாயாக.
கருத்து: இவளைக் காதலித்த தலைவனுடைய மலையைப் பாடுக அப்போதுதான் இவள் நோய் நீங்கும்.
அக்காலத்தில் குறி சொல்லும் பெண்டிர்க்கு கட்டுவிச்சி எனப் பெயர் இவர்கள் தம் செயலில் தெய்வத்தை அழைத்து பாடுவதால் பின்னர் அகவல் மகளிர் என அழைக்கபட்டு தற்போது குறத்தி என வழங்கப் படுகின்றனர்.
சொற்பொருள் விளக்கம்:
(முனவு – சங்கு)
- இன்னும் காணேன்
பாடியவர்: பரணர்
துறை: தலைவன் சொல்லிப் பிரிந்த இளவேனிற் பருவம் வந்தும் அவன் வரவில்லை. தலைவி நிலை கண்டு ஊரார் பழித்துரைக்க, தலைவி வருந்திக் கூறிய பாலைத் திணைப் பாடல்:
“கரும்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்றுபுயலஙெண்கோட்டவெண்கோட்டு அதவத்து
எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல் என்றவ்வே”
விளக்கம்: வலிமையான அடிப்பாகத்தை கொண்ட வேப்பமரத்தின் ஒளியுள்ளப் பூக்கள் மணம் வீசுகின்ற அப்புதிய இளவேனிற் காலம். என் தலைவன் என்னுடன் இல்லாமலே கழிந்து போய் விடுமோ? ஆற்றங்கரையில் வளர்ந்திருக்கின்ற அத்தி மரத்தின் உதிர்ந்து நண்டுகளால் மிதிக்கப் பட்ட கனிந்த அத்தி பழம் போல என் மனம் வருந்தும்படி இவ்வூரில் உள்ள கொடி போன்ற பெண்களின் நாக்குகள் என் காதலர் பிரிந்ததனால் கல்லென்று (ஒலிக் குறிப்பு) பேசிக் கொண்டிருக்கின்றனர்.
கருத்து: தலைவர் குறித்து சென்ற காலத்தில் வரவில்லை ஆதலால் ஊரார் பழியுரைக் கின்றனர்.
சொற்பொருள் விளக்கம்:
(அதவம் – அத்தி மரம் ; குளிறு – நண்டு)
- நாரைதான் சாட்சி
பாடியவர்: கபிலர்
துறை: மணந்து கொள்ளாமல் காலங் கடத்தும் தலைவன் போக்கை கண்டு வருந்தி எனக்கு உதவி செய்வதாக சாட்சி கூறுவார் எவரும்வில்லை என தலைவி பாடிய குறிஞ்சி திணைப் பாடல்:
“யாரும் இல்லைத் தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான்எவன் செய்கோ
தினைத்தனள் அன்ன சிறுபசும் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே”
விளக்கம்: தோழியே! அவன் என்னை களவு மணம் புரிந்த நாளிலே யாரும் இல்லை. சாட்சி சொல்லக் கூடியவர் எவரும் இல்லை. தலைவனாகிய கள்வன் மட்டும்தான் இருந்தான். அப்போது உரைத்த உறுதிமொழியை இப்போது மறுத்து பொய் புகல்வானாயின் நான் என்ன செய்வேன்? நீரோடையின் கரையிலே உட்கார்ந்து ஆராமீனின் வரவை எதிர்பார்த்து, தினையின் அடியைப் போன்ற சிறிய கால்களை உடைய நாரை தான் அங்கிருந்தது.
கருத்து: தலைவன் உறுதிமொழி அளித்தப்படி இன்னும் மணந்து கொள்ள வில்லை. நீ தான் இதற்கு வழி செய்ய வேண்டும்.
