அதிகாரம் - 26முகப்பு / Home
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
(251) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?
கலைஞர் மு. கருணாநிதி - தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
(252) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
கலைஞர் மு. கருணாநிதி - பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
(253) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.
கலைஞர் மு. கருணாநிதி - படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல
ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
(254) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே
கலைஞர் மு. கருணாநிதி - கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
(255) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
கலைஞர் மு. கருணாநிதி - உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
(256) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.
கலைஞர் மு. கருணாநிதி - புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
(257) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.
கலைஞர் மு. கருணாநிதி - புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
(258) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
கலைஞர் மு. கருணாநிதி - மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
(259) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.
கலைஞர் மு. கருணாநிதி - நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
(260) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
கலைஞர் மு. கருணாநிதி - புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்