நாலடியார் (27) நன்றியின் செல்வம்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-27
பொருட்பால் – இன்பவியல்
27. நன்றியின் செல்வம்
செய்யுள் – 01
அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று”
விளக்கம்: தான் வாழும் மரத்திற்கு அருகில் அதிக பழங்களை கொண்டதாக தடித்த அடிமரத்தை உடைய விளாமரத்தை வௌவால் நெருங்காது. அதுபோல தாம் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இருப்பவராயினும் பெருமையிலாதார் செல்வம் ‘அவர் தருவார்’ என ஏழைகள் நினைக்கத் தக்க தன்மை உடையது அன்று.
செய்யுள் – 02
அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்”
விளக்கம்: அள்ளிக் கொள்வது போலச் சிறிய அரும்புகளை உடையது ஆனாலும் அவை சூடிக் கொள்வதற்கு ஏற்றவை அல்லாமையால், யாரும் கள்ளி மரத்தின் மீது கை நீட்ட மாட்டார்கள். அதுபோல, மிகபெரும் செல்வம் உடையவர் ஆனாலும் அவர் செல்வம் பயன்படாமையால் கீழ்மக்களை அறிவுடையோர் சேர மாட்டார்கள்.
செய்யுள் – 03
“மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்
வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பார்
செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை”
விளக்கம்: மக்கள் அலைகளையுடைய கடற்கரையில் இருந்தாலும், தோண்ட தோண்ட சுரக்கும் உப்புச்சுவை இல்லாத கிணற்றைத் தேடி சென்று தம் தாகம் தணிக்க நீர் பருகுவர். அதுபோல ஈயாதாரை விட்டு தூரத்தில் சென்று உதவுகின்றவர்கள் இடத்தில் விரும்பி கேட்டு பெறுவர்.
செய்யுள் – 04.
“புணர்கடல்சூழ் வையத்து புண்ணியமோ வேறே
உணர்வ துடையா ரிருப்ப – உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து”
விளக்கம்: கடல் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்திற்கு உரிய புண்ணியம் அறிவிற்குரிய புண்ணியத்தை விட வேறானது. எவ்வாறெனில் அறிவுடையார் ஒரு பொருளும் இல்லாமல் வறுமையுற்று இருக்க, கறி முள்ளியும், கத்திரியும் போன்ற விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்தி வாழ்வர். (கறி முள்ளியும் கத்தரியும் பறிப்பவரை முள்ளால் குத்தும் என்பதை உணர்த்துகிறது)
செய்யுள் – 05
“நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம் தொல்லை
வினைப்பய னல்லது வெனெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்”
விளக்கம்: இவ்வுலகில் நல்ல அறிவுடையோரும், குணமுடையோரும் வறியவராக இருப்பர். அவ்வறிவும் குணமும் அற்ற கீழோர் செல்வராக இருப்பதற்கு காரணம் பழைய நல்வினைப் பயனேயன்றி வேறு காரணம் இல்லை.
செய்யுள் – 06
“நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்
நீராய் நிலத்து விளியரோ – வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து”
விளக்கம்: நல்ல நறுமணமற்ற புற இதழைப் போல , நல்ல தாமரை மலரிலே இருக்கும் அழகான பதுமை போன்ற திருமகளே! நீ பொன் போன்ற நல்ல குணமுடைய மேன் மக்களை விட்டு விட்டு கீழ்மக்களையே சேர்கிறாய் இது முறை தானோ?
செய்யுள் – 07
“நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ
பயவார்கட் செல்வம் பரம்பப் பயின்கொல்
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு நிலை”
விளக்கம்: வேல் போன்ற கண்ணை உடையவளே! பிறர்க்கு உதவும் குணங்கள் உள்ளோரிடத்தே இருக்கும் வறுமைக்கு வெட்கம் இருக்காதோ? ஒருவருக்கும் நன்மை செய்யாத கீழ்மக்களிடம் உள்ள செல்வம் அவர்களை விட்டு நீங்காமல் பிசின் போல ஒட்டிக் கொள்வதும் ஏனோ? இத்தன்மைகளை கண்டு நீயும் வியப்பாயாக!
செய்யுள் – 08
“வலவைக ளதல்லார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர் வலவைகள்
காலாறுஞ் செல்வார் கருணையால் துய்ப்பவே
மேலாறு பாய விருந்து”
விளக்கம்: வெட்கம் உள்ளவர்கள் வறுமை உற்றபோது காலாற நடந்து சென்று அங்கங்கு பெறும் உணவை உண்டு காலத்தை கழிப்பர். வெட்கம் அற்றவர்கள் அவ்வாறு நடந்து செல்லாமல் வீட்டிலிருந்தே உண்பர் ஏனெனில் பிறர்க்கு தம் செல்வத்தை தராததால் வறுமை அடைய மாட்டார்கள்.
செய்யுள் – 09
“பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து”
விளக்கம்:பொன் போன்ற நிறமுடைய செந்நெல் கதிருடன் வாடியிருக்க, மின்னல் விளங்கும் மேகமானது அங்கு பெய்யாமல் கடலிலே மழையாக பெய்வது போல, அறிவற்றவர் பெற்ற செல்வமும் அத்தன்மையானது ஆகும்.
செய்யுள் – 10
“ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார் தூய்தாக
நரகூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்ல
நல்கூர்ந்தார் ஈயா ரெனில்”
விளக்கம்: உலக இயல்பு அறியும் அறிவில்லாதவர் கற்றவரே ஆயினும் கல்லாதவரே ஆவர்..உலக இயல்பு அறியும் அறிவுடையவர் கல்லாதவரே ஆயினும் கற்றவரே. வறுமை உற்றாலும், மனம் தூயவராய் இருந்தால், பிறரிணம் இரவாத செல்வரே ஆவர். ஆனால் செல்வம் உடையவர் ஈயார் எனில் வறியவரே என வழங்கப்படுவர் – naladiyar seiyul vilakkam-27.
– கோமகன்