ஐங்குறுநூறு பகுதி 2
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 2
மருதத்திணை
02 வேழப் பத்து
11
“மனைநடு வயலை வேழஞ் சுற்றுந்
துறைகே ழூரன் கொடுமை நாணி
நல்ல னென்றும் யாமே
யல்ல னென்றுமென் றடமென் றோளே”
துறை: தலைவியை பிரிந்த தலைவன் அவளுடன் சேர வாயிலர்களை தூது விட அவள் மறுக்க தன் தோழனை ஏவ அவள் அவனிடம் கூறியது
விளக்கம்: மனை நடுவிலே நிற்கும் பசலைக் கொடியானது மனைப் புறத்தில் நிற்கும் கொறுக்கையின் மேற் சென்று படரும் துறை பொருந்திய ஊரன் நமக்குச் செய்யுங் கொடுமைக்கு நாணியும் யாம் நல்லன் என்றே கூறுகின்றோம். யாம் இப்படியாகவும் பெருமை பொருந்திய மெல்லியவாகிய தோள்கள் ஆனவை அல்லாதவன் என்று கூறுகின்றன.
12
“கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குந்
துறைகே ழூரன் கொடுமை நன்று
மாற்றுக தில்லை யாமே
தோற்க தில்லவென் றடமென் றோளே”
துறை: தலைவி பரத்தையர்க்கு தலைவன் சிறப்பு செய்தான் என்பது கேட்டு தன்னால் பொறுக்க மாட்டாதவளாய் நெஞ்சோடு சொல்லியது
விளக்கம்: கரைமருங்கு நிற்கின்ற வேழம்(கரும்பு) ஆனது வயலில் நிற்கின்ற கரும்பு போல பொலிகின்ற துறை பொருந்திய ஊரன் செய்யும் கொடுமை நன்றாய் இருத்தலின் அதை மாற்ற வேண்டும் என்ற விருப்பம் உடையோம்; யாம் அப்படியாக புணர்ச்சி விரும்பி மெலிவடையாமல் நிற்கின்ற பெருமை உடைய மெல்லிய தோள்களை உடையோம்
13
“பரியுடை நன்மான் பொங்குவளை யன்ன
வடகரை வேழம் வெண்பூப் பகருந்
தண்டுறை யூரன் பெண்டிர்
துஞ்சூர் யாமத்துந் துயிலறி யலரே”
துறை: வாயிலாக வந்தவர்கள் இடத்தில் இரவில் யான் தூங்கியதில்லை அதனை அவன் அறிவானா எனச் சொல்லி வாயில் மறுத்தது. (வாயில் – பாணன், ஊரார்).
விளக்கம்: தாங்குதலை தொழிலாக உடைய பெருமை பொருந்திய குதிரையது தலையில் அணிவிக்கப்பட்ட பொலிவாகிய வெண் கவரி போல, அடைகரைகண் நிற்கும் வேழம் வெண் பூவைக் கொடுக்கும் தண்டுறை ஊரனது பெண்டீர் இவ்வூரிலுள்ள யாரும் ஒரு சேர துயில்கின்ற யாமத்திலும் தான் கொண்ட காதலால் துயிலாமல் அவர் வருந்தியது யாது?
(வேழம் – கரும்பு)
14
“கொடிப்பூ வேழந் தீண்டி யயல
வடுக்கொண் மாஅத்து வண்டளிர் நுடங்கு
மணித்துறை யூரன் மார்பே
பனித்துயில் செய்யு மின்சா யற்றே”
துறை: தலைமகன் பிரிவுக் கொடுமை நினைத்து வருத்தமுடன் இருக்கிறாய் உன்னை தேற்ற இயவில்லை என்ற தோழிக்கு தலைவி கூறியது
விளக்கம்: நீண்ட பூவினை உடைய வேழம் தீண்ட வடு அமைந்த மாவின் தளிர் அசையும் அழகிய துறையின் ஊரன் மார்பே மனம் மகிழும் துயிலை தராத மென்மை உடையது அதனால் ஆற்றேன் ஆகிறேன்.
15
“மணலாடு மலிர்நிறை விரும்பிய வொண்டழைப்
புனலாடு மகளிர்க்குப் புணர்துணை யுதவும்
வேழ மூதூ ரூர
னூர னாயினு மூரனல் லன்னே”
துறை: இதுவும் தலைவி தோழிக்கு கூறியது.
விளக்கம்: மணலைக் கரைத்துச் செல்லும் வெள்ளமாகிய புதுப்ஙபுனலிடத்து ஆடுதலை விரும்பிய மகளிர்க்கு தழையை உடைய ஒள்ளிய வேழமானது புணர்ந்தார் தன்மையைச் செய்யும் பெரிய ஊரினை உடைய ஊரன் உன்னால் சொல்லப்படும் பற்றுக் கோடு உடையவன் ஆயினும் அவன் என்னால் கொள்ளப்படும் தன்மையில்லாதவன்.