சொற்பொருள் விளக்கம்: (ஆரல் – ஆராமீன்; குருகு – நாரை)
- ஆண் குரங்கிற்கு அவளைத் தெரியும்
பாடியவர்: வெள்ளிவீதியார்
துறை: தலைவியின் நோய்க்கு காரணமே தெய்வம் தான் என கட்டுவிச்சி கூறியபோது தோழி தலைவியின் உண்மைநிலை உரைத்த குறிஞ்சி திணைப் பாட்டு:
“அரும் அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்குஎழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன்,
தகாஅன் போல தான்தீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்குவது அன்றே
தேக்கொக்கு அருந்தும் முள்ஏயிற்றுத் துவர்வாய்
வரையாடு வண்பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும் அக்கொடியோனையே”
விளக்கம்: அரும்புகள் மலர்ந்திருக்கின்ற கருமையான வேங்கை மரத்தின் பெரிய கிளைகளில் உட்கார்ந்து இருக்கும் மயில் மலர் கொய்கின்ற மகளிரைப் போல தோன்றும் மலை நாட்டு அவன் இவளுக்கு தகுதி இல்லாதவன் என கட்டுவிச்சி தீங்கான மொழியை கூறினாள். ஆயினும், இனிய மாங்கனிகளை பறித்து தின்னும், கூர்மையான பற்களும், சிவந்த வாயும் உடைய வலிமையான குரங்கின் தந்தையா கடுவனும் அக்கொடியோனை அறியும். அப்குரங்குகள் கண்ணால் கண்டதை நான் காணேன் என்று மறுத்து பொய்யுரை புகலும் தன்மை உள்ளது.
கருத்து: இத்தலைவியின் மாறுதலுக்கு காரணம் தெய்வம் அல்ல ஒரு ஆண் மகன் கொண்ட நட்பு தான் காரணமாகும்
சொற்பொருள் விளக்கம்:
(கடுவன் – ஆண் குரங்கு; தோகை – மயில்)
- என் அழகு பயனில்லை
பாடியவர்: கொல்லன் அழிசி
துறை: தலைவின் நிலை கண்டு வருந்தினாள் தோழி. அவளுக்கு நான் என் துக்கத்தை பொறுத்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் பசலை நோய் என் அழகை உண்டது என தலைவி சொல்வதாக அமைந்த பாலைத்திணை பாடல் இது:
“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்குஆங்கு
எனக்கும் ஆகாது என்ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்,
திதலை அல்குள் என்மாமை கவினே”
விளக்கம்: கன்றுக் குட்டியும் குடிக்காமலும் பாத்திரத்தில் கறந்து வைக்கப்படாமலும் நல்ல பசுவின் இனிய பால் வீணாக நிலத்தில் சிந்தினாற் போல, புள்ளிகள் பொருந்திய அல்குலை உடைய மாந்தளிர் போன்ற அழகிய நிறம் எனக்கும் பயன்படாமல் என் தலைவனுக்கும் பயன் படாது வீணாக பசலை நோய் உண்ணுவதற்கு விரும்புகின்றது.
கருத்து: தலைவன் பிரிந்தான்; என் மாந்தளிர் போன்ற அழகும் பயனில்லை அதை பசலை நிறம் உண்டு விட்டது.
- என் துயரை எவர் அறிந்தார்?
பாடியவர்: ஔவையார்
துறை: பொருள் தேடச் சென்ற தலைவன் வருவதாக சொல்லிச் சென்ற காலத்தில் வரவில்லை. அது கண்டு வருந்திய தோழிக்கு தலைவி கூறியதாக அமைந்த பாலைத்திணை பாடல்
“முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!
ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
ஆசு ஒல்லெனக் கூவுவேன் கொல்!
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே”
விளக்கம்: சுழலும் தன்மையுள்ள மெதுவாக அசையும் தென்றல் காற்று என்னை வருத்துவதனால் நான் தூங்காது நிற்கிறேன். என்னை துன்புறுத்தும் காம நோயை அறியாமல் நன்றாக உறங்கும் இவ்வூராரை முட்டித் தள்ளுவேனோ; அடிப்பேனோ; ஒரு காரணத்தை ஏற்படுத்திக் கொண்டு ‘ஆ’ என்று கூச்சல் போடுவேனோ; யானும் என்ன செய்வதென்று அறியேன்.
