தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
என்னுடைய அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் போது நானும் என் நண்பர்களும் வெளியே போய் கொஞ்சம் அரட்டை அடித்துவிட்டு வருவதுண்டு. அப்படி செல்லும்போது அலுவலக வரவேற்பு அறையில் அன்றைய செய்தித்தாள்கள் மேசையின் மேலே அடுக்கப்பட்டிருக்கும். அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே செல்வது வழக்கம். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட இருப்பதாக முதல் பக்கத்தில் செய்தி வந்திருந்தது. நான் பெருமையோடு வாசித்து பகிர்ந்தேன். அப்போது அங்கிருந்த நண்பர்கள் யார் பாஸ் இவர் என்ற கேள்வியை கேட்டார்கள். நானும் அவர் ஒரு எழுத்தாளர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத நபர் என்று விளக்கினேன் sramakrishnan sanjaram.
இந்த சூழ்நிலையில் நண்பர் நீரோடை மகேஷ் அவர்கள் எஸ்.ரா அவர்களுக்கு ஒரு வாழ்த்து கட்டுரை எழுத வாய்ப்பளித்தார். ஆனால் நான் அதை வாழ்த்து கட்டுரையாக அல்லாமல், அவரையும் (எஸ்.ரா) அவரது நூல்களையும் அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் இந்த கட்டுரையை அமைத்தேன்.
எஸ். ரா
எஸ்.ரா அவர்கள் அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் மள்ளாக்கினறு கிராமத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே வாசிப்பு பழக்கத்தை அவரது வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டவர். ஆங்கில இலக்கியத்தில் இளங்களைப் பட்டம் பெற்றார். ரஷ்ய இலக்கியங்களின் மீது தீராத காதல் கொண்டவர். தமிழ் எழுத்தாளர்களிலேயே எழுத்தை மட்டும் பணியாகக் கொண்டு அதில் வரும் வருவாயில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும்.
தேசாந்திரி பதிப்பகம்
பயணங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர், இந்தியாவின் குறுக்கு நெடுக்கு அனைத்தையும் மக்களின் மீதுள்ள நம்பிக்கையும் அன்பையும் மட்டுமே மூலதனமாக வைத்து பயணம் செய்து கொண்டிருப்பவர். தேசாந்திரி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். தேசாந்திரி என்னும் பெயரில் பதிப்பகம் தொடங்கப்பட்டு அவரது மற்றும் இதர எழுத்தாளர்களின் நூல்களும் அவரது பதிப்பகத்தால் பதிப்பிக்கப்படுகிறது.
எஸ்.ரா வின் எழுத்துக்கள் அனைத்தும் தனது கரிசல் நிலத்தையும் அதில் வாழும் மக்களின் இன்ப துன்பங்களையும், அவர்களின் மனநிலையையும் படம் பிடித்து காட்டுவதாவே அமைந்துள்ளது.
கரிசல் மண்ணை கருப்பு கடல் எனவும், கானலை அலைகள் எனவும் வருணிப்பதிலிருந்து அந்த நிலத்தின் தாக்கும் வெயிலையையும் அதன் வியர்வையின் வாசனையையும் அவரின் எழுத்துக்கள் வாயிலாக நாம் உணர முடியும்.
சஞ்சாரம்
சஞ்சாரம் நாவலின் கதைக்களமும் இந்த கரிசல் மண் தான். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமத்தில் இருந்து தான் கதை தொடங்குகிறது. பக்கிரி ஒரு நாதஸ்வர கலைஞர். ராகங்களில் சஞ்சாரம் பண்ணும்போது தன்னையே மறந்து ரசித்து வாசிக்க கூடியவர். பழனி, ரத்தினம் என குழுவில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு கோயில் திருவிழாவில் வாசிக்க செல்கிறார்.
தான் நாதஸ்வரத்திலிருந்து அமுதை காற்றில் பரப்பிக் கொண்டிருந்தார். அருகிலிருந்தவர்களுக்கு அது வெறும் ஒலியாகவே தெரிந்தது. அங்கு ஒரு பெரியவர் கண்ணீருடன் பக்கிரியின் அருகில் வந்து தேவாமிர்தம் என்று சொல்லி 50 பைசாவை பக்கிரியிடம் கொடுத்துவிட்டு சென்றார். குழுவில் இருந்தவர்கள் நமக்கு கிடைத்த பரிசை பார்த்தாயா என சலித்துக்கொண்டனர். ஆனால் பக்கிரியோ நம்மை போன்ற கலைஞர்களுக்கு இதைவிட பெரிய சன்மானமோ அங்கீகாரமோ வேறொன்றுமில்லை எனக்கூறினார்.