ஐங்குறுநூறு
16
“ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்காற்
சிறுதொழு மகளி ரஞ்சனம் பெய்யும்
பூப்போ லுண்கண் பொன்போர்த் தனவே”
துறை: தோழி வாயிலாக வந்தார்க்கு தலைவன் வரவையே நினைத்து தலைவியின் கண் பசந்தன எனக் கூறி வாயில் மறுத்தது.
விளக்கம்: உயர்ந்து தோன்றும் பூவையுடைய வேழத்தின் உள்ளே பொருந்திய திரண்ட தண்டு சிறிய தொழில் மகளிர் அஞ்சன மையிட்டு வைத்ததற்கு அமையும் பொலிவு நிறைந்த ஊரனை பலகாலும் நினைத்து அழகிய மையுண்ட கண் பசலையால் மூடப்பட்டன; இனியவன் அடையும் பயனில்லை.
(வேழம் – கரும்பு)
17
“புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குறுகிற் றோன்று மூரன்
புதுவோர் மேவல னாகலின்
வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே”
துறை: தலைவன் பரத்தையால் பிரிந்ததால் தோழி தலைவியை தேற்ற தலைவி தோழிக்குச் சொல்லியது.
விளக்கம்: பதரின் மேல் அசையாமல் நின்ற வேழத்தின் வெள்ளைப் பூப் போன்ற கண்ணின் தோற்றம் பறக்கும் குருகு போல தோன்றுகிற ஊரன் புற ஒழுக்கம் உளதாகிய துணையே அன்றி கனவில் வந்து நாள்தோறும் வருத்துதலை உடையவன் ஆதலால் என் நெஞ்சு பொறுமை இழந்து வருந்துகிறது.
(வேழம் – கரும்பு)
18
“இருஞ்சா யன்ன செருத்தியொடு வேழங்
கரும்பி னலமருங் கழனி யூரன்
பொருந்துமல ரன்னவென் கண்ணழப்
பிரிந்தன னல்லவோ பிரியலெ ன்றே”
துறை: பரத்தையிடமிருந்து வந்த தலைவன் மீண்டும் பரத்தையிடம் சென்று வர அவன் சார்பாக தூது வந்த வாயிலோர்க்கு தலைவி சொல்லியது.
விளக்கம்: கரிய தண்டான் கோரை போலும், பஞ்சாய் கோரையோடு வேழமானது கரும்பு போலச் சுழலும் வயல் ஊரன், இனி ஒருபோதும் பிரிய மாட்டேன் என்று சொன்ன தலைவன் பொருந்திய மலர் போலும் எனது கண் நீரைச் சொரிய பிரிந்தனன் அல்லனோ?
(வேழம் – கரும்பு)
19
“எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்மணங் கமழும் தண்பொழில்
வேழ வெண்பூ வெள்ளுளை சீக்கு
மூர னாகலிற் கலங்கி
மாரி மலரிற் கண்பனி யுகுமே”
துறை: பலநாள் படையெடுப்பு காரணமாக தலைவன் பிரிந்த போது ஆற்றியிருந்தாய். இப்போது சிலநாள்தான் புறத்தொழுக்கு காரணமாக பிரிந்தான் அதற்கு வருந்துகிறாயே என கேட்ட தோழிக்கு தலைவி சொல்லியது.
விளக்கம்: நீரின் இடையில் மணலிடத்தில் உள்ள மாமரத்தின் பெரிய. பூவினுடைய சினையானது (மகரந்தம்) வதுவை மகளிர் மெய் மணம் கமழும். அப் பூ அரும்பாகிய காலத்தில் வேழத்தின் பூ பூக்கும் ஊரன் ஆகலின் கலக்கமுற்று மாரிக் காலத்தில் மலர் நீரைச் சிந்தும் தன்மை போல என் கண்கள் நீரை சிந்தாமல் குளமாகி நிற்கிறது.
(வேழம் – கரும்பு
20
“அறுசில் கால வஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்குங்
காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்
துறைநணி யூரனை யுள்ளியென்
னிறையே ரெல்வளை நெகிழ்போ டும்மே”
துறை: தலைவன் பிரிதலால் கொடுமை செய்தவராயினும் அவரை மறக்கக் கூடாதென உரைத்த தோழிக்கு தலைவி சொல்லியது. – ainkurunuru padal vilakkam 2
விளக்கம்: ஆறு சிறிய கால்களையும் அழகிய சிறகுகளையும் உடைய வண்டினங்கள் நூறாகிய இதழ்களை உடைய தாமரை பூவில் இட்ட முட்டைகளை கெடுக்கும் மூங்கில் பொன்று முற்கள் அமைந்த வேழங்கள் அமைந்த துறையை உடைய ஊரனை நினைத்து என் கையில் அணியப்பட்ட அழகிய வளையல்கள் நெகிழ்ந்து அடிக்கடி கழன்று விடுகிறது.
– மா கோமகன்