ஆன்மீகத் தேடல்
ஆன்மீகத் தேடலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் .. ஆன்மீகம் இறைவனோடு உள்ள பக்தியை மட்டும் குறிக்காது.. அந்த பக்தி அளிக்கும் மன பக்குவத்தையும் சேர்த்து தான்..
கோயிலுக்குப் போய் சாமியை கும்பிட்டு விட்டு மனம் போன போக்கில் வாழ்வதில் .. என்ன பலன். இறைபக்தி மனதில் நேர்மறை எண்ணங்களை உண்டாக்க வேண்டும்.மனம் பக்குவப்பட்டு அறநெறியில் சிந்தனை செல்ல வேண்டும். இந்த மாற்றங்களை ஆன்மீகம் நமக்குள் கொண்டு வந்தால் அது முழுமை பெற்ற ஒரு பக்தி நிலை.
ஒரு சிலர் கோயிலுக்கு சுற்றுலா தலம் செல்வது போல போகிறார்கள்.. .. கோயிலுக்கு போவதும் சாமி கும்பிடுவதும் வெறும் கடமை என்ற முறையில் செய்வதில் எந்த பலனும் இல்லை..நம் மனம் பக்குவப்பட்டு உள்ளார்ந்து ஒரு மாற்றம் வந்தால் மட்டுமே அதில் பலன் உண்டு.
நம் நாட்டில் மதங்கள் பல இருந்தாலும், ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கடவுள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாட்டு முறை இருந்தாலும், மொத்தத்தில் எல்லா மதங்களும், எல்லா கடவுளும், கூறுவது ஒன்றே ஒன்றுதான் சக மனிதரை நேசிக்கவும்.. அன்பு செலுத்தவும் ..அறநெறியில் வாழ்க்கையை நடத்துவதுவும் தான் .
ஒவ்வொரு மதத்தின் புனித நூலும் கற்பிப்பது அது தான். ஒவ்வொரு மதத்தின் முக்கிய குருமார்களும் வலியுறுத்துவதும் அது தான் .
ஆனால் கடவுளின் பெயரால் சண்டை.. கடவுளின் பெயரால் கலவரம் …அன்பை விடுத்து நீ பெரியவனா நான் பெரியவனா என்ற சண்டை எதற்கு ..ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட்டு இதன் கொள்கையை உள்வாங்கியவர்கள் ஒருநாளும் இத்தகைய நிகழ்வுகளில் ஈடுபட மாட்டார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி பக்தி சிரத்தையாக தவறாமல் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவார்.எல்லா பூஜைகளிலும் கலந்து கொள்ளுவார்.
ஆனால் வீட்டில் பார்த்தால் மருமகளை படாதபாடு படுத்துகிறார். அவள் கணவனுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ விடாமல் எவ்வளவு தொல்லை பண்ண முடியுமோ அவ்வளவு தொல்லை பண்ணுவார்.
அதேபோல பக்திமானாக இருந்து கொண்டு தொழிலில் ஏமாற்றுபவர் ஒருவர்.கொள்ளையடிக்கும் பணத்தில் ஒரு பகுதியை உண்டியலில் போட்டு விடுவார். செய்த பாவம் அதனால் கரைந்து விடுமா .கடவுளை கும்பிட்டு விட்டுஅறமற்ற முறையில் வாழ்வது எந்த பலனும் தராது.
உண்மையான இறைபக்தி என்பது ..அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துவது.. அறநெறியில் வாழ்க்கை நடத்துவது.. அனைத்து மதத்தின் கடவுளும் விரும்புவது அதுதான் .அதுதான் உண்மையான இறை பக்தி.. இறைவன் விரும்பும் பக்தியும் கூட…
தி.வள்ளி, திருநெல்வேலி.