நாலடியார் (25) அறிவுடைமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-25

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – இன்பவியல்

25. அறிவுடைமை

செய்யுள் – 01

“பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேரா
தணங்கருந் துப்பின் அரா”
விளக்கம்: வருத்தத்தை செய்யும் மிக்க வலிமையுடைய பாம்பு, திங்கள் இளம்பிறை சந்திலனாக இருக்கும் போது அதனை விழுங்கச் செல்லாது. அது போல வெல்லும் தகுதியுடையோர், பகைவன் மெலிந்திருக்கும் பார்த்து, அவருடன் போர் செய்ய புறப்படமாட்டார்கள்

செய்யுள் – 02

“நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்ம மக்கட்
கணிகல மாவ தடக்கம் – பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரங் கூறப் படும்”
விளக்கம்: பெரிய குளிர்ந்த கடற்கரையை உடைய நாட்டுக்கு அரசனே! வறுமையுற்ற மக்களுக்கு அணிகலன் ஆவது அடக்கமுடைமை ஆகும். அடக்கமின்றி அளவு கடந்து நடப்பாரே ஆனால் ஊரில் வாழ்பவரால் அவர்களது குலமும் இழித்துரைக்கப்படும்.

செய்யுள் – 03

எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காது
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னாற்றா னாகும் மறுமை வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர்”
விளக்கம் :எந்நிலத்தில் விதைத்தாலும் எட்டி விதை தென்னை மரமாக வளராது. தென்னாட்டிலே பிறந்து நல்லறம் செய்து தேவர் உலகம் செல்வதால், ஒருவருக்கு தன் முயற்சியாலேயே மறுமை பேறு கிடைக்கும் அன்றி பிறந்த இடத்தாலன்று. வடநாட்டில் பிறந்தவராயினும் தன் முயற்சியின்றி வீணாக காலத்தை கழித்து, நரகம் புகுவார் மிகப்பலர்.

செய்யுள் – 04

வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம் ஆங்கே
இளந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது”
விளக்கம்: வேம்பின் இலைகளிடையே வாழை பழுத்தாலும் அதன் இனிய சுவை வேறுபடாது. அதுபோல பண்புனையார் சேர்ந்த இனம் தீதாயினும் அதனால் அவர்கள் மனம் தீதாகும் தன்மை இல்லை.

செய்யுள் – 05

“கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும் மலைசார்ந்தும்
உப்பீண் டுவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனைய ரல்லர் எறிகடற்றண் சேர்ப்ப
மனத்தனயர் மக்களென் பார்”
விளக்கம்: அலைமோதும் குளிர்ந்த கடற்கரை உடைய நாட்டுக்கு அரசனே! கடல் அருகிலே இனிய நீர் உண்டாகும். மலை அருகிலே உப்பு நீர் சுரக்கும். ஆதலால் மக்கள் தாம் தாம் சேர்ந்த இனத்தை ஒத்தவர் அல்லார்; தம் தம் மன இயல்பை ஒத்தவராவார்.

செய்யுள் – 06

“பராஅரைப் புன்னை படுகடற்றண் சேர்ப்ம
ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்ல
மரூஉச்செய் யார்மாட்டுந் தங்கு மனத்தார்
விராஅஅய் செய்யாமை நன்று.”
விளக்கம்: பருத்த அடியினை உடைய புன்னை மரங்களால் பொழிவு பெற்ற குளிர்ந்த கடற்கரை உடைய மன்னனே! நிலையான மனம் உடையவர்கள் இனிய செய்கை உடையவரிடத்தில் தீங்குதலும் பின் சேருதலும் செய்ய மாட்டார்கள். அப்படி சேர்ந்து நீங்குதலை விட முதலிலேயே சேராதிருத்தல் நல்லது.

செய்யுள் – 07

“உணரா உணரும் உணர்வுடை யாரைப்
புணரிறு புணருமாம் இன்பம் – புணரின்
நெரியத் தெரியு தெரிவிலா தாரைப்
பிரிய பிரியுமாம் நோய்”
விளக்கம்: தாம் ஒன்றை மனதில் நினைக்க, அதனை குறிப்பால் உணரும் நுண்ணறிவு உடையோரை நண்பராக கொண்டால் இன்பம் மிகும். அப்படியின்றி நமது எண்ணங்களை வெளிப்படையாக தெரிந்த போதும் அவற்றை உணராத அறிவிலாரை நண்பராக கொள்வோமேயானால் அவர்களால் உண்டாகும் துன்பம் அவர்களை விட்டு பிரிய, தானே நீங்கும்.

செய்யுள் – 08

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கி கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னை
தலையாகச் செய்வானும் தான்”
விளக்கம்: நல்ல நிலையிலேயே தன்னை நிறுத்திக் கொள்பவனும், அந்த நிலையை கெடுத்து தாழ்ந்த நிலையில் சேர்கிறவனும், இருக்கும் நிலையைவிட மிகவும் மேலான நிலையிலே தன்னை உயர்த்தி கொள்பவனும் தானே ஆவான்.

செய்யுள் – 09

“கரும வரிசையாற் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாருஞ் சேறல் – அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப
பேதைமை யன்ற தறிவு”
விளக்கம்: அருமையாக ஒரே சீராக முறைப்படி அலைகள் ஆரவாரம் செய்யும் கடற்கரை உடைய நாட்டுக்கு அரசனே! சமுதாயத்திற்கு பயன்தர தக்க ஒரு நல்ல காரியம் முறைப்படி இனிதே நிறைவேறும்
பொருட்டு பெருமை உடையோரும் அறிவில்லார் பின் செல்வது அறியாமையன்று, அஃது அறிவுடைமையே.

செய்யுள் – 10

“கருமமு முட்படா போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா – ஒருநிலையே
முட்டின்றி மூன்றுமுடி யுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்”
விளக்கம்: நல்ல தொழில் முயற்சியில் ஈடுபட்டு பொருளை சேர்த்து, இன்பம் துய்த்து, தருமத்தையும் தகுதி உடையவருக்கே செய்து, ஒரு பிறவியில் இம் மூன்றையும் நிறைவேற்ற முடியுமானால் அச்சாதனை வணிகத்தை வெற்றியுடன் முடித்து தான் சேரவேண்டிய துறைமுகத்தை சேர்ந்த கப்பல் போல இன்பம் தரும்.

– கோமகன்

komagan rajkumar

You may also like...