கருத்து: என் துன்பத்தை இவ்வூரில் உள்ள என் தாய் முதலிய உறவினர்களும் அறியாமல் உறங்குகின்றனர் இதற்கு நான் என்ன செய்வேன்.
- நெஞ்சே யார் உனக்குத் துணை?
பாடியவர்: ஔவையார்
துறை: இரவுக்குறியில் ஏமாந்த தலைவன் தலைவியை மணந்து கொள்ள எண்ணாமல் மீண்டும் இரவுக் குறியை நாடிய தன் நோக்கி கூறிய பாலைத்திணைப் பாடல்
“நல்லுரை இகந்து புல்உரை தாஅய்ப்
பெயல் நீர்க்குஏற்ற பசும்கலம் போல,
உள்ளம் தாங்க வெள்ளம் நீந்தி
அரிதுஅவா உற்றனை நெஞ்சே! நன்றும்
பெரிதால் அம்ம! நின்பூசல்! உயர் கோட்டு
மகவு உடை மந்தி போல
அகன்உறத் தழீஇக் கேட்குநர் பெறினே”
விளக்கம்: மனமே! நல்ல மொழியைப் பெறாமல் நீ பலனற்ற சொல்லை பொருந்தி மழை நீரை நிறையத் தாங்கிய பச்சை மண்பாண்டத்தைப் போல உள்ளம் பொறுக்க முடியாத ஆசை வெள்ளத்திலே முழுகி நீந்தி முடியாத காரியத்திற்கு ஆசைப் பட்டாய். உயர்ந்த கிளையிலே வாழும் தன் குழந்தையை மார்போடு தழுவிக் கொண்டிருக்கும் பெண் குரங்கைப் போல உள்ளன்போடு உன்னை ஆதரித்து உன் குறையைக் கேட்டு அதை நீக்குவாரை நீ துணையாக பெறுவாயானால் உனது போராட்டம் மிகவும் பெருமையுள்ளதாகும்.
கருத்து: இனி தலைவியை இரவில் காண முடியாது அவளை மணம் செய்து கொண்டால்தான் சந்திக்க முடியும்.
- கனாக் கண்டேன் தோழி
பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்
துறை: பொருள் தேடும் பொருட்டு பிரிந்த தலைவனால், தலைவிக்கு ஏற்பட்ட துக்கம் கண்டு அதற்கு காரணம் கேட்ட தோழிக்கு தலைவி சொல்லிய பாலைத்திணைப் பாடல்.
“கேட்டிசின் வாழி தோழி! அல்கல்
பொய்வல் ஆளன் மெய்உறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட, ஏற்றுஎழுந்து
அமளி தைவந் தன்னே; குவளை
வண்டுபடு மலரின் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே”
விளக்கம்: தோழியே வாழ்க, என் மாறுதலுக்கு காரணத்தைக் கூறுகிறேன். கேட்பாயாக, இரவில் பொய் புகல்வதிலே வல்லவனாகிய என் காதலன் என் உடம்பை அணைப்பது உண்மை போன்ற பொய்க் கனவு ஒன்று எழுந்து என் உள்ளத்தை மயக்க, உடனே தூக்கத்தை விட்டு எழுந்து என் படுக்கையில் அவன் இருக்கிறானா? என தடவிப் பார்த்தேன். அவனைக் காணாமையால் வண்டுகள் பறந்து அசைகின்ற குவளை மலரைப் போல மெலிந்து தனித்திருப்பவள் ஆனேன். நான் நிச்சயமாக இரங்கத் தக்கவள் தான்.
கருத்து: இரவில் என்னை தலைவன் தழுவிக் கொண்டதாக கனவு கண்டேன். அதுதான் என் மாறுதலுக்கான காரணம்.
– மா கோமகன்