ஐங்குறுநூறு – அறிமுகப்பகுதி

சங்க இலக்கியங்களை பாட்டு, தொகை என்று இரண்டாக பிரிப்பர். இவற்றில் இரண்டாவதாக உள்ளது தொகை நூல்கள் ஆகும்.
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏற்றும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை” – என்ற பாடல் எட்டுத் தொகை நூல்கள் இவை என அறிய உதவுவதாகும் – ainkurunuru padal vilakkam

ஐங்குறுநூறு எனும் நூலை தொகுப்பித்தவர் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறை. தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு முதலிய ஐந்தும் அகப்பாடல்களை கொண்ட நூல்களாகும். பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரண்டும் புறத்துறை பாடல்கள் கொண்டவை. பரிபாடலில் அகமும் புறமும் கலந்த பாடல்கள் வருகின்றன.

இந்நூல் திணைப் பாகுபாடுகளை பின்பற்றி அமைந்த நூலாகும். திணை பின்பற்றி அமைந்த இன்னுமொரு தொகை நூல் கலித்தொகை என அறிக. இந்நூலில் ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் ஐந்நூறு பாடல்கள் உள்ளன. ஐங்குறுநூறு தொடர்பான மேலும் விபரம் அடுத்தும் வரும்.

ஐங்குறுநூறு எனும் நூலில் மருத திணையை ஓரம்போகியாரும், நெய்தல் திணையை அம்மூவனாரும், குறிச்சித் திணையை கபிலரும், பாலைத்திணையை ஓதலாத்தையாரும், முல்லைத்திணையை பேயனாரும் பாடியுள்ளனர். இவர்கள் ஐவரும் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் 500 பாடல்கள் பாடியுள்ளனர். இந்நூலை பாடியவர்கள் இவர்கள் என்பதை கீழ் காணும் வெண்பா மூலம் அறியலாம்.

“மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருது குறிஞ்சி கபிலர் – கருதிய
பாலையோத லாந்தை பனி முல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு”.

கடவுள் வாழ்த்து பாடலையும் சேர்த்து 501 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய நூல்களிலும் இவரது கடவுள் வாழ்த்து பாடலே இடம் பெற்றுள்ளன. இவர் பாரதக்கதையை தமிழில் பாடியதால் “பாரதம் பாடிய” என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு 100 பாடல்களையும் பத்துப் பத்தாக பிரித்து அதற்கு கருத்தாழம் மிக்க தலைப்பு அமைத்து இருப்பது இதன் சிறப்பு. டாக்டர் உ.வே.சா அவர்கள் 1903ல் இந்நூலை முதன் முதலாக பதிப்பித்தார். இதில் 129, 130 ஆகிய பாடல்கள் கிடைக்கவில்லை என்றும், 416, 490 ஆகிய பாடல்களில் இரண்டாம் அடி சிதைந்துள்ளது எனவும் உ.வே.சா குறிப்பிட்டுள்ளார்.

கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை

இந்நூலில் உள்ள பாடல்கள் அகவற்பாவினால் அமைந்தவை. இந்நூல் 3 அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை என உடையவை. ஒரு பொருளைப் பற்றி விரித்துப் பாடுவது எளிது. ஆனால் சுருக்கமாக பாடுவது கடினம். இது சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உத்தியை பின்பற்றி எழுந்த நூல் எனலாம்.

ஐங்குறுநூறு தூலை தொகுப்பித்தவர் கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை என்ற சேர மன்னன். இவர் வீரம், கொடை, புலவரை ஆதரித்தல் ஆகிய குணங்களில் சிறந்து விளங்கியவர்.

சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்நூலை தொகுத்தவர் “கூடலூர் கிழார்” இவர் மலைநாட்டிலுள்ள கூடலூரில் பிறந்தவர், வேளாளர் மரபினர். இவரது புலமை மிகுதியால் ‘புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்” என சிறப்பித்து கூறுவர். இவர் குறுந்தொகையில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார்.

இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் “பாரதம் பாடிய பெருந்தேவனார்” என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். பெருந்தேவனார் என பிறரும் இருந்த காரணத்தினால் பாரதத்தை உரையிடை இட்ட பாட்டுடை செய்யுளாக இவர் இயற்றியதனால் இவர் இவ்வாறு குறிப்பிடப் படுகிறார். ஆயினும் ஒன்று இவர் பாடிய பாரத நூல் அழிந்து விட்டது.

மருதம் பாடிய ஓரம்போகியார் கடைச்சங்க காலத்து புலவர். இவர் இந்தநூலில் நூறு பாடலும், நற்றிணையில் இரண்டு, குறுந்தொகையில் ஆறு, அகநானூறில் இரண்டு புறநானூறில் ஒன்று என 109 பாடல்கள் பாடியுள்ளார்.

ஐங்குறுநூறு ல் நெய்தல் பாடிய அம்மூவனார் கடைச் சங்க கால புலவருள் ஒருவர். மூவன் என்னும் இயற்பெயர் அடைமொழி சேர்த்து அம்மூவனார் ஆனதெனலாம். இவர் இங்கு நெய்தல் 100 போக நற்றிணையில் 10, குறுந்தொகையில் 11, அகநானூறில் 6 ஆக 127 பாடல்கள் பாடியுள்ளார்.

குறிஞ்சி பாடிய கபிலர் பாண்டி நாட்டில் திருவாதாவூரில் பிறந்தவர். இவரும் கடைச்சங்க காலப் புலவர். கடையேழு வள்ளல்களில் ஒருவனான பாரியின் உயிர் தோழனான இவர் பாரி இறந்த பின் அவனது மகள்களுக்கு மணம் செய்துவிட்டு, பாரியின் பிரிவு ஆற்றாது வடக்கிருந்து உயிர் நீத்தவராவார்.

இவர் குறிஞ்சி பாடுதலில் சிறந்தவர். ‘வாய்மொழிக் கபிலன்’ ; ‘நல்லிசைக் கபிலன்’ ; ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்’ ; ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ ; ‘பொய்யா நாவிற் கபிலன்’ என பலவாறு போற்றப் பட்டவர். கடைச்சங்க கால புலவர்களில் அதிக பாடல் தந்தவர் இவரே. ஐங்குறுநூறில் 100, நற்றிணையில் 20, குறுந்தொகையில் 29, பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்து, அகநானூறில் 16, புறநானூறில் 31, இன்னா நாற்பது என 40, குறிச்சிப்பாட்டு, கலித்தொகையில் குறிஞ்சிக் கலி 29 என மொத்தம் 278 பாடல்கள் பாடியவற்றுள் கிடைத்துள்ளன.

வேறு பல கபிலர்
உண்டென்றும் கருத்துண்டு

ஐங்குறுநூறில் பாலைத்திணை பாடிய ஓதலாந்தையாரும் கடைச் சங்க காலப் புலவர். இவர் பாடியவை இதில் 100 குறுந்தொகை யில் 3 ஆக 103 பாடல்கள். ஐந்தாவதாக முல்லைதிணை பாடியவர் பேயனார் என்ற கடைச் சங்க கால புலவரே. இவர் பாடியது இங்கு 100 குறுந்தொகையில் 4 ஆக 104 பாடல்கள். இந்நூலுக்கு பல்வேறு காலங்களில் அறிஞர் பெருமக்கள் பலரும் உரை எழுதியுள்ளனர். இங்கே அவ்வுரை நூல்கள் பலவற்றின் அடிப்படையாக கொண்டு இக்கால வழங்கு தமிழில் எளிய உரையாக இங்கு தரப்படுகிறது – ainkurunuru padal vilakkam

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    அறிமுக பகுதி அருமை… பல அறிய தகவல்களை அள்ளித் தந்தது …வாழ்த்துக்களுடன் நன்றியும் திரு .மா. கோமகன் அவர்களுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *