திருக்குறள்

அதிகாரம் - 32முகப்பு / Home

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

(311) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

கலைஞர் மு. கருணாநிதி - மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

(312) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

கலைஞர் மு. கருணாநிதி - சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

(313) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

கலைஞர் மு. கருணாநிதி - யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

(314) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

கலைஞர் மு. கருணாநிதி - நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

(315) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?

கலைஞர் மு. கருணாநிதி - பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

(316) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

கலைஞர் மு. கருணாநிதி - ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

(317) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.

கலைஞர் மு. கருணாநிதி - எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

(318) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?

கலைஞர் மு. கருணாநிதி - பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.

(319) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

கலைஞர் மு. கருணாநிதி - பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

(320) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.

கலைஞர் மு. கருணாநிதி - தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது

Previous | Next