மீராவின் குக்கூ நூல் ஒரு பார்வை
தாணப்பன் கதிர் அவர்கள் எழுதிய நூல் விமர்சனம். காதலைப் பாடுவது உலக மகாக் குற்றம், மன்னிக்க முடியாத சமூகத் துரோகம் என்று “முற்போக்கு”த் திறனாய்வாளர்களின் வாயினை மூடி துணிந்து கவிதை படைக்க முடியுமென்றால் அவர் மீராவைத் தவிர வேறு யாராகவும் இருக்க வில்லை. அத்தொகுப்பு “கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்” … வாசிப்புப்பட்டியலில் இருக்கும் மீராவின் அடுத்த தொகுப்பு இது – kukkoo puthaga vimarsanam.
மீராவின் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு புதிய நவில்முறையைப் பார்க்கலாம் என்று அணிந்துரைத்திருக்கின்றார் அப்துல் ரகுமான். அவர் மேற்கோளிட்ட கவிதைகளில் ஒன்று..
“பழமை புதுமை
இரண்டுக்கும் நாங்கள் பாலம்
எலி வாகனம்
ஹெலிகாப்டர் வாகனம்
இரண்டையும் கொண்டாடும்
எங்கள் காலம்”
இளைஞர்கள் எல்லாரையும் கவிஞர்களாக மாற்றிய உந்து சக்தி மீரா என்று புளங்காகிதம் அடைகின்றார் மதிப்புரைத்திருக்கும் கவிஞர்பாலா..
ஜப்பானிய உடையுமில்லை. நடையுமி்ல்லை. மூன்று வரிச் சட்டங்களும் இல்லை. தமிழ்ச் சாயலோடு, தமிழ்ப் பாட்டு, தமிழ்க் காற்று..இதுதான் குக்கூ.. மீரா மீராதான் என்று பாலா சொன்ன பிறகு நாமென்ன சொல்ல முடியும் உடன்படுவதைத் தவிர….!!
அவர் மேற்கோளிட்ட கவிதைகளில் இரண்டு..
“யாரோ வைத்த நெருப்பில்
ஏழைக் குடிசைகள் எரிந்தன;
வளரும் புகையில்
மாளிகை சில தெரிந்தன.”
“தேக்கடிக் கரையில்
துதிக்கையைத்
தூக்கிக் காட்டிக்
குட்டியிடத்தில் சொன்னது
யானை ஒன்று,
அதோ பார் படகில்
மனிதர்கள்’ என்று…
அறுபதுகளில் வாழ்ந்த ஈழத்துமகாகவியின் குறும்பாக்களில் மனதைப் பறிகொடுத்து நிறைய முறை படித்துத் திளைத்தவன் நான் என்று கூறி ஓடுகிற ஓட்டத்தில் இக்கவிதைத் தொகுப்பினில் உள்ள கவிதைகளைப்படித்துத் தூக்கி எறிந்து விடாமல் கொஞ்சம் நிதானமாக படிக்க வேண்டும் என்று வேண்டுகோளிடுகின்றார் தமது முன்னுரையில் மீரா.. – kukkoo puthaga vimarsanam
தாமரையில் வெளிவந்த கட்டுரை
இவை தவிர கவிஞர் தமிழ்நாடனின் மீரா பற்றி எழுதி தாமரையில் வெளிவந்த கட்டுரையும் இருக்கிறது வாசித்துத்தீர்க்க..
மேம்பட்ட கவிஞர்களை விட நம்மால் வேறென்ன சொல்லிட இயலும்.? மீராதாசனாய் வாசித்து வாசிப்பனுவத்தைப் பகிர்வதைத் தவிர..
இலக்கியக் கூட்டம்
பரவசமூட்டும்
பக்திக் கூட்டம்
எந்தக் கூட்டம் என்றாலும்
வைர மூக்குத்தி கடுக்கன் சகிதம்
முன்னால் இருப்பாள்
அந்த மாது
காது மட்டும் கேட்காது..
வலி மிகுந்த வரிகளாய்..
மார்கழி மாத விடியல்
குளித்து முடித்துக்
குங்குமப் பொட்டிட்டு
மலம் அள்ள வந்தாள்
தோட்டி மகள்.
ஆகா இப்படியும் ஒரு காதல் தீபம்..
தெருவெங்கும்
கார்த்திகைத் தீபம்
தேடினேன்
ஒவ்வொன்றின்
ஒளிச்சுடரின் ஊடே
உன் சொரூபம்..
நைய்யாண்டியாய் ஒன்று..
கண்டுபிடித்தேன்
கைக்குட்டையை நொடியி்ல்
கரித்துணியாய்
அடுப்படியில்
தொலைத்துக் கொண்டிருக்கும் வனத்திற்கும் மரத்திற்குமாய்..
உச்சி மலையில்
தவம் செய்தொரு மரம்
கேட்கும் வரம்…
சாலையில் நிற்க…
கிராம வாசம் தனை நேசமாய் கடத்தும் கவிதை..
நாளெல்லாம்
டீசல் சாராய
நாற்றம் உமிழும்
நகரத்துப் பேருந்தில்
காலையில் மட்டும்
கறிவேப்பிலை
மணங்கமழும்
கறிகாய்க்காரக்
கண்ணம்மாவால்…
கற்பனையின் உச்சமாய் நெஞ்சைத் தொட்டக் கவிதை இது..
கொஞ்சமும் அலுக்காமல்
ஆலமரம்
எத்தனை காலம் இப்படி
தண்ணீரில் முகம் பார்க்கும்
கரையில் நின்றபடி..
நூற்றிப்பத்துக் கவிதைகளையும் சொல்லிவிடலாம்தான்.. ஆம்..! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் ஈர்த்து வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறது. வாசித்துத்தான் பாருங்களேன்…
பதிப்பு 2008, அகரம்பதிப்பகம் தஞ்சாவூர். விலை ரூ.40, பக்கங்கள் 87
– தாணப்பன் கதிர்
மிக அருமை…. ஆழமான அழகான விமர்சனம் .வாழ்த்துகள்
கவிஞரின் விமர்சனம் மிக அருமை …நீரோடையில் சில கை நீரை அள்ளிப் பருகியது போல , இந்நூலில் சுவையான சில கவிதைகளை நம் பார்வைக்கு அளித்துள்ளார். அனைத்தும் அருமை…
உங்கள் நூல் விமர்சனம் நன்றாக உள்ளது மனம் நிறைந்தவாழ்த்துக்கள்.எனக்கு தமிழ் இலக்கியம் மீது அளப்பரிய ஈடுபாடு இப்போது ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு என்ற தலைப்பில் நூல் ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன் சுமார் ௧௦௦௦ ஹைக்கூ வரையில் நூலில் இடம் பெறும்.உங்கள் நீரோடை கவிதைமற்றும் கட்டுரைகள் எழுத விரும்புகிறேன் தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி என்றும் அன்புடன்பலகுமார்