குறுந்தொகை பகுதி 1

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா ஐந்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 1

kurunthogai paadal vilakkam

செய்யுள் விளக்கம்

 1. இது கிட்டாதா எங்களுக்கு?
  பாடியவர்
  : திப்புத் தோளார்
  காவல் கடுமையாக உள்ள தலைவியை காண கையில் செங்காந்தள் மலர்கள் கொண்டு சென்ற தலைவனை பார்த்து தோழி சொல்லும் முறையில் அமைந்த குறிஞ்சித் திணைப் பாடல் இதோ:-

“செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே”

விளக்கம்: மலை நாட்டவனே! போர்களம் செந்நிறம் பொருந்தும் படியாக அசுரர்களை எல்லாம் கொன்று அழித்த ரத்தக்கறை படிந்த சிவந்த நீளமான அம்பையும், சிவந்த தந்தங்களை உடைய யானையையும் சுழலுகின்ற தோள் வளையையும் அணிந்த முருகன் வாழும் குன்றம் எங்கள் மலை. இரத்த நிறமுள்ள கொத்துகளை உடைய காந்தளை மிகுதியாக கொண்டிருக்கிறது.
கருத்து: காந்தள் மலர் எங்களுக்கு கிடைக்காத அரும்பொருள் அல்ல கிடைத்தற்கரிய பொருளைக் கொடுப்பதே ஒருவரை மகிழ்வூட்டும்.


 1. வண்டே! உண்மைச் சொல்
  பாடியவர்
  : இறையனார்
  இப்பாடல் தலைவியின் பண்பு, அழகு ஆகிய நலம் பாராட்டல் துறையை சார்ந்தது.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழியுமோ
பயிலியது கெழீஇய நட்பின், மயில்இயல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோநீ அறியும் பூவே”

விளக்கம்: தேனையே ஆராய்த்து தேடி உண்ணுகின்ற வாழ்க்கையையும், அழகான சிறகுகளையும் உடைய வண்டே! என் மீது கொண்ட அன்பினால் நடுநிலை தவறிச் சொல்லாமல் நீ நேரடியாக கண்டறிந்த உண்மையைச் சொல். பழக்கம் மிகுந்த நட்பினையும், மயில் போன்ற மென்மை தன்மையையும், நெருங்கிய பற்களையும் உடைய இந்த அரிவையின் தலைமயிரைப் போல மிகுந்த மணம் வீசுகின்ற மலர்களும், நீ கண்டறிந்த மலர்களிலே இருக்கின்றனவா?
(அரிவை – 20 முதல் 25 வயதிற்கு உட்பட்ட பெண்)
கருத்து: தலைவியின் கூந்தலை போல நறுமணம் கமழும் மலர்கள் ஒன்றும் இல்லை.

இப்பாடல் பற்றிய கதைகள் கல்லாடம், திருவாலவாயுடையார்
திருவிளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணம், சீகாளத்தி புராணம், கடம்பவன புராணம் ஆகிய நூல்களில் காணப்படுகிறது. அதாவது திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் கதை காட்சியே யாம். ஆனால் சங்க காலத்தில் இக்கதை வழங்கியதாக தெரியவில்லை.


 1. காதல் பெரிது
  பாடியவர்
  : தேவகுலத்தார்
  இப்பாடல் தலைமகளின் பெருந்தன்மை, உயர் தன்மைகளை உரைக்கும் குறிஞ்சித்திணை பாடல்.

“நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு
இன்றே; – சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன்
இழைக்கும் நாடனொடு நட்பே”

விளக்கம்: மலைப் பக்கத்திலே உள்ள கருமையான கிளைகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு, மிகுந்த தேனை வண்டுகள் சேர்கின்ற மலை நாட்டை உடைய தலைவனுடன் நான் கொண்டிருக்கும் காதல் இந்த உலகத்தைக் காட்டிலும் அகலமானது; வானத்தை விட உயரமானது. கடல் நீரைக் காட்டிலும் ஆழமானது.
கருத்து: தலைவி தலைவனிடம் கொண்ட காதல் இணை சொல்ல முடியாத பெருமை உள்ளது.


 1. அவர் இல்லையே
  பாடியவர்
  : காமஞ்சேர் குளத்தார்
  இது தலைவனை பிரிந்திருக்கும் தலைவியின் துக்கத்தை காட்டும் நெய்தல் திணைப் பாடல்

“நோம்என் நெஞ்சே, நோம்என் நெஞ்சே
இமைதீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த காதலர்,
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே”

விளக்கம்: என் நெஞ்சம் துன்புறுகிறது; இமையை சுட்டு கருக்கும் போன்ற கண்ணீரை என் கண்ணில் கண்டால், அதனை துடைத்து, அன்புடன் பேசி மகிழ்வதற்கு அன்பமைந்த நம் காதலர் இப்பொழுது இங்கு அமைந்திராமல் பிரிந்திருத்தலை எண்ணியெண்ணி, என் நெஞ்சு வருந்துகிறது.
கருத்து: தலைவர் பிரிந்து சென்றார் என் அருகில் இல்லை ஆதலால் என் உள்ளம் வருந்துகின்றது.


