பழமொழிகளும் எண்களும் – நூல் விமர்சனம்

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் நூல் விமர்சனம் “பழமொழிகளும் எண்களும்” – pazhamozhigalum engalum puthaga vimarsanam.

pazhamozhigalum engalum

இந்நூலை எழுதி இருப்பவர் திருமதி.கோமதி ஏகாந்த் அவர்கள். இவர் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கலைக் கல்லூரி, சென்னை காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரி மற்றும் ராணிமேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கணித பேராசிரியராக பணிபுரிந்து பின், கல்லூரி முதல்வராக உயர்வு பெற்று திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றியவர்.இறுதியில் சென்னை பாரதி மகளிர் கல்லூரி முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நூலில், ஆசிரியர் தமிழ் மொழி மீது கொண்ட பற்று தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. நூற்றி ஐம்பது பழமொழிகளை விளக்கி,ஆங்காங்கே திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களையும் மேற்கோள்காட்டி எழுதியுள்ளார். குறிப்பாக எண்ணு பெயர்களை தன்னகத்தே கொண்ட சில பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, பழ மொழிக்கும் பண்பாட்டிற்கும் உள்ள விளக்கத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறார்.

இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருப்பவர் சேலம் பெரியார் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் மு. தங்கராசு அவர்கள்.நடையில் நயம், சொல்லாட்சியில் சிறப்பு, எடுத்துரைப்பதில் எளிமை, கருத்துச் செறிவு, ஆய்வு, நுண்ணறிவு, சமுதாய அக்கறை அனைத்தும் இவர் படைப்பில் உள்ளன… அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய நூல்… நூலகம் தோறும் இடம்பெற வேண்டிய நூல் என்று மனமுவந்து பாராட்டுகிறார் அவர்.

தமிழர்களின் பண்பாட்டையும், வரலாற்றையும், நாகரிகத்தையும் பாதுகாத்து வைக்கும் கருவூலம் மொழி என்றால் அந்த மொழிக்கு அழகு சேர்ப்பது பழமொழிகள் என்று கூறும் இவர் அந்த பழமொழிகளில் எண்களை தன்னகத்தே கொண்டுள்ளவற்றை வகைப்படுத்தி அதை 10 தலைப்பின்கீழ் அழகாக தொகுத்து அளித்துள்ளார்

சங்க இலக்கியத்தில் பழமொழிகள்:

அகநானூறு நூலே முதலில்’ பழமொழி’ என்ற சொல்லை குறிப்பிடுவதாக கூறும் இவர்… – pazhamozhigalum engalum puthaga vimarsanam

பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆடுதல் வாய்த்தனம் – தோழி!

என்னும் அகநானூற்று தொடரை மேற்கோள் காட்டி பல்லாயிரம் ஆண்டுகளாக பழமொழி வழங்கிவந்த பான்மையை கூறுவதாக இயம்புகிறார்.இடைக்கால இலக்கியத்திலும்,திருநாவுக்கரசர் தேவாரத்திலும்,கம்ப ராமாயணத்திலும் கூட பழமொழிகள் கையாளப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார். பிற்கால இலக்கியங்களில், திருக்குறளில் பழமொழிகள் கையாளப்பட்டு இருப்பதை குறிப்பிடுகிறார்.

வேளாண்மை

பல்வேறு பிரிவுகளில் பழமொழிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பழமொழிகளுடன், அதனுடன் தொடர்புடைய அவரது கருத்தையும் முன் வைத்திருப்பது மிகவும் அருமையாக உள்ளது. வேளாண்மை,மருத்துவம், உடல்நலம், வாழ்வியல், சமுதாயம், மக்கட்பண்பு போன்ற பிரிவுகளில் எண்ணுடன் தொடர்புடைய பழமொழிகள் கையாளப்பட்டிருக்கிறன.

கொள்ளுக்கு ஓர் உழவு எள்ளுக்கு ஏழு உழவு… (வேளாண்மை)

அகத்திக் கீரைக்கு ஆறுமாசம்… முருங்கைக் கீரைக்கு மூணு மாசம்…
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் (மருத்துவம்)

அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்..
உண்டபின் ஒரு மைல்நட.. ( உடல்நலம்)

அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் சமைக்கும் …
கல்விக்கு இருவர்.. களவுக்கு ஒருவர் …
விருந்தும் மருந்தும் மூன்று நாள்… (வாழ்வியல்)

அழிஞ்சாலும் அஞ்சு பேரை கேளு..
கோடி வித்தையும் காசுக்குத்தான்… (சமுதாயம்)

இப்படி பல்வேறு பிரிவுகளில் பழமொழிகளை எழுதியதுடன், அதற்கான விளக்கங்களை மிக அருமையாக தன் கருத்துடன் இணைத்து முன்வைக்கிறார் .இதைத்தவிர அழகான 125 பழமொழிகளை நம் பார்வைக்கு தருகிறார்.

நிறைவாக தன் முடிவுரையில் பழமொழிகளின் தோற்றமும் விளக்கமும், ஆராய்ச்சியும், நமக்கு தேவைபடுவதின் அவசியத்தை உணர்த்தி, பழமொழிகள் வழக்கொழிந்து போற்றுவாரின்றி மறைந்து விடக்கூடாது. அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கமே இப்புத்தகத்தை எழுத தூண்டியது என்று முடிக்கிறார்

தமிழ் பிரியர்களுக்கும்…ஆராய்ச்சியாளர்களுக்கும் இது மிகச்சிறந்த ஆய்வு நூலாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. அது ஒருபுறம் இருந்தாலும், எளிமையாக, எல்லோரும் படிக்கும் வண்ணம் பழமொழிகளும், அதன் விளக்கங்களும், ஆசிரியர் தம் கருத்துக்களுடன் மிக அழகுடன் எடுத்து முன் வைக்கப்பட்டிருப்பது இந்நூலின் கூடுதல் சிறப்பு. எல்லோரும் படித்து இன்புறும் வண்ணம் மிக எளிமையாக எடுத்தாளப்பட்டிருப்பது அருமை. என்னை கவர்ந்த இந்நூலை அனைவரும் படித்து பயனுற வேண்டுகிறேன்.

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

4 Responses

  1. N.shanmugapriya says:

    150 பழமொழிகளை விளக்கி கூறியுள்ளது சிறப்பு…..பழமொழியே தெரியாத பலருக்கு அதனுடைய சிறப்பை உணர்த்தி,பழமொழியைக் கற்க தூண்டுகிறது இந்த நூலின் விமர்சனம்.

  2. நிர்மலா says:

    நூலை படிக்க ஆவலை தூண்டும் விமர்சனம். இரண்டுமே அருமை. வாழ்த்துக்கள்.

  3. Priyaprabhu says:

    அழகான விமர்சனம்.. அருமை mam..👌

  4. N.shanmugapriya says:

    150 பழமொழிகளை விளக்கிக் கூறியுள்ளது மிகவும் சிறப்பு…இந்நூல் விமர்சனம் பழமொழி பற்றி அறியாதவர்களுக்கு பழமொழியை படிக்கத் தூண்டுகிறது.