ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 2
முதல் வாரத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் இரண்டாம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam2
பாடல் – 06
“தூடண மாகச்சொல் லாதே – தேடும்
சொத்துக்க ளிலொரு தூசும் நில்லாதே!
ஏடணை மூன்றும் பொல்லாதே – சிவத்து
இச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே”
விளக்கம்
மனமே! நீ பாடுபட்டுத் தேடுகின்ற எந்தவொரு பொருளும், சொத்தும், ஒரு தூசு அளவுகூட உன்னிடம் தங்கி இருக்காமல் ஓடிவிடும்: ஆகவே நீ செருக்கு கொண்டு யாரையும், எந்த பொருளையும் குறைவாக மதிக்கவோ, பழித்து பேசவோ கூடாது. மேலும் நீ விரும்பும் காமம், சினம், பொருளாசை என்னும் மூன்றும் உனக்குத் தீமையே செய்யுமென்பதை உணர்க! நீ சிவக்கடவுளிடம் பற்று வைத்தால் பேரின்ப வீடே கிடைக்கும்: கொடுமை செய்யும் எமன் உலகம் உனக்கு வாய்க்காது!
பாடல் – 07
“நல்ல வழிதனை நாடு – எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு!
வல்லவர் கூட்டத்தில் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு”
விளக்கம்
மனமே! நீ யாருக்கும் ஒரு தீவினையும் செய்யாதே. நீ அறிவாளர் செல்கின்ற நல்ல வழிகளை கடைப்பிடித்தே வாழ்க! எந்நாளும் கடவுளை விரும்பி நினைந்து, உனக்குள்ளே தேடுக! அன்பும் அறிவுமுடைய வல்லவர் திருக்கூட்டத்திலேயே சேர்ந்து கலந்து பழகுக! அந்த கடவுளாகிய அருள் வழங்கும் வள்ளலேயே நெஞ்சிற் கொண்டு போற்றி வாழ்த்தி இன்புறுக – kaduveli siddhar padalgal vilakkam-pagam2.
பாடல் – 08
“நல்லவர் தம்மைத்தள் ளாதே – அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே – கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்தவிள் ளாதே”
விளக்கம்
மனமே! நீ நல்லொழுக்கமுடைய நேர்மையாளரை நீக்கீவிடாமல், நட்பு கொண்டு முன்னேறுக! சான்றோர் வகுத்துரைத்த (4 x 8 = 32) முப்பத்திரண்டு அறங்களிலே இயன்ற ஒன்றையாவது விரும்பிச் செய்க! தள்ளிவிடாதே! தீய எண்ணமோ செயலோ எந்தவொன்றையும் மேற் கொள்ளாமல் இருப்பாயாக. பிறருக்கும் தீமைதரும் பொய்யைச் சொல்லுதலும், கோள்மூட்டுதலும் கூடவே கூடாது
முப்பத்திரண்டு அறங்கள்
ஏழைகளுக்கு அறசாலை அமைத்தல், ஓதும் தமிழ் வாணர்க்கு உணவளித்தல், ஆறுசமயத்தவர்க்கும் உணவளித்தல், பசுவுக்கு உணவு தருதல், சிறையில் சோறளித்தல்,இரவலருக்கு வேண்டியது கொடுத்தல், குழந்தைகளுக்கு பால் கொடுத்தல், மகப்பேறுக்கு உதவுதல், கைவிடப்பட்ட குழந்தை வளர்த்தல், பிணம் சுட உதவுதல், மருந்து கொடுத்தல், தண்ணீர் பந்தல் வைத்தல், மடம், குளம், சோலை முதலியன அமைத்தல், விலங்குகளுக்கு உணவளித்தல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்வித்தல், மரம் நடுதல் போன்ற இன்ன பிறவும்
பாடல் – 09
“வேத விதிப்படி நில்லு – நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லும்!
சாதக நிலையிலே சொல்லு – பொல்லாச்
சண்டாளக் கோபத்தை சாதித்துக் கொல்லு!”
விளக்கம்
மனிதமனமே! மறை நூலில் கூறப்பட்ட அறநெறிகளிலேயே நடந்து வாழ்க! சான்றோர் போற்றும் இனிய வழியை விரும்பியே கடைப்பிடித்து செல்லுக! யாருக்கும் நன்மை கிடைக்கும் முறையிலேயே எதையும் சொல்லுக; அழிவையே தரும் கீழ்மைத்தனமான சினத்தை அடக்கிக் கொல்லவே வேண்டும்.
பாடல் – 10
“பிச்சையென்று ஒன்றும் கேளாதே – எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே
இச்சையது உன்னை ஆளாதே – சிவன்
இச்சைகொண்டு அவ்வழி ஏறிமீ லாதே”.
விளக்கம்
மனமே! உறுதி கொள்க! நீ யாரிடமும் சென்று இரந்து பொருளைக் கேட்டு வாங்காதே! (அவரே விரும்பி கொடுப்பதைப் பெற்றுக் கொள்க) அழகு பெண்ணின் மேல் காம ஆசைக் கொண்டு அதன் மிகையால் அழிந்து போகாதே! வாழ்விலே விழைவு என்பதும் ஆசை என்பதும் உன்னை அடிமைப்படுத்தி விடக்கூடாது. நீ சிவனாகிய இறைவனிடமே வேட்கை கொண்டு, அவ்வழியே அவனையடைய முன்னேறிச் செல்ல வேண்டும்; பின்னடையக் கூடாது.
– கோமகன், சென்னை
“பிச்சை யென்று ஒன்றும் கேளாதே” என்ற பாடல் வரிகளின் விளக்கம்
அருமை அய்யா
மிகவும் அருமை.. பல பாடல்கள் சித்தர்கள் இயற்றியது என்பது தாங்கள் பதிவிடும் போது தான் தெரிகிறது…செவி வழியாக கேள்விப்பட்டவை..
சான்றோர்கள் வழிகாட்டிய பாதையை
சந்தோசமாக பின்பற்றி நடப்போம் நாமும்…!!!
வேல்…