ஐங்குறுநூறு பகுதி 1

ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா ஐந்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 1

பொருளடக்கம்

மருதம்

 1. வேட்கைப் பத்து
 2. வேழப் பத்து
 3. கள்வன் பத்து
 4. தோழிக்குரைத்த பத்து
 5. புலவிப் பத்து
 6. தோழிகூற்று பத்து
 7. கிழத்திகூற்று பத்து
 8. புலனாட்டுப் பத்து
 9. புலவி விராய பத்து
 10. எருமை பத்து

நெய்தல்

 1. தாய்க்குரைத்த பத்து
 2. தோழிக்குரைத்த பத்து
 3. கிழவற்குரைத்த பத்து
 4. பாணற்குரைத்த பத்து
 5. ஞாழற் பத்து
 6. வெள்ளாங்குருகு பத்து
 7. சிறுவெண்காக்கை பத்து
 8. தொண்டிப் பத்து
 9. நெய்தற் பத்து
 10. வளைப் பத்து

குறிஞ்சி

 1. அன்னாய் வாழி பத்து
 2. அன்னாய் பத்து
 3. அம்ம வாழிப் பத்து
 4. தெய்யோப் பத்து
 5. வெறிப் பத்து
 6. குன்றக் குறவன் பத்து
 7. கேழற் பத்து
 8. குரக்குப் பத்து
 9. கிள்ளைப் பத்து
 10. மஞ்சைப் பத்து

பாலை

 1. செலவழுங்குவித்த பத்து
 2. செலவு பத்து
 3. இடைச்சுரப்பத்து
 4. தலைவியிரங்கு பத்து
 5. இளவேனிற் பத்து
 6. வரவுரைத்த பத்து
 7. முன்னிலைப் பத்து
 8. மகட்போகியவழித் தாயிரங்கு பத்து
 9. உடன் போக்கின் கண் இடைச்சுரத்துப் பத்து
 10. மறுதரவுபத்து

முல்லை

 1. செவிலி கூற்றுப் பத்து
 2. கிழவன்பருவம் பாராட்டுப் பத்து
 3. விரவுபத்து
 4. புறவணிப் பத்து
 5. பாசறைப் பத்து
 6. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
 7. தோழி வற்புறுத்தப் பத்து
 8. பாணன் பத்து
 9. தேர்வியங்கொண்ட பத்து
 10. வரவுச் சிறப்பரைத்தப் பத்து

கடவுள் வாழ்த்து

“நீல மேனி வாலிழை பாகத்
தொருவ னிருதா னிழற்கீழ்
மூவகை யுலகு முகிழ்த்தன முறையே”

விளக்கம்: நீலமாகிய திருமேனியையும் ஒளி பொருந்திய ஆபரணத்தையும் உடைய இடபாகம் அமைந்த ஏக கர்த்தாவாகிய பரமசிவனின் இரண்டு பாதமாகி நிழலிடத்தை தஞ்சம் என்று கருதி மூவுலகிலும் வாழும் ஆன்மாக்கள் யாவும் முறையே சென்று கைகூப்பி வணங்குவன; எனவே யானும் அம் முறை செய்வேன்

பதம் பிரித்து செய்யுள்:

“நீல மேனி வாழிலை பாகத்து
ஒருவன் இரு தாளின் நிழல் கீழ்
மூவகை உலகு முகிழ்த்தன முறையே” – ainkurunuru padal vilakkam 1


மருதத்திணை

வேட்கைப் பத்து

இந்த பத்து பாடல்களில் வரும் ஆதன், அவினி என்பது சேரமன்னன் ஆதன் மகன் அவினி பற்றியதாகும். தந்தையையும் மகனையும் வாழ்த்துவதாக அமையும்.


 1. “வாழி யாதன் வாழி யவினி
  நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
  வெனவேட் டோளே யாயே யாமே
  நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
  யாண ரூரன் வாழ்க
  பாணனும் வாழ்க வெனவேட் டேமே”

துறை: புற ஒழுக்கத்தில் இருந்து தெளிந்த தலைவன் தலைவியோடு சேர எண்ணி தோழியோடு பேசிய போது, ‘நான் புற ஒழுகத்தில் இருந்தபோது நீங்கள் நினைத்தது என்ன?’ என வினவ, தோழி சொல்லியது.

