நாலடியார் (34) பேதைமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-34

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – பகை இயல்

34. பேதைமை

செய்யுள் – 01

“கொலைஞர் உலையேற்றுத் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிதாடி யற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வளையத்துச் செம்மாப்பார் மாண்பு
விளக்கம்: கொல்லும் தொழிலில் வல்ல எமன் உயிரை கொண்டு போகும் நாளை எதிர் பார்த்திருக்க அதனை உணராது இவ்வுலக வாழ்க்கையாகிய வலையில் இறுமாந்திருப்பவரது பெருமையாது, கொல்லும் உலையிலே ஆமையை இட்டு நெருப்பை மூட்ட, அந்த ஆமையானது தன்நிலை உணராது அந்த உலைநீரில் விளையாடுவது போலாகும்.

செய்யுள் – 02

பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுது மென்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு”
விளக்கம்: குடும்பத்திற்கு செய்ய வேண்டிய காரியங்களை குறைவற முடிக்கும் அறச் செயல்களை பற்றி யோசிப்போம் என்றிருப்போர் பெருமையானது அந்த கடலின் ஓசை ஒருசேர அடங்கியப் பிறகு நீராடுவோம் என்று கருதியது போலாம்.

செய்யுள் – 03

“குலந்தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் – நலஞ்சான்ற
மையறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்”
விளக்கம்: நற்குலம், தவம், கல்வி, குடிப்பிறப்பு, முதுமை ஆகிய இவ்வைந்தும் ஒருவரிடம் தப்பாமல் பொருந்திய போதும் நன்மை மிகுந்த குற்றமற்ற பழைமையான. சிறப்புடைய உலக இயல்பு அறியாதிருத்தல் நெய் இல்லாத பால் சோற்றிற்கு ஒப்பாகும்.

செய்யுள் – 04

“கன்னனி நல்ல கடையாய மாக்களின் சொன்னனி
தாமுணரா வாயினும் – இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்கலென்
றுற்றவர்க்கு தாமுதவ லான்”
விளக்கம்: கற்கள் மிகவும் நல்லனவாகும். எப்படி எனில் பிறர் சொல்லும் சொல்லை அறிந்து கொள்ளாதவையானலும் தம்மை சார்ந்தவர்க்கு நிற்கவும், உட்காரவும், படுக்கவும், நடக்கவும் உதவுவதால், அவை யாவருக்கும் ஒரு உதவியும் செய்யாத பேதைகளைவிட நல்லனவாகும்.

செய்யுள் – 05

“பெறுவதொன் றின்றியும் பெற்றானேப் போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் – கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து”
விளக்கம்: தான் பெறத்தக்க பயன் ஒன்றும் இல்லாதபோதும் பயனை பெற்றவன் போல, தன்னை எதிர்க்காதவரிடம் பகை கொண்டு, சினத்தினால் துன்பம் தரும் சொற்களை அடுக்கடுக்காக கூறாவிடின், பேதையின் நாக்கை நல்ல தினவானது தின்று விடும்.

செய்யுள் – 06

“தங்கண் மரபிலார் பின்சென்று தாமவரை
எங்கண் வணங்குவதும் என்பவர் – புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்பங
கற்கிள்ளிக் கையிழந் தற்று”
விளக்கம்: நல்ல தளிர்கள் நிறைந்த புன்னை மலர்வதற்குரிய கடற்கரையுடைய வேந்தனே! தம்மிடம் விருப்பமில்லாதவர் பின் சென்று அவரை எம்மிடம் விருப்பம் உள்ளவராக செய்வோம் என்று நினைப்பவர் கொள்ளும் அற்பர் உறவு கல்லைக் கிள்ளி கையை போக்கிக் கொள்வது போலாகும்.

செய்யுள் – 07

“ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு, புறஞ்சுற்றும் – யாதுங்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்”
விளக்கம்: எறும்புகள் தம்மால் கொள்ள முடியாது எனினும் ஒரு பாத்திரத்தில் நெய் இருக்குமானால் அப்பாத்திரத்தின் மேலே சுற்றிக் கொண்டிருக்கும் அதுபோல ஒன்றும் கொடாதவராயினும் பொருள் உள்ளவரை சார்ந்த பேதைகள் அவரை விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

செய்யுள் – 08

“நல்லவை நாடொறும் எய்தார் அறச்செய்யார்
இல்லாதார்க் காயாதொன்றும் ஈகலார் – எல்லாம்
இனியார் தோள்சேரார், இசைபட வாழார்,
முனியார்கொல் தாம்வாழும் நாள்”
விளக்கம்: நாள்தோறும் நல்லவர் அவையை அடையார்; அறம் செய்யார்; இல்லாதவர்க்கு எதையும் தரமாட்டார்; எல்லா வகையிலும் இன்பம் அளிக்க தக்க மனைவியின் தோள்களை தழுவார்; புகழுடன் வாழார்; இப்படி ஒரு பயனும் இல்லாத பேதைகள் வாழ்க்கையில் வெறுப்படைய மாட்டார்களா?

செய்யுள் – 09

“விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை – தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு”
விளக்கம்: ஒருவர் தம்மை புகழ்ந்து பேச, ‘நாம் இப்படிப்பட்ட புகழுரையை விரும்ப மாட்டோம்’ என்று வெறுத்து புறக்கணிக்கும் நற்குணமில்லாதவரிடம் கொள்ளும் நட்பானது கடல் சூழ்ந்த உலகையே தருவதாயினும் துன்பம் தருவதாம்.

செய்யுள் – 10

“கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்”
விளக்கம்: ஒருவன் கற்ற கல்வியையும் மேன்மையையும் நற்குடிப் பிறப்பையும் அயலார் பாராட்டிக் கூறினால் பெருமையாம். இவ்வாறன்றி தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்வானாயின் அவனுக்கு கேலி பேசுவோர் (மைத்துனர்) பலராவார். மேலும் அவன் மருந்தாலும் தணியாத பித்தன் என்றும் இகழப் படுவான்.

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...