சேப்பியன்ஸ் (அறிவானவன்) – நூல் அறிமுகம்

நண்பர் ஹேமநாதன் அவர்கள் எழுதிய “அறிவானவன்” புத்தகத்தின் விமர்சனம் (நூல் அறிமுகம்) – sapiens arivanavan book review
திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

sapiens arivanavan book review

வரலாற்றின் மூலம் நமக்கு எதாவது பயன் உண்டா? அதை அறிந்து கொள்வதால் என்ன நன்மை கிடைக்கப் போகிறது? முடிந்த விசயங்களால் நாம் என்ன பெரியதாக அடைந்துவிடப் போகிறோம்? இந்த வார்த்தைகள் நமக்கு மீண்டும் மீண்டும் கற்பிக்கப்பட்டே நாம் நம் வரலாற்றை அறிந்து கொள்ளாமலே தெரியாமலே ஒவ்வோரு நாளையும் கடத்திக்கொண்டிருக்கிறோம்.
மன்னர்கள், நிலச்சுவான்தார்கள், கொடையாளிகள் பற்றியும் அவர்களது கொடைகள் பற்றியும் கல்வெட்டுகளின் மூலமும் பயணிகளின் பயணக் குறிப்புகளின் மூலமும் நாம் அறிந்து கொள்கிறோம். சாதாரண மக்களின் வரலாற்றினை அவர்களது குடும்பக் கதைகளினால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று நிலவரம் அப்படி இல்லை, இன்றைய நவீன தாத்தாக்களும் பாட்டிகளும் தன் அடுத்த தலைமுறைக்குத் தன் குடும்பக்கதைகளை கடத்தத் தவறுகின்றனர்.

7 தலைமுறைகள் (The Roots)

அலைக்ஸ் ஹாலி என்ற அமெரிக்க எழுத்தாளர் 7 தலைமுறைகள் (The Roots) என்னும் நாவலை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிடும் விசயங்களில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. ஆப்ரிக்கப் பழங்குடியினர் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களது குடும்பக்கதைகளின் மூலம் அடுத்த அடுத்த தலைமுறையினருக்கு வரலாற்றை கடத்திக்கொண்டே வந்துள்ளனர். இந்த நாவலே அலைக்ஸ் ஹாலியின் குடும்பக்கதை தான். ஏழுதலைமுறைகளின் வாழ்கையும் இன்னல்களும் இந்த நாவலில் அடங்கியுள்ளது. (அந்த நாவலைப் பற்றி மற்றொரு பதிவில் பதிவு செய்கிறேன்).

சேப்பியன்ஸ் என்னும் இந்த புத்தகம் நம்முடைய கதையைச் சொல்கிறது. இது மனிதனின் கதை. வாலில்லாக்குரங்கிலிருந்து வந்த நாம், உலகை ஆட்டிப் படைக்கும் அளவுக்கு விஷ்வரூபம் எடுத்த கதையை இந்த நூல் சொல்கிறது.

ஒபாமா தன் புத்தகப் பரிந்துரை

இந்த நூலை யுவான் நொவால் ஹராரி என்னும் இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எழுதியுள்ளார். இவர் இஸ்ரேலில் உள்ள ஜெருசேலம் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது Homeo Deus (History of Tomorrow) என்னும் நூலும் இந்த சேப்பியன்ஸ்யை போல உலகளவில் மிகவும் கவனம் பெற்றது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தன் புத்தகப் பரிந்துரையில் இந்த புத்தகத்தைப் பற்றி கூறியுள்ளார். பில்கேட்ஸ், மார்க் ஜீக்கும்பெர்க் ஆகியோர் இந்த புத்தகத்திற்கு நல்லதொரு விமர்சனத்தை அளித்துள்ளனர்.

மதம், மொழி, இனம் போன்ற கதைகள் மனித மூளையில் கற்பிக்கப்படுவதற்கு முன்னரே மனித இனதின் வரலாறு தொடங்குகிறது. சுமார் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் இருந்து பருப்பொருளும் ஆற்றலும் பிரிந்தன. 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி உருவானது. பின் 60 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு உயிரினங்கள் தோன்றின. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நாம் கிழக்கு ஆப்ரிக்க காடுகளில் நடந்து சென்றோமேயானால் நம்முடைய மூதாதையர்கள் மற்ற விலங்கினங்களைப் போல வேட்டையாடி நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தனர். பிற விலங்கினங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டிலும் அன்றைய மனித இனம் ஏற்படுத்திய தாக்கம் குறைவு. அன்றைய மனித இனம் விலங்குகளிடமிருந்து எந்த வித சிறப்பான தகுதியையும் பெற்றிருக்கவில்லை.

