குலதெய்வத்தைக் கண்டறிந்து வரவழைக்க

நிறையபேர் தங்களுடைய குலதெய்வம் எது என்று எந்த விவரமும் அறியாமல் உள்ளதாகவும், கடந்த மூன்று தலைமுறைகளாகவே குலதெய்வ வழிபாடு விட்டுப் போனதாகவும் சொல்வார்கள். ஏன் இப்படி? – kula deivathai kandariya

குல தெய்வத்தை அவர்கள் நிந்தனை செய்தோ அல்லது பங்காளிகளோடு சொத்துத் தகராறிலோ, ஊரைவிட்டு காலி செய்துகொண்டு போனபின் தெய்வத்தை அடியோடு மறந்து போனதோ, தெய்வமே கொடுத்த வம்ச சாபத்தால் பீடிக்கபட்டதாலோ, வீட்டு பெரியவர்களை/ வீட்டிற்கு வந்த மருமகளை பழிதீர்த்துக் கொண்ட காரணத்தினாலோ ஒவ்வொரு குடும்பத்திலும் அக் குலதெய்வம் அந்தந்த சந்ததிகளுக்கு தான் புலப்படாமல் இருக்குமாறு திரையைப் போட்டு வைக்கும். எத்தனைக் காலத்திற்கு? நூறாண்டுகளையும் கடக்கலாம்.  அதுவரை மூன்று தலைமுறைகளுக்கு எல்லா கஷ்டங்களும் தோஷங்களும் கோர தாண்டவம் ஆடி முடிந்திருக்கும். குல தெய்வத்தை சாந்தப் படுத்தி வீட்டிற்கு வரவழைக்கும் வரை இன்னல்களைச் சொல்லி மாளாது. உங்கள் ஜாதகத்தில் என்னதான் 100% யோகங்கள் இருந்தாலும் ஒன்றும் வேலை செய்யாது.

வளர்பிறை வெள்ளிக்கிழமை

வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முஹூர்த்தம் நேரத்தில் குடும்பத் தலைவரோ/தலைவியோ குளித்து முடித்து ஒரு புதிய சிவப்பு சதுரத் துணியில்: விரளி மஞ்சள் ஒன்று, சாம்பிராணி சிறிதளவு, கரித்துண்டு ஒன்று, சந்தனம் துண்டு /தூள், குங்குமம், விபூதி சிறிதளவு கொட்டி அந்தத் துணியை மடித்து முடிச்சாகக் கட்டி, தூபதீபம் காட்டி, வீட்டின் வாசக்கால் உள்பகுதியின் மேல்  தலையில் இடிக்காதவாறு சுவற்றில் ஆணி அடித்து அதில் கட்டித் தொங்க விடவும். தினமும் விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டைப் பெருக்கவோ, தலையில் பேன் பார்க்கவோ, தலைமுடியை வாருவதோ, வாசக்காலில் உட்காருவதோ, தீய சொற்கள் பேசுவதோ கூடாது – kula deivathai kandariya.

தொடர்ந்து ஏழு வெள்ளிக் கிழமைகள் பூ/பழம் நிவேதனம் வைத்து வழிபடவும். நிறைவேறும்வரை மாமிசம் உண்ணக்கூடாது. தெய்வத்தின் தரிசனத்திற்கு இந்தத் தாமதம் ஏனோ? வம்ச பாவ இருளில் இருந்த அந்த சந்ததியினரின் வினைகள் தீரும்வரை தரிசன பிராப்தம் கிடைக்காமல் இருக்கும் என்பது விதி.

வழிபாட்டு முறைகள்

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் வாசக் காலில் கட்டிய முடிச்சுக்கு தூபம்/ ஊதுவத்தி காட்டவும். தினமும் தெய்வத்திற்கு காலை/மாலை விளக்கு ஏற்றும்போது “எம் குலதெய்வமே எங்கு கோயில் கொண்டுள்ளாய் என்பதைக் காட்டி விடு. வீட்டிற்கு வந்து அருளாசிகள் தா” என்று உளமார வேண்டிக் கொள்ளுங்கள். கனவிலோ/ நினைவிலோ/ எப்படியோ யார் மூலமாகவோ குலதெய்வம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். ஒரு வார காலத்தில் சில நல்ல விஷயங்கள் தங்களது குடும்பத்தில் நடைபெறத் துவங்கும். தன்னை வெளிப்படுத்திக் கொண்டதும் அத்தலத்திற்குச் சென்று அபிஷேகம், பூ, பழம், வஸ்திரம், தங்கம்/வெள்ளி காணிக்கைத் தந்து, பொங்கல் வைத்து வணங்கி சரண் அடையுங்கள். பிறகு வருடாவருடம் போய் வழிபடுங்கள். 

அதன்பிறகு தடைகள் எல்லாம் நீங்கி எல்லாமே அதிசயமாக நடக்கும். அப்படி வெளிப்பட்டவுடன் அந்த தெய்வத்தை ஆராதியுங்கள். தியான வழிபாட்டில் நீங்கள் கூப்பிட்ட போதெல்லாம் உங்களிடம் வந்து ஆசிர்வதித்துவிட்டுப் போவாள்.

You may also like...