குறுந்தொகை – அறிமுகப்பகுதி
குறுந்தொகை ஒரு நீண்ட அறிமுகமாக: மதுரையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு சங்கம் இருந்தது. அதை ஆதரித்து வந்தவர்கள் பாண்டிய மன்னர்கள் இந்தச் சங்கத்திற்குக் கடைச்சங்கம் என்று பெயர் – kurunthogai paadal vilakkam
அதற்கு முன்னே இரண்டு சங்கங்கள் இருந்தன. முதலில் தோன்றிய சங்கம் முதற்சங்கம் என்று பெயர். அது மறைந்து இரண்டாவதாக தோன்றிய சங்கம் இடைச்சங்கம் ஆகும். அது மறைந்த பின் தோன்றியதே கடைச் சங்கம்.
36 நூல்கள்
முதற் சங்கமும் இடைச் சங்கமும் இருந்த இடம் கபாடபுரம். இவ்வூர் கடல் கொண்ட தமிழகத்திலே இருந்ததாக கூறப் படுகிறது. இந்த முச்சங்க வரலாறுகள் “இறையனார் அகப்பொருள் உரை” என்ற நூலில் காணலாம்.
முச்சங்கங்கள் என்பது கட்டுக்கதை என்பாரும் உண்டு. அதைப்பற்றிய ஆராய்ச்சி இங்கு வேண்டாம். நமக்கு கிடைத்த நூல்கள் இரண்டாயிரம் முற்பட்ட நூல்களை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென் கீழ் கணக்கு என 36 நூல்கள் ஆகும்.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையின் மூலமும் எளிய உரையும் நாம் இனி காண இருக்கிறோம்.
எட்டுத்தொகை நூல்கள் இவையென மனப்பாடம் செய்ய உள்ள பாடல் இதோ:-
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்துங் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை”
என்பதாகும். இதில் குறுந்தொகையை நல்ல என்ற அடைமொழி உடன் குறிப்பிட்டமை காண்க.
எட்டு நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றிய பாடல்கள். பதிற்றுப்பத்து, புறநானூறு இரண்டும் புறப்பொருள் பற்றிய பாடல்கள். பரிபாடல் அகமும் புறமும் கலந்த பாடல்கள் என அறிக.
உவமைச் சிறப்பால் பெயர் பெற்றவர்கள்
நாலடி முதல் எட்டடி வரை உள்ள பாடல்கள் குறுந்தொகை.
ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை உள்ள பாடல்கள் நற்றிணை.
பதின்மூன்று அடி முதல் முப்பத்தொரு அடிகள் உள்ள நானூறு பாடல்கள் அகநானூறு.
ஐந்து திணைகளுக்கும் நூறு நூறு பாடல்கள் வீதம் ஐந்நூறு பாடல்கள் கொண்டது ஐங்குறுநூறு எனவும் தெரிந்து கொள்ளுங்கள்.
குறுந்தொகை நூலில் மொத்தம் 401 பாடல்கள் உள்ளன. இவற்றை 206 புலவர்கள் பாடி உள்ளார்கள். அதில் 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அதில் அமைந்த சிறப்பு தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக வழங்கப்பட்டுள்ளது.
அணிலாடு முன்றிலார், செம்புலப்பெயல் நீரார், குப்பைக் கோழியார், காக்கை பாடினியார், விட்ட குதிரையார், மீனெறி தூண்டிலார், ஓரேருழவனார், காலெறி கடிகையார், கல்பொரு சிறுநுரையார், முதலியோர் உவமைச் சிறப்பால் பெயர் பெற்றவர்கள் ஆவார்கள்.
திருமாளிகை சௌரிப் பெருமாளரங்கன்
இதன் 401 பாடல்களில் இரு பாடல்கள் தவிர மற்றவை நான்கு அடிகள் முதல் எட்டு அடிகள் வரை கொண்டவை ஆக அமைந்துள்ளன. இந்நூலுக்கு பேராசிரியர் 380 பாடலுக்கும் மீதமுள்ள பாடல்களுக்கு நச்சினார் கினியரும் உரை எழுதிய செய்திகள் கிடைக்கின்றன ஆனால் உரை நூல் கிடைக்கவில்லை.
சுவடிகளில் எழுதப்பட்டு பயன்பாட்டில் இருந்தவற்றை முதன் முதலில் திருக்கண்ண புரத்தை சார்ந்த திருமாளிகை சௌரிப் பெருமாளரங்கன் 1915 ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். அப்பதிப்பின் அடிப்படையாக கொண்டு இங்கு குறுந்தொகை மூலமும் இக்கால வழங்கு தமிழில் தரப்படுகிறது – kurunthogai paadal vilakkam.
– மா கோமகன்