பாந்திறோ

மனிதர்கள் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதக்குரங்குகளின் பேரினமான ஆஸ்திரேலோபிதிகஸ் என்னும் இனதிலிருந்து கிழக்கு ஆப்ரிக்காவில் தோன்றினர். அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான பேரினத்திற்க்குக் கீழ் வகைப்படுத்தபட்டுள்ளன. உதாரணமாக சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் பாந்திறோ என்னும் பேரினத்திற்குக் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பின் அந்த விலங்கின் சொந்தப்பெயரினைச் சேர்த்து விலங்கியல் பெயராக அறியப்படுகிறது. சிங்கத்தின் விலங்கியல் பெயராக பாந்திறோ லியோ, புலியின் விலங்கியல் பெயராக பாந்திறோ டைகரிஸ், சிறுத்தையின் விலங்கியல் பெயராக பாந்திறோ பரடொக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

பரிணாம வளர்ச்சி

அதைப்போல, மனித இனமும் ஹோமோ என்னும் பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். நாம் அறிந்த அளவிற்கு, நியோடர்தால் என்ற ஒரு மனித இனம் இருந்தது. அது பரிணாம வளர்ச்சி அடைந்து சேப்பியன்ஸ் ஆக மாற்றம் அடைந்தது என்று முன்னாளில் நம்பப்பட்டு வந்தது. ஆனால் உண்மை அப்படி இல்லை. சேப்பியன்ஸ் என்ற மனித இனத்திற்கு முன்பும், அவர்களுடனும் எண்ணற்ற மனித இனங்கள் இருந்தன என்று இந்த நூலாசிரியர் தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

 • ஹோமோ நியோடர்தால் – நியாண்டர் பள்ளதாக்கில் வாழ்ந்தவர்கள்.
 • ஹோமோ ஏரேக்டஸ் (நிமிர்ந்த மனிதன்) – கிழக்கு ஆசியப்பகுதிகளில் சுமார் 20 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தனர். இங்கு ஆசிரியர் ஒரு குறிப்பைச் சொல்கிறார், அதாவது இதனை வாசித்து கொண்டிருக்கும் சேப்பியன்ஸ்சாகிய நாம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் அழிந்து விடுவோம் என்றும், அப்படிப் பார்க்கையில் ஹோமோ ஏரேக்டஸ் என்ற இனமே பூமியில் அதிக காலம் வாழ்ந்த மனித இனம் என்று குறிப்பிடுகிறார்.
 • ஹோமோ சோலோஏன்சிஸ் – இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சோலோசிஸ் பள்ளத்தாக்கில் வாழ்ந்தவர்கள்.
 • ஹோமோ ஃபுளோரேசியன்சிஸ் – கடல்மட்டம் குறைவாக இருந்த போது பக்கத்துத் தீவுகளிலிருந்து ஃபுளோரேசியன்சிஸ் என்ற தீவுக்கு இடம் பெயர்ந்தவர்கள். பண்டைய காலம் தொடங்கி அங்கு வாழ்ந்த மனிதர்கள் குள்ளர்களாக இருந்துள்ளனர். சுமார் ஒரு மீட்டர் உயரமும் 25 கிலோ எடையுடன் மட்டுமே இருந்தனர். அவர்கள் யானையைக்கூட வேட்டையாடினர் என்பதும் அந்த யானையும் சிறிய உயரம் கொண்டவையாக இருந்துள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
 • ஹோமோ டெனிசொவா- 2010 ஆம் ஆண்டு சைபீரியாவில் உள்ள டெனிசோவா என்னும் குகையிலிருந்து கிடைக்கப்பெற்ற விரல் எலும்பு தொன்மத்தைக் கொண்டு அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் அது மற்ற மனித இனத்திலுருந்து வேறுபட்டுள்ளதை அறிந்தனர். அந்த இனத்திற்கு ஹோமோ டெனிசொவா என்று பெயரிட்டனர்.
 • ஹோமோ ருடால்ஃபென்சிஸ் – ரூடால்ப் ஏரியைச் சேர்ந்த மனிதன்
 • ஹோமோ எர்கேஸ்டர் (வேலை செய்யும் மனிதன்) – இன்னும் எத்தனை மனித இனங்கள் வாழ்ந்தார்கள் என்பது நடந்து கொண்டிருக்கும் தொல்லியல் ஆய்வுகளின் இறுதியிலேயே அறியமுடியும். சுமார் 20 லட்சம் முதல் 10,000 ஆண்டுகள் வரை ஒரே நேரத்தில் 7 வகையான இனத்தை சேர்ந்த மனிதர்கள் பூமியில் வாழ்ந்தனர். இதுவும் சாத்தியமாகக்கூடியதுதான். பல இனத்தினைச் சேர்ந்த நாய்கள் ஒரே நேரத்தில் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பதை போல் தான் இதுவும் என்கிறார் ஆசிரியர். இந்த 6 இனமும் அழிந்து சேப்பியன்ஸ் மட்டும் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது விநோதமே.

சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அறிவுப்புரட்சி வரலாற்றின் துவக்கப் புள்ளியாக அமைந்தது. சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வேளாண் புரட்சி வரலாற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்தியது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அறிவியல் புரட்சி தான் வரலாற்றை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது – sapiens arivanavan book review.

மிச்சம் இருந்த இரையை பகிர்ந்து உண்டான்

ஆரம்பக் காலகட்டத்தில், உணவுச்சங்கிலியின் கடைசிக் கண்ணியாக இருந்தது மனித இனம். உதாரணத்திற்கு, ஒரு சிங்கம் ஒரு மானை வேட்டையாடியதாக வைத்துக் கொள்வோம். முதலில் அந்தச் சிங்கம் இரையைத் தின்றுவிட்டு சென்றவுடன், உணவுச்சங்கிலியின் அடுத்தடுத்த விலங்குகள் தின்றுவிட்டுச் செல்லும் வரை மனிதன் மறைந்திருந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். கடைசியாகத் தான் மனிதன் மிச்சம் இருந்த இரையை எடுத்துத் தன் இனக்குழுவோடு பகிர்ந்து உண்டான். ஆனால் இப்பொழுது நிலைமை அப்படி இல்லை. அதிகாரத்தின் உச்சத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வேளாண் புரட்சி

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சேப்பியன்ஸ்கள் இன்றைய ஆஸ்திரேலியாவில் குடி புகுந்தனர். அங்கு அவர்கள் அழித்த விலங்கினங்கள் மற்றும் பறவை இனங்களின் எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகம். 5 அடி நீளமுள்ள பல்லி (Varanus priscus), வயிற்றில் குட்டியைச் சுமக்கும் சிங்கம் (Thylacoleo carnifex), 6.6 அடி உயரமுள்ள கங்காரு (Procoptodon), 2 டன் எடைகொண்ட மடியில் குட்டியைச் சுமக்கும் விலங்கு (Diprotodon), அரை டன் எடையுடைய பறக்கும் பறவை இது போன்ற எண்ணற்ற இனங்கள் சேப்பியன்ஸ்களால் அழிக்கப்பட்டன. வேட்டைச்சமூகம் முடிந்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய வேளாண் புரட்சியின் போதும் காடுகள் எரிக்கப்பட்டு பல்லாயிரம் விலங்குகள் அழிக்கப்பட்டன. என்றைக்குமே சுயநலத்தோடே பயணிக்கும் மனித இனம், அதற்கான விளைவுகளையும் உரிய காலத்திலும் அனுபவிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

சேப்பியன்ஸ் இனத்தின் வரலாறு, வேட்டைச் சமூகத்தை அடுத்து வேளாண் சமூகத்தை நோக்கி நகரத் தொடங்குகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் உடனுக்குடன் நடந்தது இல்லை. பல்லாயிரம் ஆண்டு இடைவெளியில் நடக்கிறது. அன்று சாலை ஓரத்தில் யாரும் கவனிப்பாரில்லாமல் கிடந்த கோதுமைச் செடி எப்படி இன்று உலகத்தின் எல்லா இடங்களிலும் அறுவடை செய்யப்படும் பயிராக உள்ளது. வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமூகத்திற்கு மாறியதால், மன ரீதியாகவும் உயிரியல் ரீதியாகவும் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்பன பற்றியும், மனிதர்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட மதம், மொழி, இனம், பணம், பண்பாடு, கலாச்சாரம், சட்டம் போன்ற கதைகள் பற்றியும் கூறுகிறார். உதாரணமாக, தேசப்பற்றை அடிப்படையாகக் கொண்டு எத்தனை பேர் ஒன்றோடொன்று இணைகிறார்கள். அதைப்போல தான் மதம், மொழி, இனம். வம்பு பேசும் கோட்பாடு என்ற ஒன்றுதான் மொழி உருவாகக் காரணமாக அமைந்ததாக கூறுகிறார்.

