நாலடியார் – நிறைவு பகுதி (40) காமநுதலியல்
ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-40
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம்.
வாசகர்கள் மற்றும் ஆசிரியருக்கு நீரோடையின் மனமார்ந்த நன்றிகள்
காமத்துப்பால் – இன்பவியல்
40. காமநுதலியல்
செய்யுள் – 01
“முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம் வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப
புல்லா புலப்பதோர் ஆறு”
விளக்கம்: கடலலைகள் ஓயாது மோதுவதற்கு இடமான நீண்ட கழிகளனது குளிர்ச்சி பொருந்திய கரைகளை உடைய அரசனே! கணவருடன் கூடிப் புணராவிடில் மேனி எங்கும் பசலை படரும். ஊடி வருந்தாவிடில் காதலானது கலை இல்லாமல் போகும். எனவே முதலில் கூடி பின் ஊடுவதும் காதல் நெறியாம்.
செய்யுள் – 02
“தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்மு முயங்குந் துணையில்லார்க் – கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.
விளக்கம்: நம்மால் விரும்பப்படும் தலைவருடைய மாலை அணிந்த அழகிய மார்பை உடம்பு பூரிக்க தழுவும், அத்தலைவனை பிரிந்த மகளிருக்கு ‘இம்’ என்னும் ஒலியுடன் மேகம் நீரைப் பொழிய திக்குகள் எல்லாம் எழும் அவ்வோசை சாப்பறை போன்றிருந்தது.
செய்யுள் – 03
“கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று”
விளக்கம்: மிக வருந்தி வேலை செய்யும் கம்மாளரும், வேலையை நிறுத்தி கருவிகளை எடுத்து வைக்கும் மாலை நேரத்தில் மலர்களை ஆய்ந்தெடுத்து மாலையாக தொடுத்து, அம்மாலையை கையில் வைத்திருக்கும் தலைவன் இல்லாத மகளிருக்கு மாலையால் என் பயன் தரும் என வருந்தி அழுதனள்.
செய்யுள் – 04
“செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் – மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து”
விளக்கம்: சூரியன் மறையும் மாலை நேரத்தை கண்டு வருந்தி, செவ்வரி பரந்த கண்கள் கொண்ட நீரை மெல்லிய விரல்களால் எடுத்தெறிந்து விம்மி அழுது, தன் மெல் விரல்களால் நான் பிரிந்து சென்ற நாட்களை கணக்கிட்டு, படுக்கையில் தன் தோளையே தலையணை ஆக கொண்டு படுத்து, நான் வராத குற்றத்தை எண்ணுவாளோ?
செய்யுள் – 05
“கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல் – பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து”
விளக்கம்: சிறிய மீன் கொத்திப் பறவை கண்களை கயல் என்று கருதி என் மனைவி பின் சென்றது. அப்படிச் சென்றும், ஊக்கத்துடன் முயன்றும் அவளுடைய ஒளி பொருத்திய புருவத்தை வில்லின் வளைவு என்று எண்ணி கண்களை கொத்தாமல் விட்டு விட்டது.
செய்யுள் – 06
“அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றினஙகொல்லோ – அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்
றஞ்சிப்பின் வாங்கும் அடி”
விளக்கம்: செவ்வாம்பல் போன்ற வாயையும், அழகிய இடையையும் உடைய என் மகள், முன்னர், செம்பருத்திக் குழம்பை பாதத்தில் பஞ்சினால் தடவிய போது மெல்ல மெல்ல என காலை பின்னுக்கு இழுத்துக் கொள்வாள். அந்தோ! அந்தப் பாதங்கள் பரற் கற்கள் பொருந்திய பாலை வழியை எவ்வாறு தாங்கினவோ? (தலைவனுடன் சென்ற தலைவியை நினைத்து தாய் வருந்திக் கூறியது).
செய்யுள் – 07
“ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பலிந்திட் டழுதாள் வனமுலைமேற்
கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து”
விளக்கம்: ஓலையிலே எழுதும் கணக்கரின் ஓசை ஒழியும் படியான மாலை நேரத்தில் தலைவன் பிரிதலை நினைத்து, மாலையை கழற்றி வீசி எறிந்து, அழகிய கொங்கைகளில் பூசப்பட்டிருந்த சந்தனக் குழம்பை உதிர்த்துத் தள்ளி, துன்புற்று அழுதாள்(தலைவன் பிரிவால் தலைவி வருந்தியது)
செய்யுள் – 08
“கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி சுடர்த்தொடீஇ
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு”
விளக்கம்: ஒளி பொருந்திய வளையளை உடையவளே! கடந்து போவதற்கு அரிய பாலை வழியிலே காளை போன்ற நின் காதலனுடன் நடந்து செல்லும் ஆற்றல் உடையாயோ? என்று தானே கேட்கின்றாய்? ஒருவன் ஒரு குதிரையை எப்போது பெற்றானோ அப்போது அதில் ஏறிச் செல்லும் ஆற்றலையும் கற்றவன் ஆவான். ஆதலால் காதலன் பின் செல்லுதல் அரிதன்று.
செய்யுள் – 09
“முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
தீம்பாவை செய்த குறி”
விளக்கம்: முலைக் காம்புகளும் முத்து மாலையும் உடல் முழுதும் அழுந்த தழுவிக் கொண்ட காரணத்தை அப்போது நான் அறியேன். தாமரைப் பூவில் உறையும் திருமகளைப் போன்ற என் மகள், மான் கூட்டங்கள் புலிக்கு அஞ்சும் பாலை வழியில் என்னை விட்டு பிரிந்து காதலனுடன் செல்வதற்கு தான் அப்படி அன்பாக தழுவிக் கொண்டாளோ?
(தலைவனுடன் சென்ற தலைவியை எண்ணி தாய் கூறியது)
செய்யுள் – 10
“கணமூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் – பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி”
விளக்கம்: பொன் போன்ற தேமல் பொருந்திய, கோங்க மலரைப் போன்ற முலைகளை உடைய தோழி! முக்கண்ணனான சிவபெருமானும் காக்கை பறவையும், படமெடுத்த பாம்பும், என்னைப் பெற்ற தாயும் எனக்கு என்ன குற்றம் செய்தனர். அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. பொருளாசையால் என் தலைவன் பிரிந்த வழியே எனக்கு குற்றம் செய்தது.
நாலடியார் மூலமும் எளிய உரையும் முற்று பெற்றது……
– மா கோமகன்