மகா சிவராத்திரி மகிமை

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும் Maha Shivaratri.

மஹாசிவராத்திரி என்பது ஆதியோகி சிவனின் இரவு. இயற்கையின் வரமாய் அமைந்திருக்கும் இந்நாளில் இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு, இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும்.

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

  1. நித்திய சிவராத்திரி
  2. மாத சிவராத்திரி
  3. பட்ச சிவராத்திரி
  4. யோக சிவராத்திரி
  5. மகா சிவராத்திரி

 ஐதீகங்கள்

இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.

அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.


வழிமுறைகள் [maha shivaratri]

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது நூறு அசுவமேத யாகம் செய்வது பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும்இ ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.

ஆலய வழிபாடு

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்ட சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.

அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.

மகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.

மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.

கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம். பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ சர்வ ஈசான பசுபதி உக்ர ருத்ர பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன் வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். வில்வ இலைகளை கோயில்களுக்கும் வழங்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ ருத்ர பசுபதி நீலகண்டா மகேஸ்வரா ஹரிகேசா விருபாக்ஷா சாம்பு சூலினா உக்ராபீமா மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும் சிவத்துதிகளைச் சொல்லியும் சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

சிவபாதம் அடைவது

சிவ ராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பார் என்பதே மக்களின் நம்பிக்கை.

இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள்.

You may also like...