XY குரோமோசோம்கள்

பெண்கள் ஏன் அடிமையாக்கப்பட்டார்கள்..? உயிரியல் கோட்பாட்டின்படி ஏதென்சில் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்களுக்கும், இன்றைக்கு இருக்கும் பெண்களுக்கும் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியாகவும், சமூகவியல் சார்ந்தும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உதாரணமாக, 15ம் நூற்றாண்டில் ஏதென்ஸில் வாழ்ந்த பெண்கள் பெண்குழந்தை ஈன்றால், XY குரோமோசோம்கள் கொண்டிருந்தனர். இன்றைக்கும் ஏதென்ஸில் இருக்கும் பெண்கள் பெண்குழந்தை ஈன்றெடுக்கும்போது, XY குரோமோசோம்கள் கொண்டிருக்கின்றனர். இது உயிரியல் கோட்பாடு. ஆனால் அரசியல் கோட்பாடு என்பது 15ம் நூற்றாண்டில் பெண்களுக்கு வாக்களிக்கக்கூட உரிமை இல்லை.

இன்று ஒரு நாட்டையே ஆளும் அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வு எப்படி சாத்தியமாகியது..? கருப்பர்கள், வெள்ளையர்கள் என்ற நிற அரசியல் எப்படி உருவானது…? இது போன்ற எண்ணிலடங்கா செய்திகளும், வரலாற்று நிகழ்வுகளும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சிறப்பாகத் தொகுத்துள்ளார்.
வேளாண் புரட்சிக்கு அடுத்து வருவது அறிவியல் புரட்சி, 15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்களில் இருந்து சேப்பியன்ஸின் அறிவியல் புரட்சி தொடங்குகிறது. 1945ல் நடந்த அணுகுண்டு சோதனையை பார்த்துவிட்டு விஞ்ஞானி ஒப்பன் ஹமர் பகவத் கீதையிலிருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறார் நான் இப்போது உலகை அழிக்கும் மரண தேவனாக ஆகியிருக்கிறேன் என்ன ஒரு சரியான மேற்கோள். நம்மை நாமே அழித்துக் கொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே – sapiens arivanavan book review.

இந்த உலகத்தில் நாம் வாழ என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை நம்மோடு வாழும் அனைத்து இனங்களுக்கு உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சக மனிதனை தன்னைப்போல சக மனிதனாக நினைக்க வேண்டும். மத, மொழி, இனப் பாகுபாடு பார்த்து துவேசத்தை பெருக்கிக் கொண்டு சென்றோமேயானால் நம் இனம் அழிவதற்கு நாமே காரணமாகிவிடுவோம் -.

மனித இன வரலாற்றை அறிந்து கொள்வதற்கு, சேப்பியன்ஸ் ஆகிய நாம் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இந்த சேப்பியன்ஸ்.
அன்று தொடங்கி இன்று வரை நாம் மட்டும் தான், இந்த பூமி நமக்குத் தான் சொந்தம் என்ற எண்ணத்திலேயே காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம். வேட்டைச் சமூகம் ஏற்படுத்திய அழிவுகளைப் போல, இரயில் தண்டவாளங்களில் அடிபடும் யானை, திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்று நாமும் நம்மால் முடிந்தவரை அழிவுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கிறோம். கொரோனாவால் நாம் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் எனக்குத் தோன்றிய வரி இது…..”பறிக்கபட்ட உரிமைகளுக்காகப் பலி வாங்கும் நேரமிது”.

hemanathan

– ஹேமநாதன்

You may also like...

7 Responses

 1. R. Brinda says:

  சேப்பியன்ஸ் ஒரு அருமையான விமர்சனம். மனித குலம் தோன்றியது முதல் இன்று வரை சொல்லியிருக்கும் நயம் பாராட்டத்தக்கது. ஹேமநாதன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!!

 2. ராஜகுமாரி போருர் says:

  நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் நன்றி

 3. Kavi devika says:

  நூல் விமர்சன ஆசிரியருக்கு பாராட்டுகள். நூலை பற்றிய பல தகவல்களை அழகாக கூறி மனதில் அந்நூலை படிக்க தூண்டும்படியாக உங்கள் விமர்சனம் அமைந்துள்ளது. வாழ்த்துகள்.

 4. மாலதி நாராயணன் says:

  சேப்பியன்ஸ். மிகவும் அருமையான தகவல்
  அனைவரும் ‌படித்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன ‌நன்றி

 5. தி.வள்ளி says:

  சேப்பியன்ஸ் நூல் விமர்சனம் மிக அருமை..நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.விமர்சன ஆசிரியருக்கு வாழ்த்துகள்

 6. நிர்மலா says:

  இன்றைய காலகட்டத்தில் மனிதன் சிந்திக்க வேண்டிய கருத்துக்களை தனது கடைசி இரண்டு பத்திகளில் அழகாக சொல்லி விட்டார். வாழ்த்துக்கள்

 7. கீர்த்தனா says:

  இந்த நூலிற்கான தமிழ் விமர்சனம் இன்றய தேவை. வாழ்த்துக்கள்