விளக்கம்: அரசன் காவல் பொருட்டு வாழ்வானாக!
விருந்தினர்களை ஆற்றுப்படுத்துதற்காக நெற்பல பொலிக. இரவலருக்கு ஈவதற்காக பொன் உண்டாகுக என தலைவி இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகியதல்லது பிறிது ஒன்றை நினைத்திலாள். அவள் இத்தன்மையவளாக இருக்க நீ ஒழுகிய ஒருக்கத்தால் உனக்கும் உன் ஒழுக்கத்திற்கு துணையாகிய பாணனுக்கும் தீங்கு வரும் என்று அஞ்சி யாணரூரன் வாழ்க பாணனும் வாழ்க என விரும்பினோம் நாங்கள் – என்பது பொருள்
(யாணரூரன் – அழகானவன்)


02
“வாழி யாதன் வாழி யவினி
விளைக வயலே யருக விரவல
ரெனவேட் டோளே யாயே யாமே
பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்குந்
தண்டுறை யூரன் கேண்மை
வழிவழிச் சிறக்க வெனவேட் டேமே”

துறை: தோழி தலைவிக்கு சொல்லியது

விளக்கம்: தலைவி! அரசன் வாழ்வானாக; வயல் விளைவது ஆகுக; அதனால் இரவலர் இல்லாது போகுக; நாங்கள் பலவிதழ்களை உடைய காவி மலரோடு மாறு கொள்ளும் நெய்தல் மலர் பொருந்திய குளிர்ந்த துறைகள் பொருந்திய இவ்வூரனது உறவு மேலும் மேலும் வளர்வதாக என விரும்பினோம்.


03
“வாழிய யாதன் வாழிய யவினி
பால்பல வூறுக பகடுபல சிறக்க
வெனவேட் டோளே யாயே யாமே
வித்திய வுலவர் நெல்லொடு பெயரும்
பூக்கஞ லூரன் றன்மனை
வாழ்க்கை பொலிக வெனவேட் டேமே”

துறை: தோழி தலைவனிடம் சொல்லியது

விளக்கம்: அரசன் வாழ்வானாக; பால் மிக பெருகுக; பகடுகள் பலவாக சிறக்க என்று விரும்பினாள் தலைவி; நாங்கள் வித்தை வித்திய உழவர் விளைந்த நெல்லை கொண்டு போவோம் வளம் நெருங்கிய ஊரன் தனது மனை வாழ்க்கையிடத்து பொலிவானாக என விரும்பினோம்.
வித்திய வுழவர் நெல்லொடு பெயரும் பூக்கஞ லூரன் என்பதற்கு பரத்தையருக்கு பொருள் கொடுத்து பரத்தையருடன் இன்பம் நுகரும் ஊரன் எவ்வித குறையுமில்லாது தன் மனையிடத்தில் வாழ்வானாக என்பதாகும்
(பகடுகள் – எருமை மாடுகள்)


04
“வாழிய யாதன் வாழிய யவினி
பகைவர்புல் லார்க பார்ப்பா ரோதுக
வெனவேட் டோளே யாயே யாமே
பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு
பழன மாகற்க வெனவேட் டேமே”

துறை: தோழி தலைவனுக்கு சொல்லியது

விளக்கம் அரசன் வாழ்வானாக; பகைவர் புல்லுணவை உண்பாராக; பார்ப்பார் ஓதுவாராக என்று விரும்பினாள் தலைவி; நாங்கள் பூத்த கரும்பையும் காய்த்த நெல்லையுமுடைய கழனியையுடைய ஊரனது மார்பு சோலையல்ல வாகுக என்று விரும்பினோம்.

பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற் கழனியூரன் என்பதற்கு ஈன்றாற் பயன்படாத பொது மகளிரையும் ஈன்றாற் பயன்படுகின்ற குலமகளிரையும் ஒப்ப நினைப்பவன் என பொருளுமாகும்.
(ஈன்றாற் – குழந்தை பெற்றெடுத்தல்) 1. “வாழி யாதன் வாழி யவினி
  பசியில் லாகுக பிணிசே ணீங்குக
  வெனவேட் டோளே யாயே யாமே
  முதலைப் போத்து முழுமீ னாருந்
  தண்டுறை யூரன் றேரெம்
  முன்கடை திற்க வெனவேட் டேமே”

துறை: தோழி தலைவனுக்கு சொல்லியது

விளக்கம்: அரசன் வாழ்வானாக; பசியில்லாது போகுக; நோய் மிக தூரத்தே போவதாக என்று விரும்பினாள் தலைவி; நாங்கள் முதலை போத்தானது முழு மீனையுண்னும் குளிருந் துறையுடைய ஊரன் தேர் பிற மகளிர் முன் நிற்பதை ஒழித்து என் முன் நிற்க விரும்பினோம்.
(முதலை போத்து – ஆண் முதலை)


06
“வாழி யாதன் வாழி யவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
வெனவேட் டோளை யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்டுறை, யூரன் வரைக
வெந்தையுங் கொடுக்க வெனவேட் டேமே”

துறை: தான் வரையாது (மணம்செய்யாது) நாட்களை தள்ளி போட்ட போது தலைவியின் நிலை என்ன என தலைவன் கேட்க தோழி சொல்லியது.