காரக்குறிச்சி அருணாச்சலம் பற்றி
இதுபோன்றதொரு சம்பவம் நாதஸ்வர சக்ரவர்த்தி எனப் புகழ் பெற்ற காரக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் வாழ்வில் நடந்ததாக வாசித்ததுண்டு. அருணாச்சலம் அவர்களின் புகழ் என்ன என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலமாக தெரிந்துகொள்ளலாம். நமது முதல் பாரத பிரதமர் நேரு அவர்கள் விமானத்தில் அருணாச்சலத்தை டெல்லி வரவழைத்து அவரது இசையை கேட்டு மகிழ்ந்ததாக செய்திகள் உண்டு. நமது முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் ஆகியோரும் இவரது ரசிகர்கள்.
அப்படி இசை சாம்ராஜ்யம் செய்தவர் திரு. கள்ளக்குறிச்சி அருணாச்சலம் அவர்கள்,கோவில்பட்டியிலுள்ள பிள்ளையார் கோவில் திருவிழாவில் இலவசமாக நாதஸ்வர கச்சேரி நடத்தி கொடுப்பார். அங்கு உள்ள பேருந்து நிலையத்தில் ஒரு மனநலம் குன்றியவர் யாரென்றும் தெரியாமல் சுற்றி திரிவது வழக்கம். ஒரு நாள் கச்சேரி வாசித்து கொண்டிருந்த அருணாச்சலம் அவர்களின் முன்வந்து தான் கையிலிருந்த 50 பைசாவை கொடுத்தார், அதை அருணாச்சலம் அவர்கள் தனக்கு கிடைத்த அங்கீகாரமாக எண்ணி அந்த 50 பைசாவை கண்களில் ஒற்றிக்கொண்டார். அப்படி யார் மனதையும் கட்டிப்போட வைத்தது அவரின் நாதஸ்வர இசை.
சஞ்சாரம் கதையமைப்பு
கோயில் திருவிழாவில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் பணம் கேட்டு சென்ற பக்கிரி மாட்டிக்கொண்டார். கலைஞர் என்று கூட பார்க்காமல் அவரின் சாதியை காரணம் காட்டி கட்டி வைத்து உதைத்தார்கள். முகத்திலும் உடலிலும் ஏற்பட்ட காயத்தால் துடித்துப்போனார் பக்கிரி. அவருடன் ரத்தினத்தையும் கட்டி வைத்து அடித்தார்கள். அங்கிருந்து தப்பிக்கும்போது அங்குள்ள கொட்டகைக்கு பக்கிரி மற்றும் ரத்தினத்துடன் தீ வைத்து விட்டு கிளம்பினர். இதை காரணம் காட்டி அவர்களை போலீஸ் துரத்த ஆரம்பித்தது. அங்கிருந்து தப்பித்து ஒவ்வொரு இடமாக பயணித்து கடைசியில் சென்னையை அடைகின்றனர். வரும் வழியில் ஒவ்வொரு சம்பவர்களையும் சுவைபட அமைத்திருக்கிறார் எஸ்.ரா அவர்கள். ஒவ்வொரு இடத்தின் ஊர் பெயர்கள் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்து வரும் காலை
முன்னொரு நாட்களில் கோவில் உற்சவங்களில் நாதஸ்வர கலைஞர் மல்லாரி வாசித்தால்தான் கடவுள் எழுந்தருளி சாமி புறப்பாடு தொடங்கும். இன்று நிலைமை வேறு நாதஸ்வர கலைஞர்களை சாதி அடிப்படையில் பிரித்துப்பார்த்து அவர்களின் திறமைகளை குழிதோண்டி புதைத்து கொண்டிருக்கிறோம். கோவில்களில் இப்போதெல்லாம் மல்லாரி இசைக்கப்படுவதில்லை.
இயந்திரத்தில் தான் இசை இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கலைஞனும் தனது கலையை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் விட்டுவிட்டு செல்கையில் நாம் நம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் விட்டு நெடுந்தூரம் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
நீரோடையின் வாழ்த்து
இவ்வாறாக நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கையையும், சாதி ஒடுக்கு முறைகளால் கலைஞர்கள் அழிவதையும் மிக நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த சஞ்சாரம் நாவல். சிறந்த படைப்பை படைத்த எஸ்.ரா அவர்களுக்கு அவரின் இந்த பயணம் மேலும் பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற நீரோடை சார்பில் வாழ்த்துகிறோம்.
– ஹேமநாதன்