செலவும் சிக்கனமும்

செலவு செய்வது என்பது தேவைக்கு செலவு செய்வது தேவைக்கு அதிகமாய் செலவு செய்வது ..என இருவகை படுத்தலாம்.ஒருவர் வருமானத்திற்கு ஏற்றவாறு திட்டமிட்டு தேவைகளை பூர்த்தி செய்து..அதே நேரம் தேவையற்ற செலவுகளை குறைத்து  கொள்வது சிக்கனம். தேவைக்கு கூட செலவு செய்யாமல் இருப்பது நப்பித்தனம் ..கருமிதனம் என்றும் கூறலாம் .

self motivational thoughts

சிக்கனத்தையும் நப்பித்தனத்தையும் சிலர் குழப்பி கொள்கிறார்கள் …தேவைக்கு செலவு செய்யாத ஒருவரை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் ..அது போன்றே தேவைக்கு அதிகமாய் செலவு செய்பவரும்.

சரி விஷயத்திற்கு வருவோம் ..1979 ஆம் ஆண்டு நான் முதல் தனிக்குடித்தனம் போகும் போது என் வீட்டிற்கு வந்த என் அப்பா எனக்கு பரிசளித்தது ஒரு வரவு செலவு கணக்கு நோட்டு. தினசரி செலவை எழுத சொல்லுவார். கடைசியில் கூட்டிப் பார்க்கும்போது வரும் தொகை நம் வருமானத்தில் எவ்வளவு செலவழித்திருக்கிறோம் என்பதை தெளிவாக காட்டும். அது அதிகப்படியாக தெரிந்தால் அதிகமாக பணத்தொகை உள்ள செலவு எதுவென்று பார்த்து அதில் எதை குறைக்க முடியும் என்று யோசிப்போம்.தினசரி கணக்கெழுதும் பழக்கத்தை  இன்றுவரை நான் தொடர்கிறேன்.அதனால் மாத வரவும் செலவும் துல்லியமாக
தெரியும்.

இதுபோல கணக்கு எழுதும் பழக்கம் எங்கள் வீட்டில் என் அம்மா ,மாமியார் போன்றவர்களுக்கே உண்டு .. அதனால் விலைவாசி.. எந்த மாதத்தில் எந்த பொருள் விலை கூடுகிறது என்பதை எல்லாம் தெளிவாக புள்ளி விவரம் வைத்திருப்பார்கள்..புளி , மிளகாய் வற்றல் இதெல்லாம் மலிவாய் இருக்கும் நேரத்தில்  வாங்கி பக்குவப்படுத்தி  பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள். மிளகாய் வற்றல் 80 ரூபாய்க்கு விற்கும் போது அவர்கள் 30 ரூபாய்க்கு வாங்கிய வற்றலை உபயோகிப்பர்.

“மூடை நிறைய அரிசி இருந்தாலும் பானையில் அளவாகத்தான் போடனும்” என்பாள் என் ஆச்சி. குளிர்சாதன பெட்டி கூட இல்லாத நிலையில்  எனக்குத் தெரிந்து எந்த உணவு பொருளையும்  வீணாக்கி தரையில் கொட்டிய நினைவு இல்லவே இல்லை.

அந்தக் காலத்தில் காய் வெட்டுவதும் வெங்காயம் நறுக்குவதும் என்பது துளி கூட காய் வீணாகாமல் நறுக்குவார்கள். வெங்காயத்தின் தோலை மட்டும் தான் உரிப்பார்கள். இப்போத தோலை பீலரை வைத்து வெள்ளையாக தெரியும் வரை சீவி போடுகிறார்கள்.
காய்கறி விற்கும் விலையில் சிக்கனம் என்பது யார் மனதிலும் இல்லை ..

என் வீட்டிற்கு என் உதவிக்கு வரும் பெண் கூறுவாள் தட்டில் சாதம் குழம்பு போட்டு காய்கறியை வைத்து பிள்ளைகளுக்கு  கொடுத்து விடுவேன்.. சாப்பிட முடியவில்லை என்றால்  வெளியே கொண்டு போய் கொட்டுவார்கள் என்பாள். இன்று பொருட்கள் விற்கும் விலையில் தூர கொட்டுவது சரி கிடையாது.”ஒரு பருக்கை சாதம் வீணாக்கினால் ஒன்பது நாள் பட்டினி” என்று என் ஆச்சி சொல்வாள்.

என் வீட்டில் பிள்ளைகள் உணவை  வீணாக்கினால் ” நீங்களே கொண்டு போய் காம்பவுண்ட் சுவரில் பூனைக்கு வைத்துவிட்டு வாங்க..சாதத்தை வீணாக்குற பாவத்தை நான் செய்ய மாட்டேன் ” என்று கூறிவிடுவேன். அப்படியே அவர்கள் செய்து ஓரிரு நாட்கள் செய்துவிட்டு,  அதற்குப் பிறகு உணவை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள். இன்றுவரை உணவை எங்கள் வீட்டில் யாரும் வீணாக்குவதில்லை .

எவ்வளவு சம்பாதித்தாலும் திட்டமிட்டு செலவழிக்காவிட்டால்
பணம் கையில் நிற்காது. தேவையற்ற செலவுகளை குறைத்து ..தேவையானதற்கு சிக்கனமாக செலவு செய்தாலே வரவிற்குள்ளாக செலவை அடக்கி விடலாம்.

என் தோழி கல்லூரி ப்ரொபசர். உழவர் சந்தையில் தான் போய் காய் வாங்குவார். முதலில் காய்கறி போர்டை பார்த்து அன்றைய தேதியில் எந்த காய்கறி விலை  குறைவோ அதை வாங்குவார். இன்று பீன்ஸ் விலை அதிகம் என்றால் சௌசௌ வாங்கிக் கொள்வேன் என்பார்.காயின் விலைக்கு அதற்கு ஏற்ப மெனு போட்டுக் கொள்வார். எல்லோரும் அவரை கேலி பண்ணினாலும் கவலைப்பட மாட்டார்.

அதேபோல  ஏதாவது ஒரு வேலைக்காக காரை   எடுத்தால்   வழியில் உள்ள வேலைகளை முதலிலேயே திட்டமிட்டு கொள்வேன். போகும்போது இந்த இந்த வேலையை முடிக்க வேண்டும் வரும்போது இந்த இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று அதனால் எனக்கு பெட்ரோல் செலவு ஆனாலும் வேலைகள் நிறைய முடித்து விடுவேன் என்று சொல்லுவார். இதே விஷயத்தை  நடிகை சௌகார் ஜானகி  ஒரு பேட்டியில் ஒரு முறை கூறியிருந்தார்.ஒரு நடிகை என்றாலும் அவர் திட்டமிடல் என்னை ஆச்சரியப்படுத்தியது .

விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகும் இந்த நிலையில் சிக்கனமாக இருப்பது ஒன்றே நம் கண் முன் தெரியும் எளிதான வழி .. எந்த நேரத்தில் எப்போது அவசர செலவுகள் வரும் என்று சொல்ல முடியாது. அதை சமாளிக்க
எப்போதும் சேமிப்பு அவசியம்.

தி.வள்ளி, திருநெல்வேலி.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *