பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 6

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பாரதியாரின் புதிய ஆத்திசூடி பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 6

bharathiyar puthiya aathichudi

தூற்றுதல் ஒழி

தூறல் என்ப கவின் மழை
தூற்றுதல் என்பது பழிப்பு
தூறலால் உள்ளக்களிப்பே
யாவருக்கும் எனவிருக்க
தூற்றுதல் பிறரை என்பது
அவருள்ளம் வருந்துவதால்
ஏற்புடையது அன்று

தெய்வம் நீ என்றுணர்

இருக்குமிடம் விட்டு இல்லா இடம்
தேடி எங்கெங்கோ அலைவார்
ஞான தங்கமே இக்கூற்றை
நன்கு உணர
நீயே தெய்வம் என்பதனை
உரைக்க சாமியார் சாது
என வேண்டா நீயே ஞானி

தேசத்தை காத்தல் செய்

உயிரினும் மேல் உள்ளது
எதுவென ஆராய்ந்திருக்க தேசம்
என்பதூஉம் உங்கள்
சிந்தனைக்கு வந்ததெனில்
உன்னில் உயர்ந்தோரென
உலகத்தில் வாழ்வோரில்
எவரும் ஈடில்லையாமே

தையலை உணர்வு செய்

உன் செயலால் ஒருதுளி
கூட துன்பமோ துயரோ
உள்ளத்தும் உடலுக்கும்
வாராதென தையலர்கள்
நினைத்திருக்க உலகில்
உன்னைவிட உயர்ந்தோன்
எவரும் இல்லையே

தொன்மைக்கு அஞ்சேல்

நின்று நிதந்தோறும் பழங் கதை
பேசி பயமுறுத்திச்
செல்வார் பலர் அதுகேட்டு
அஞ்சி நின்று அறநெறிக்கு
எதிர்வினை ஆற்றும் உலக
மாந்தர் பயிரல்ல பதர் என
அறிதல் வேண்டும்

தோல்வியில் கலங்கேல்

தோல்வியென்றே ஒன்று
இல்லையாயின் அனுபவம்
பிறத்தல் அரிது அனுபவம்
இல்லாத மனிதன் அரை
மனிதன் என்பதுவே உலக
வழக்கு என உணர்ந்திட
கலக்கம் தோல்விகில்லை

தவத்தினை நிதம் புரி

உலகில் தவமெனப்படுவது
யாதென தானம் தியானம்
தருமம் யோகா இவையும்
நிதானமும் என்பதன்றியே
பிரிதில்லை எனவே நிதம்
தவமியற்றல் மானுடராம்
எல்லோருக்கும் எளிதே – bharathiyar puthiya aathichudi 6

நன்று கருது

நல்லன செய்தால் நலனே
செய்வோர்க்கும் அதன்
பலனை பெறுவோர்க்கும்
எனவே நல்லன செய்ய
இயலாவிடினும் செய்திட
உள்ளத்தால் நல்லனவை
கருதுவதே சிறப்பாம்

நாளெல்லாம் வினை செய்

வினை என்பது செயலன்று
நாளொருமேனி நடப்பில்
தன்னுருமாறி செயலென
ஆனதே வினையென்பதே
தொழிலாம் நாளெல்லாம்
சோம்பி இராதிருத்தலும்
நல்வினைதானே

நினைப்பது முடியும்

நினைத்ததை முடித்தவன்
நான் என வாழ்ந்தோரின்
வாழ்க்கை வரலாற்றை
உற்று நோக்கிடின் கடின
உழைப்பே காரணமென
அறிந்திடின் நம்மாலும் கூட
நினைப்பது முடியும் தானே

– மா கோமகன்

You may also like...