விளக்கம்: நீ எதிர்பட்டு தலைவி பார்த்த போதே அவளை மணப்பாய் என எண்ணிக் கொண்டு, வீட்டில் இருந்து கொண்டு ஆதன் வாழி அவினி வாழி, அரசன் பகை தணிவானாக; எனக் கூறிக்கொண்டே தலைவி ஆண்டுகள் பலவாக காத்திருந்தாள்; நாங்கள் விரிந்த பொய்கையில் முகிழ்ந்த தாமரையை உடைய தண்டுறை ஊரன் ஆகிய நீ இவளை மணம் முடிக்க கேட்க எமது தந்தையும் மணம் முடித்து கொடுக்க வேண்டுமென விரும்புனோம்.


07
“வாழி யாதன் வாழி யவினி
யறநனி சிறக்க வல்லது கெடுக
வெனவேட் டோளே யாயே யாமே
யுளைப்பூ மருதத்துக் கிளைக்குரு கிருக்குந்
தண்டுறை யூரன் றன்னூர்க்
கொண்டனல் செல்க வெனவேட் டேமே”

துறை; சென்ற செய்யுள் துறையே இதுவும் இங்கும் தோழி சொல்லியது

விளக்கம்: தலைவி ஆதன் வாழ்க, அவினி வாழ்க, தருமம் மேன்மேலும் சிறக்க, பாவங் கெடுவதாக என்று விரும்பினாள்; யாங்கள் அகவிதழ் அழகிய பூவை
உடைய மருத மரத்தின்கண் நாரையினங்கள் இருக்கும் தண்டுறையூரன் தன்னூர்க்கு கொண்டு செல்வானாக என விரும்பினோம்.


08
“வாழி யாதன் வாழி யவினி
யரசுமுறை செய்க களவில் லாகுக
வெனவேட் டொளே யாயே யாமே
யலங்குசினை மாஅத் தணிமயி லிருக்கும்
பூக்கஞ லூரன் சூளிவண்
வாய்ப்ப தாக வெனவேட் டேமே”

துறை: 6 ம் செய்யுள் துறையே இதுவும் இங்கும் தோழி சொல்லியது

விளக்கம்: ஆதன் வாழ்க அவினி வாழ்க, அரசுமுறை செய்க, களவில்லாது போவதாக என விரும்பியொழிகினாள் தலைவி; நாங்கள் அசையாதிருக்கும் கொம்புகள் பொருந்திய மாமரத்தின்கண் அழகிய மயிலானது இருக்கும் அழகு நிறைந்த ஊரன் கூறிய வசனம் இவ்விடத்தில் வாய்ப்பதாக என விரும்பினோம்.


09
“வாழி யாதன் வாழி அவினி
நன்றுபெரிது சிறக்க தீதில் லாகுக
வெனவேட் டொளே யாயே யாமே
கயலார் நாரை போர்விற் சேக்குந்
தண்டுறை யூரன் கேண்மை
யம்ப லாகற்க வெனவேட் டேமே”

துறை – 6 ம் செய்யுளின் துறையே இதுவும் இங்கும் தோழி சொல்லியது

விளக்கம்: தலைவி ஆதன் வாழ்க, அவினி வாழ்க, நன்மை மிகவும் வளர்வதாகவும் தீமை சிறிதும் இல்லாது போவதாகவும் விரும்பி ஒழுகினாள்; நாங்கள் கயலாகி உணவை உண்கிற நாரை நெற்போர் இடத்து இராநின்ற தண்டுறை ஊரனிடை நம் உறவு வெளிப்படாது ஒழிவதாக என்று விரும்பினோம்.


10
“வாழி யாதன் வாழி யவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க
வெனவேட் டோளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
றண்டுறை யூரன் றன்னொடு
கொண்டனள் செல்க வெனவேட் டேமே”

துறை: 6 ம் செய்யுளின் துறையே இதுவும் தோரி சொல்லியது – ainkurunuru padal vilakkam 2.

விளக்கம்: தலைவி, அரசனாகிய ஆதன் வாழ்க, அவினி வாழ்க, மழை தப்பாது பெய்வதாக, அதனால் வளங்கள் மிகப் பெருகுவதாக என்று விரும்பி ஒழுகினாள். நாங்கள் பூத்த மாமரத்தையும் புலால் ஆகும் சிறு மீனையும் உடைய ஊரன் இங்கு வருவானாகின் தன் ஊருக்கு கொண்டு செல்வானாக என விரும்பினோம்.

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *