நாலடியார் (26) அறிவின்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-26

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – இன்பவியல்

26. அறிவின்மை

செய்யுள் – 01

நுண்ணுணர் வின்மை வறுமை அதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் – எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ
கண்ணவாத் தக்க கலம்”
விளக்கம்: பெண்மை இயல்பு மிகுந்த ஆண்மை இயல்பு குறைந்துள்ள பேடியும் கண்கள் விரும்பி காணத்தக்க அணிகளை அணியமாட்டாளோ? அணிந்து கொள்வாள் ஆராய்ந்து நோக்குமிடத்து நுட்பமான அறிவின்மையே வறுமை ஆகும்.

செய்யுள் – 02

“பல்லன்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்ல லுழப்ப தறிதிரேல் தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே
பூவின் கிழத்தி புலந்து”
விளக்கம்: பலவகை நூல் கேள்விகளால் நிறைந்த பயனை அறிந்த நல்லறிஞர், தன் பெருமை குன்றி வறுமைத் துன்பத்தில் வாடுவதற்குரிய காரணம், சிறப்புள்ள கலைமகள் தங்கியிருப்பதால், பூவில் உறைதற்குரிய திருமகள் வெறுப்புற்று அந்த நல்லவரிடம் சேரமாட்டாள்

செய்யுள் – 03

“கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் – மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்”
விளக்கம்: இளம் பருவத்தில் தந்தை ‘படி’ என்று சொல்லியும், அதை மதிக்காது புறக்கணித்தவன், பிற்காலத்தில் ஒரு ஓலையை பலர் முன்னிலையில் படி என்று தர வெகுண்டு தாக்க தடித்த கோலை கையில் எடுத்துக் கொள்வான்.

செய்யுள் – 04

“கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு – மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே இராஅ
துரைப்பினும் நாய்குரைத் தற்று”
விளக்கம்: படிக்காமலே காலம் கழித்து உயரமாக வளர்ந்த ஒருவன், நல்லறிவாளர் அவையில் புகுந்து பேசாமல் இருந்தாலும் நாய் இருந்தது போலாம். அவ்வாறு இராது ஏதாவதொன்று பேசினாலும் நாய் குரைத்தது போலாம்.

செய்யுள் – 05

“புல்லப்புன் போட்டிப் புலவ ரிடைப்புக்
குக்கல்லாத சொல்லுங் கடையெல்லாம் – கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து”
விளக்கம்: புல்லிய புலவர் அவையில் புகுந்து அறிவோடு பொருந்தாத அற்பர், தாம் கல்லாதவற்றை எல்லாம் ஆரவாரமாக எடுத்துரைப்பர். ஆனால் அறிவுடையோரோ தாம் கற்ற கருத்தை பிறர் கேட்டாலும், தாம் கூறுவது ஒருவேளை பொருளோடு பொருந்தாது போய் வினுமோ எனக் கருதி உடனே சொல்லார்.

செய்யுள் – 06

கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் – பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை யொலி”
விளக்கம்: தூல்களை கற்று அவற்றின் உட்பொருள் அறிந்த புலவர் பேசினால் ஏதேனும் பிழை நேருமோ என அஞ்சி, எதையும் கண்டபடி பேசார். கற்றறியாதவரோ வாய்க்கு வந்தபடி பேசுவர். பனைமலத்தில் உலர்ந்த ஓலைகள் கலகல என ஒலி எழுப்பும். பச்சை ஓலை அவ்வாறு ஒலிப்பதில்லை.

செய்யுள் – 07

“பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு”
விளக்கம்: நன்மையை அறியாத மக்களுக்கு அறத்தின் வழியை சொல்வது, பன்றிக்கு கூழ்வார்க்கும் தொட்டியில் இனிய மாங்கனிச் சாற்றை ஊற்றுவது போலாகும். அன்றியும் குன்றின் மேல் அடிக்கப்படும் முளைக்குச்சியின் நுனி சிதைந்து அதனுள் பொருந்தாதது போல அறவுரை அவர்களது காதுகளில் புகுந்து பொருந்தாது போகும்.

செய்யுள் – 08

“பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைப் கிருந்தன்று
கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா
நோலா உடம்பிற் கறிவு”
விளக்கம்: பலநாளும் பாலால் கரியை கழுவி உலர்த்தினாலும் அது வெண்மையாவதில்லை. அதுபோல என்னதான் கோலால் அடித்து கூறினாலும் புண்ணியம் இல்லாதவனுக்கு அறிவு வராது.

செய்யுள் – 09

“பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லா
திழிந்தவை காமுறூஉம் ஈப்போல் இழிந்தவை
தங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு”
விளக்கம்: பூவானது இனிய தேனை பொழிந்து நறுமணம் வீசினாலும் ஈயானது அப்பூவில் இருக்கும் தேனை உண்ணுதற்கு செல்லாது. இழிவான பொருள்களையே தேடிச் செல்லும். அத்தகைய குணம் பொருந்திய நெஞ்சினார்க்கு, தகுதி மிக்க பெரியோர் வாயிலிருந்து வரும் இனிக்கும் உண்மை உரைகள் என்ன பலனைத் தரும்?

செய்யுள் – 10

“கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ் சுதைத்தலால் – மற்றுமோர்
தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்”
விளக்கம்: கற்றவர் உரைக்கும் குற்றமற்ற நுண்ணிய கருத்துக்களை தன் நெஞ்சம் பிடித்து வைத்துக் கொள்ளாது உதைத்து தள்ளுவதால் கீழ்மகன், தன் போன்ற ஒரு கீழ்மகனது முகத்தை நோக்கி தானும் உரையாடுவதற்கு ஒரு அவையைக் கூட்டுவான்.

– கோமகன்

komagan rajkumar

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    நாலடிகளில் இனிய கருத்தை விளக்கும் நாலடியார் செய்யுளின் இனிமையை இன்னும் விளக்கமாக எடுத்து உரைநடையில் இயம்பும் சகோதரர்க்கு வாழ்த்துகள்