 1. துக்கத்தால் தூக்கம் இல்லை
  பாடியோர்
  : நரிவெரூஉத்தலையார்
  இது தலைவனை பிரிந்து உறையும் தலைவியின் துன்பத்தைப் பிரிவாற்றாமையை கூறும் நெய்தல் திணைப் பாடல்

“அதுகொல் தோழி காம நோயே!
வதிகுருகு உறங்கும் இன்நிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்;
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவே”

விளக்கம்: தோழியே! தன்னிடம் தங்கியிருக்கும் நாரைகள் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற இனிய நிழலை உடைய புன்னை மரம், கரையில் மோதி உடைகின்ற அலைகளின் துளிகள் தெறிப்பதால், மலர்கள் அரும்புகின்ற, பார்வைக்கு இனிமையாக காணப்படும் நீர்ப்பரப்புள்ள மெல்லிய கடற்கரையை உடைய தலைவன், நம்மை விட்டு பிரிந்து போய் விட்டான். பல இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற என்னுடைய மையுண்ட கண்கள் இமையோடு இமை பொருந்துவதற்கு சம்மதிக்கவில்லை.
கருத்து; தலைவன் பிரிந்த துக்கத்தால் எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை நான் தூங்க நினைத்தும் என் கண்கள் உறங்க மறுக்கின்றன – kurunthogai paadal vilakkam 1


 1. உலகமே உறங்குகின்றது
  பாடியவர்
  : பதுமனார்
  தலைவன் பிரிவால் தூங்காமல் இருக்கும் தலைவி, தன் துக்கத்தை தோழியிடம் கூறும் நெய்தல் திணைப் பாடல்.

“நள்என்றன்றே யாமம், சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள், முனிவுஇன்று
நனம் தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதானே”

விளக்கம்: தோழியே! நிறைந்த இருட்டை உடையதாயிற்று இந்த நடுஇரவு. அனைவரும் சொல் அடங்கி, சுகமாக தூங்கி விட்டனர். சிறிதும் வெறுப்பில்லாமல் இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களும் தூங்குகின்றன. ஒருத்தியாகிய நான் மட்டும் உறுதியாக தூங்காமல் இருக்கின்றேன்.
கருத்து: எல்லோரும் உறங்கும் நடுச் சாமத்திலும் என்னால் உறங்க முடியவில்லை. விழித்துக் கொண்டிருக்கிறேன்.


 1. இவர்கள் யாரோ?
  பாடியவர்: பெரும்பதுமனார்
  களவு மணம் பூண்ட காதலர்கள் கற்பு மணம் புரிய உற்றார் உறவினரை விட்டு பிரிந்து சென்ற வழியில் கண்டவர்கள் என்ன பேசினார்கள் என்பதைச் சொல்லும் பாலைத் திணைப் பாடல் இது:-

“வில்லேன் காலன கழலே, தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர்
யார்சொல்? அளியர் தாமே; ஆரியர்
கயிராடு பறையின் கால்பொராக் கலங்கி
வாகை வெண்நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னியோரே”

விளக்கம்: வில்லை உடையவனாகிய இவனுடைய கால்களிலே இருக்கின்ற வீரக் கண்டா மணிகள், வளையல்கள் அணிந்த இவளுடைய மெல்லிய பாதங்களுக்கு மேல் அணிந்திருப்பன சிலம்புகளேயாகும்.
ஆரியக் கூத்தாடிகள் கயிற்றின் மேல் ஏறி நின்று ஆடுகிற போது அடிக்கின்ற பறை ஒலியைப் போல, காற்று மோதுவதினால் அசைந்து வாகை மரத்தின் வெண்மையான நெற்றுகள் ஒலிக்கின்றன மூங்கில்கள் நிறைந்த இப்பாலைவனத்தை அடைந்தவர், நல்லவராகிய இவர்கள் யாவரோ? இவர்கள் மிகவும் இரக்கப் படுவதற்கு உரியவர்கள் தாம்.
கருத்து: மணம் புரிந்து கொள்ளாமல் தனித்துச் செல்லும் இவர்களுடைய நிலைமை இரங்கதக்கதாகும்.


