நாலடியார் (33) புல்லறிவாண்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-33

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – பகை இயல்

33. புல்லறிவாண்மை

செய்யுள் – 01

“அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர் – பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு”
விளக்கம்: அருள் காரணமாக அறம் உரைக்கும் அன்புடையவர் வாய்மொழியை நல்லோர் தமக்குப் பெரிதும் பயனுடையதாக மதித்து ஏற்பர். ஆனால் ஒன்றுக்கும் உதவாத பேதை ஒருவன் அவ்வறவோர் வாய்மொழியை பால் சோற்றின் சுவையை அதை பரிமாறும் அகப்பை உணராதது போல இகழ்ந்து கூறுவான்.

செய்யுள் – 02

“அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்விய கொளல்தேற்றா தாங்கு”
விளக்கம்: தோலைக் கவ்வித் தின்னும் இழிந்தோருடைய நாயானது பால் சோற்றின் சுவையை அறியாதது போல பொறாமை இல்லாதார் அறநெறியை கூறும் போது அதனை, நற்குணமில்லாதார் காதி கொடுத்தும் கேளார்.

செய்யுள் – 03

இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் – தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கா லென்?”
விளக்கம்: கண் இமைக்கும் நேரத்திற்குள் இனிய உயிர் போகும் தன்மையை நாம் பார்த்திருந்தும், தினை அளவாவது அறநெறியை கேட்பதும், அதன் வழியில் நல்ல செயல் செய்யாத நாணமும் அறிவுமற்ற மக்கள் இருந்தால் என்ன? இறந்தால் என்ன?

செய்யுள் – 04

“உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
பலர்மன்னுந் தூற்றம் பழியால் – பலருள்ளும்
கண்டாரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
தண்டி தணிப்பகைக் கோள்”
விளக்கம்: வாழும் நாட்கள் சில! அந்த சில நாட்களிலும் உயிருக்கு அரணாக தக்க நல்லறச் செயல் ஒன்றுமில்லை ஆனால் பிறர் தூற்றும் பழிச் சொற்களோ மிகப் பல. இப்படியிருக்க எல்லோருடனும் இனிமையாக கலந்து பேசி மகிழாது தனித்திருந்து பலருடன் பகை கொள்வதால் என்ன பயன்?

செய்யுள் – 05

“எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை – வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான்
வியத்தக்கான் வாழும் எனில்”
விளக்கம்: பலர் கூடியிருந்த அவைக்கு முன்னே ஒருவன் அங்கிருக்கும் வேறொருவனை இகழ, இகழ்ச்சிக்கு ஆளானவன் ஒன்றும் சொல்லாது பொறுத்திருப்பானே ஆனால், இகழ்ந்தவன் தீவினையால் அழிவான். அவ்வாறு அழியாது வாழ்வானாகில் அவன் வியக்க தக்கவனே!

செய்யுள் – 06

“மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் – நூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்
தொழுத்தையாற் கூறப் படும்”
விளக்கம்: முதுமைப் பருவம் வருவதற்கு முன்னமே அறநெறியை மேற்கொண்டு அதனை முயன்று செய்யாதவன், தன் வீட்டு வேலைக்காரியால் தள்ளப்பட்டு, ‘வெளியிலே இரு; இங்கிருந்து போ!’ என்னும் இன்னா சொற்களால் இகழப்படுவான். (தொழுத்தை – வேலைக்காரி)

செய்யுள் – 07

“தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் – தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறி வினார்”
விளக்கம்: புல்லறினார் செல்வம் உடையவராயின் அதைக் கொண்டு தாமும் இன்பம் அடையார்; தகுதியுடையார்க்கும் நன்மை செய்யார்; உயிருக்கு காவலாக இருக்கும் அறநெறியையும் சேர மாட்டார்; செய்வதறியாது செல்வத்திலேயே மயங்கிக் கிடந்து வாழ்நாளை வீணாகக் கழிப்பர்.

செய்யுள் – 08

“சிறுகாலை யேதமக்கு செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்பு கொள்ளார் – இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்”
விளக்கம்: இளமையிலேயே தாம் போகும் மறுமை உலகிற்கு அறமாகிய சோற்று மூட்டையை எடுத்துக் கொள்ளாதவர்; அறத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இருக்கும் பேதையர், சைகை செய்து காட்டும் பொன் உருண்டை புளிப்பாகிய விளாங்காய் ஆகும்.

செய்யுள் – 09

“வெறுமை யிடத்தும் விழப்பிணிப் போழ்தும்
மறுமை மனத்தாரே யாகி, – மறுமையை
ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்”
விளக்கம்: புல்லறிவாளர் வறுமையுற்ற போதும், கடும் நோய் உற்ற போதும் மறுமைக்குரிய அறிவினராய் இருப்பர். ஆனால், அறம் செய்வதற்குரிய ஆற்றல் மிக்கவராய் இருந்த காலத்தில் அதை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாதவராய் இருப்பர்

செய்யுள் – 10

“என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை, அன்னோ
அளவிறந்த காதற்றம் ஆருயி ரன்னார்க்
கொள இழைக்கும் கூற்றமுங் கண்டு”
விளக்கம்: அளவற்ற அன்புக்கு உரியவரான தமது அரிய உயிர் போன்றவற்றை கொண்டு செல்லும் எமனைக் கண்டும் அஞ்சார். ஐயோ புல்லறிவினார் பெறற்கரிய இம்மனித பிறவி பெற்றும் அறநினைவு அற்றவராகி தம் வாழ்நாளை வீணாகிக் கழிப்பர்.

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *