நீரோடை பெண் புத்தக விமர்சனம்

நெல்லையை சேர்ந்த கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். இரு வாரங்களுக்கு முன்பு நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது – neerodai pen puthaga vimarsanam

neerodai pen

கவிஞர் நீரோடை மகேஸ் எழுதிய ‘நீரோடை பெண்’ கவிதை தொகுப்பு எண்ணங்களும்..வண்ணங்களும் நிறைந்த அழகான படைப்பு..
தனது பேனாவில் உணர்வுகளை நிரப்பி உறவுகளின் உன்னதத்தை தன் கவிதை வரிகளில் சிறப்புச் செய்திருக்கிறார் கவிஞர்.

காற்றின் அசைவினில்
அலைகளின் தளும்பலில்
சிதறும் நீர்த்துளிகள் யாவும்
காதலின் பிம்பத்தையே காட்டுகிறது..

பெருகும் பொலிவோடு
மொத்த நீரையும்
வார்த்தெடுத்து..
நீரோடை பெண்ணாக உருமாற்றி
கவிதைப் பெண்ணாக
வடிவமைத்து
நமக்கு பரிசளித்திருக்கிறார்..
அழகுப் பெண்ணவள்
நம் உள்ளங்களில் நிறைகிறாள்..
நீரோடையோடு பயணிக்கும்
இவரது கவிதைகள்
நமையும் நனைத்துச் செல்கிறது..

~~~~~~

அன்னைக்கான கவிதை அழகாய்..

மகவாய் உன் இடுப்பில்
அரியணை ஏறிய
நாட்கள் சொல்லும்..
புயல்மழை தாங்கும் கூரை
உந்தன் முந்தானை என்று..

அன்னையின் அன்பை பறை சாற்றும் வரிகள்.. அன்னையே அன்பின் உச்சம்.. அவளுக்கு பின்தான் வாழ்வின் மிச்சம்..

~~~~~

எதிர்பார்ப்பில்லா ஏணி!
சுயம்பு மணற்கேணி!
வாழ்வில் விழுந்ததற்கும்
வீழாமலிருப்பதற்கும்,
அகப்புற காயங்களுக்கு மருந்திட்டு
உணர்வில் ஊக்கமளித்த உன்னத
உறவே நீர் தான்..

என்று தந்தையை வணங்குகிறார்..

நம் சிந்தையை முதலில் திறக்கும் திறவுகோல் தந்தைதான்.. என்பதை வலியுறுத்துகிறது இவரது கவிதை..

~~~~~~

காதலை காதலிக்கும் கவிதை மிகவும் அழகாய்..

உன்னை வர்ணிக்க
பேனாமுனை பந்தின் முற்றத்தில்
தவம் கிடக்கும் மைக்கூட்டம்..
எத்தனை பிறவி பயனோ!
அவளை வருணித்துவிட்ட பூரிப்பில்..
மை தீர்ந்த பேனாக்கள்..

அழகு.. அழகு.. ரசனை மிகுந்த வரிகள்.. – neerodai pen puthaga vimarsanam

~~~~~~~

அந்த உருவம்
யாருக்கு வேண்டுமானாலும்
சொந்தமாகலாம்…
என் பார்வை நரம்புகளை
உடைத்து பதிந்த பிம்பம்
எனக்கு மட்டுமே..

என் வாழ்வின் மிச்சங்களை
தொலைத்த இடம் தான்
உன் கண்கள்..

காதலின் ரசனையையும்.. வலிமையையும்..வசப்படுத்தும் அழகான வரிகள்..

இன்னும் இன்னும் ஏராளமாய் கவிதைகளை தன்னுள்ளே கொண்ட இந்த நீரோடைப் பெண் இரசிக்க வைக்கிறாள்.. மறந்த நினைவுகளை மீட்டெடுத்து இசைக்க வைக்கிறாள்.. வார்த்தைகளால் வசியம் செய்து கவிதை வானில் அழகாய் பவனி வருகிறாள்..

வாழ்த்துகள் மகேஸ்.. தொடரட்டும் உங்கள் பணி..

– ப்ரியா பிரபு, நெல்லை


You may also like...