 1. பெண்ணுக்கு ஆண் அடக்கம்
  பாடியவர்
  : ஆலங்குடி வங்கனார்
  தன்னிடமிருந்து பிரிந்து மீண்டும் இல்லம் சேர்ந்த தலைவனை பரத்தை ஒருத்தி இகழ்ந்து சொல்லியதாக அமைந்த மருதத்திணைப் பாடல்:-

“கழனி மாத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்,
எம்மில் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன்புதல்வன் தாய்க்கே”

விளக்கம்: வயல்களுக்கு பக்கத்திலுள்ள மாமரத்திலிருந்து, விளைந்து நன்கு கனிந்து விழுகின்ற இனிய பழங்களை, வயல்களில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும் ஊரை உடைய தலைவன், எம்முடைய இல்லத்தில் இருந்தபோது, எம்மை தம் வசமாக்கக் கூடிய பெரிய மொழிகளை எல்லாம் சொல்லி சென்றவன், இப்போது தம்முடைய வீட்டிலே, எதிரில் நிற்பவர் தம் கை காலைத் தூக்க தானும் அதுபோலவே கண்ணாடியில் காணப்படும் நிழற்பாவையைப் போல தன் மனைவிக்கு அவள் விரும்பிவற்றை எல்லாம் செய்வான்.
கருத்து: தலைவன் தன் மனைவிக்கு பயந்து அவள் சொல்லுகிறபடி எல்லாம் ஆடுகிறான்.

“யாய் ஆகியளே! மாஅ யோளே!
மடைமாண் செப்பில் தமிய வைஇய
பொய்யாப் பூவின் மெய் சாயினளே!
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இரும்கழி ஓதம் மல்குதொறும்
கயம்மூழ்கும் மகளிர் கண்ணின் மானும்
தண் அம் துறைவன் கொடுமை
நம்முன் நாணிக் காப்பு ஆடும்மே”


 1. கற்புள்ள காதலி
  பாடியவர்
  : கயமனார்
  மனைவியை பிரிந்து பரத்தை வீட்டில் தங்கி இருந்த தலைவன் மனைவியுடன் சேர அவளது தோழியை தூது செல்ல வேண்டிய போது தோழி சொல்லியதாக அமைந்த நெய்தல் திணைப் பாடல் :-

விளக்கம்: எம்தலைவி அன்னை போல கற்பிலே சிறந்து நிற்கின்றாள். மாந்தளிர் போன்ற நிறத்தை உடையவள். சிறந்த மூடியுள்ள குடத்தினுள் தனியாக இருக்கின்ற சூட்டிக் கொள்ளாத மலர்களை போல உடல் மெலிந்தாள். பசுமையான இலைகளுக்கு மேல் காணப்படும் திரண்ட காம்புகளை உடைய நெய்தல் மலர்கள் கூட்டமான மீன்கள் நிறைந்த நீர்ச்சுழியிலே மூழ்கி எழுவது,
குளத்தில் மூழ்கி எழுந்திருக்கும் பெண்களின் கண்களைப் போல காணப்படும் குளிர்ந்த நீர்த்துறைகளின் தலைவனின் பிரிவுக் கொடுமையை சொல்வதற்கு வெட்கமடைந்து வேறு மொழிகளை பேசிக் கொண்டிருப்பாள்.
கருத்து: தலைவன் கொடுமையை தலைவி மறந்து அவனை ஏற்றுக் கொள்வாள் இத்தகைய சிறந்த கற்புடையவள் தலைவி.


 1. கற்புள்ள காதலி
  பாடியவர்
  : ஓரம்போகியார்
  இதுவும் முன்பாடல் கருத்தைக் கொண்டது. பரத்தை வீட்டிலிருந்து வந்த தலைவனுக்கு தோழி தூது செல்ல இணங்கிய மருதத் திணைப் பாடல் இது:

“யாய் ஆகியளே விழவு முதலாட்டி
பயிறுபோல் இணர பைம்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின் நாணிய வருமே”

விளக்கம்: தலைவியே தலைவனின் சிறப்பிற்கு காரணமானவள். பயிறு போன்ற பூங்கொத்து களின் மகரந்தங்கள் உடம்பில் படும்படியாக உழவர்கள் வளைத்த வாசனை கமழும் மலர்கள் நிறைந்த மெல்லிய கிளையை உடைய காஞ்சி மரங்கள் நிறைந்த ஊரின் தலைவன் பிரிந்து செய்த கொடுமையை வெளியில் சொல்லாமல் மறைத்தாள் ஆதலால் தலைவன் நாணும்படி அவனை வரவேற்க தானே முன் வருகிறாள் – kurunthogai paadal vilakkam 1
கருத்து: தலைவி, தலைவன் செய்த கொடுமையை மறந்து அவனை வரவேற்கின்றாள்

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...

1 Response

 1. கு.ஏஞ்சலின் கமலா says:

  நன்று.. பாராட்டுகள். நல்ல விளக்கம்